தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒன்பான் கோள்கள்

 • ஒன்பான் கோள்கள்

  முனைவர் கி.கந்தன்,
  துறைத்தலைவர்,
  சிற்பத்துறை.

  வரலாற்று பின்புலம் :

  ஆதித்தியர்களைச் சூரியன் உள்ளிட்ட சந்திரன், பூமா அல்லது அங்காரகன் அல்லது செவ்வாய், புதன், சுக்கிரன், பிரகஸ்பதி எனப்படும் வியாழன், சனி, ராகு மற்றும் கேது ஒன்பான் கோள்கள் (நவக்கிரகங்களாக) வழிபடப்படுகிறது. இவ்வழிபாடு கலை வரலாற்றில் இருந்ததற்கான சான்றுகள் புத்தர் காலத்திலிருந்தே கிடைக்கப்பெறுகின்றன. இருப்பினும் நவக்கிரகங்களை ஒரு சேர வழிபடும் தனித்துவக் கோயில்கள் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் குலோத்துங்க சோழ மார்த்தாண்ட ஆலயம் என்ற வரலாற்றுப் பெயரில் அமைக்கப்பட்டது. இத்தலம் இன்று சூரியனார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கி.பி 11 ஆம் நூற்றாண்டில் சண்டேள ஆட்சியாளர்களால் ஒடிசா மாநிலம் கோனார்க் என்ற இடத்தில் சூரியனுக்கு என்று தனிக்கோயில் உருவாக்கப்பட்டது. பல்லவர்கள் மற்றும் சோழர்களின் கற்றளிகளில் உயரமான மேடை மீது நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பான் கோள்கள் வைக்கப்பட்டன. இவை அமைக்கப்பட்டுள்ள முறை என்பது குறிப்பிட்ட அவ்வாலயம் கட்டப்படும் நிலையில் வான மண்டலத்தில் ஒன்பான் கோள்கள் அமைந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் அக்கோயில்களில் இப்படிமங்கள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஓர் கருத்து நிலவுகிறது. இருப்பினும் இது ஏற்புடையதா என்பதை ஆய்வாளர் திரு.கோபிநாதராவ் என்பவர் வினவியுள்ளார்.

  ‘அம்சுமத் பேதாகமம்’ மற்றும் ‘சுப்ர பேதாகமம்’ சூரியனின் படிமம் இரு கைகளுடன் அவற்றில் தாமரை மலரை ஏந்தி அமைக்கப்பட வேண்டும். ஏந்தப்பட்ட தாமரை மலர் சூரியன் படிமத்தின் தோள் வரையிலும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். தலையின் பின்பகுதி ‘காண்டி மண்டலம்’ என்ற ஒளிவட்டம் அமைந்திருக்க வேண்டும். தலையில் கரண்ட மகுடத்துடன் அமைக்கப்படும் இப்படிமத்தின் காதுகளில் குண்டலங்களும், கழுத்தில் ஆரமும், மார்பில் யக்ஞோபவீதமும் அமைக்கப்பட வேண்டும். சூரியனின் இடது மற்றும் வலது புறங்களில் பிரத்தியுக்ஷா மற்றும் உஷா என்ற இரு தேவிகள் இருந்திட வேண்டும். சூரியன் வலம் வரும் தேர் ஒற்றைச் சக்கரத்துடன் ஏழு குதிரைகள் பூட்டப்பட்டு அருணன் என்ற தேரோட்டி தேரினை ஓட்டுவது போல் காட்டப்பட வேண்டும்.

  சூரியன் :

  ஆதித்தியர்கள் என்பவர் இந்தியாவின் தொன்மையான கடவுளர்கள் ஆவார். வேதங்களில் குறிப்பிடப்படும் இவர்கள் எட்டு அல்லது பன்னிருவர் என்று சடபாத பிராமணம் குறிப்பிடுகிறது.

