தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலிங்கோத்பவர்

 • இலிங்கோத்பவர்

  முனைவர் வே.லதா,
  உதவிப்பேராசிரியர்,
  சிற்பத்துறை.

  புராணப் பின்னணி :

  லிங்கோத்பவர்

  இலிங்கோத்பவர், இலிங்க புராண தேவர், சந்திரசேகரர் (சந்திரனைத் தலையில் சூடியவர்) இலிங்க புராணத்தின் நாயகர் என்றெல்லாம் போற்றப்படுபவர். சந்திரசேகரர் அல்லது இலிங்கோத்பவர் படிமத்தில் விஷ்ணு மற்றும் பிரம்மன் ஆகியோர் இணைந்து காணப்படுவர். சந்திரசேகரர் படிமமானது. இலிங்கத்திலிருந்து தோன்றிய படிமமாகும். இப்படிமம் தொடையினளவு இலிங்கத்திலிருந்து வெளியில் தோன்றும். சதுர்புஜங்களைப் பெற்றிருக்கும் (நான்கு கரங்கள்) முன்னிரு கைகள் அபயம் மற்றும் வரதம் தரித்திருப்பார். பின் கரங்கள் மான் மற்றும் மழுவினைத் தாங்கியிருப்பார். பிரம்மன் அன்னப் பறவை (ஹம்ஸம்) வடிவிலும், விஷ்ணு (வராகம்) பன்றி வடிவிலும் அமைக்கப்பட்டிருக்கும்.

  இலிங்கோத்பவர் படிமம் சிவலிங்கத்துடன் இணைந்து காணப்படுகிறது. சந்திரசேகரமூர்த்தியின் இப்படிமம் இலிங்கத்திலிருந்து வெளிவந்ததாகும். இதனால் இப்படிமம் “இலிங்கோத்பவர்” எனப்படுகிறது.

  விஷ்ணு, யுகத்தின் முடிவில் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த போது அவரின் காதுக்கருகில் வந்து பிரம்மன் தோன்றி பிரபஞ்சத்தை உருவாக்கியது தாம் தான் என்று தமக்குத் தாமே பெருமைப்பட்டுக் கொண்டு விஷ்ணுவை நோக்கி யார் நீ என்று வினவினார். அனந்தசயனனாகிய விஷ்ணு யோக நித்திரையிலிருந்து மீண்டு தாம் பிரபஞ்சத்தைக் காத்திடும் தொழிலினை மேற்கொண்டவர் என்பதைச் சுட்டிக்காட்ட தாம் தான் உலகின் முதல்வர், பெரியவர் என்று கூறினார்.

  இவ்வேளையில் இருவருக்கும் இடையில் ருத்ரனாகிய சிவன் பேரொளியின் பிழம்பாக, பிழம்பின்தூணாக, அக்னிக் கொழுந்தாக, வானுக்கும், பூமிக்கும் இடைவெளியில்லாத கண்களைப் பறிக்கும் ஒளியின் உருவாகத் தோன்றினார். தூண் வடிவில் உயர்ந்து நிற்கும் இவ்வடிவத்தின் அடியினையும், முடியினையும் காண்போரே பெரியவர் என்று கூறி அக்னி பிழம்பு வடிவில் (ஸ்தானக) நிலையில் நின்றார். இவ்வடிவத்தின் தலைப் பகுதியைக் (முடி) காண்பதற்காகப் பிரம்மன் அன்னப் பறவையாக மேல் நோக்கிப் பறந்து சென்றார். அடியினைக் (பாதம்) காண்பதற்காக விஷ்ணு, வராக வடிவில் பூமியைத் துளைத்துக் கொண்டு கீழ்நோக்கிச் சென்றார். பல காலங்கள் கழிந்தும் அடியினையும், முடியினையும் காண இயலாமல் திரும்பி வந்தனர். பிரம்மன் மேல் நோக்கி பறந்த வேளையில் வழியில் வந்த கேடகி பூ (தாழம்பூ) பிரம்மனின் பொய்யுரையைக் கேட்டு, பிரம்மன் (சிவனின்) ருத்ரனின் தலையைக் கண்டதாகப் பொய்யுரைத்ததால் ருத்திரனின் சாபம் பெற்றார். சிவபூஜையில் கேடகி பூவிற்கு (தாழம்பூ) அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இருவரும் தங்களது தவறினை உணர்ந்தனர்.

  ருத்திரன், சந்திரசேகரர் வடிவில் இலிங்கத்திலிருந்து தோன்றிய வடிவாகையால் இலிங்கோத்பவர் என்றழைக்கப்படுகிறது.

  சான்றுகள் :

  இலிங்கபுராணம், கூர்மபுராணம், சுப்ரபேதாகமம், அம்சுமத்பேதாகமம், காரணாகமம் ஆகியவைகளில் இதனைப் பற்றி விளக்கப்பட்டுள்ளன.

  படிமக்கலை :

  இலிங்கத்தின் ஐந்தில் ஒரு பகுதி மேலும், கீழும் செதுக்கப்படாமல் இப்படிமம் அமைந்திருக்கும். சந்திரசேகரரின் முழங்காலின் அளவிற்குக் கீழாக செதுக்கப்படாமலிருக்கும். வலது மேல் பகுதியில் பிரம்மன் அன்னப் பறவை (ஹம்ஸம்) வடிவில் பறந்தவாறு அமைந்திருக்கும். இலிங்கோத்பவரின் கீழ் இடது புறம் விஷ்ணு பன்றி வடிவில் பூமியை நோக்கி துளைத்துச் செல்வது போல அமைந்திருக்கும். சந்திரசேகரரின் படிமம் நான்கு (சதுர்புஜம்) கரங்கள் பெற்றிருக்கும். பின்கரங்களில் மான் மற்றும் மழுவும், பிடித்திருக்கும். முன் இடது மற்றும் வலது கரங்களில் அபயம் மற்றும் வரதம் தரித்திருக்கும். இலிங்கோத்பவரின் படிமக் கலைக்கூறினைப் பல்வேறு சிற்ப சாஸ்திரங்கள் விளக்குகின்றன. சிலவற்றில் பிரம்மன் மற்றும் விஷ்ணு இருவரும் வணங்கிய நிலையில் காணப்படுவர். அன்னம் (ஹம்ஸம்) மற்றும் பன்றி (வராஹம்), பாதி மனித வடிவினதாகவும், பாதி விலங்குவடிவினதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருமெய்யக் குடவரையில் (பாண்டியர்) முன் இடது கை கட்டிய வலம்பித ஹஸ்தத்தில் தொடையில் வைத்தவாறு (ஊரு) அமைந்திருக்கும்.

  வரலாற்றுச் சிறப்பு :

  இலிங்கோத்பவர் படிமம் பாண்டியர் குடவரை திருமெய்யம், பிள்ளையார் பட்டி, மற்றும் பல்லவர்களின் கோயில்கள் காஞ்சி கைலாசநாதர் கோயில், சோழர் கால கோயில்கள், கீழப்பழுவூர், புள்ளமங்கை, திருவாவடுதுறை, ஆடுதுறை, தஞ்சாவூர், திருச்செங்காட்டங்குடி, நாகை, சோழபுரம், தாராசுரம், திருவக்கரை ஆகிய இடங்களில் பல்வேறுபட்ட காலங்களிலும் போற்றப்பட்டு வந்ததுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:06:26(இந்திய நேரம்)