  சூரியன்

  அதிதியின் மகன்களான இவர்களின் தோற்றம் தொடர்பாக புராணங்கள் மாறுபட்ட பின்னணியை விளக்கியுள்ளன. இதில் சூரியன் வழிபாடு தொடர்பாக Archaeological Survey of Mayurabhanja - சான்றுகளின் அடிப்படையில் நாகேந்திரநாத் வாசு என்பவர் ‘மகர்கள்’ (Magas) இந்தியாவில் சூரிய வழிபாட்டை தோற்றுவித்தவர் என்றும், இதற்கான சான்றுகள் ‘பம்பஜால சுக்த்தம்’ என்ற பாலி மொழி இலக்கியத்தில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பவிஷய புராணம் ஸ்ரீகிருஷ்ணனின் மகனான சாம்பா என்பவன் தொழு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சூரியனை வழிபட்டு நலம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், தீயினை வழிபட்ட ஜொராஸ்டியர்கள் என்ற மக்களின் வாயிலாகச் சூரிய வழிபாடு இந்தியாவில் உருப்பெற்றுது என்று நாகேந்திரநாத் வாசு குறிப்பிட்டுள்ளார்.

  தமிழகத்தில் சூரிய வழிபாடு என்பது சங்ககாலம் தொட்டு நிலவி வந்த ஓர் இயற்கை வழிபாடு ஆகும். குறிப்பாக, சிலப்பதிகாரத்தில் “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” எனத் தொடங்கும் வாழ்த்துப் பாடல் இவ்வழிபாட்டிற்குச் சான்றாக அமைகிறது.

   

  புதன் :

  புதன் என்னும் இக்கோள் ‘தாரா’ அல்லது ரோகிணியின் வாயிலாகச் சந்திரனுக்கு மகனாகப் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. கிரகப்பதி என்று கூறப்படும் புதனின் படிமம் சிம்ம வாகனத்திலும் அமைக்கப்படலாம். மஞ்சள் வண்ணப் படிமத்தில் மஞ்சள் வண்ண ஆடை அலங்காரங்கள் அமைக்கப்பட வேண்டும்.

  புதன்

  இப்படிமத்தின் நான்கு கைகளில் முன் வலது கை வரத முத்திரையிலும், எஞ்சிய கைகளில் கட்கம், கேடயம் மற்றும் கதை இருந்திட வேண்டும் என்று சில்ப ரத்தின நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘விஷ்ணு தர்மோத்திரம்’ என்னும் நூல் புதனின் படிமம் விஷ்ணுவின் தோற்ற அமைதியுடன் அமைக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளது. பன்னிரண்டு ராசிகளில் மிதுனம் மற்றும் கன்னி ராசியுடன் இக்கோள் தொடர்புபடுத்தப்படுகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவெண்காடு கோயில் இக்கோளுக்குரிய கோயில் ஆகும்.

  செவ்வாய் :

  செவ்வாய்

  பூமா அல்லது ‘அங்காரகன்’ அல்லது செவ்வாய் என்று அழைக்கப்படும் செவ்வண்ணம் கொண்ட இக்கோள் சிவன் தியானத்திலிருந்தபோது பூமியில் சிந்திய வியர்வையிலிருந்து தோன்றியது. பூமி வளர்த்ததால் பூமா என்ற பெயரினைப் பெற்றது எனப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய் என்று அழைக்கப்படும் ஒன்பான் கோள்களில் ஒன்றான இப்படிமம் நான்கு கைகளுடன் அமைந்திட வேண்டும். முன் வலக்கை அபயம் மற்றும் வரத முத்திரையுடன் முன் இடக்கை சக்தி ஆயுதங்கள் தரித்து பின் கைகளில் கதை மற்றும் சூலம் தாங்கி, செவ்வண்ண ஆடை தரித்ததாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்று சில்ப ரத்தின நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. பன்னிரண்டு ராசிகளில் மேஷம் மற்றும் விருச்சக ராசியுடன் செவ்வாய் தொடர்புபடுத்தப்படுகிறது. நாகை மாவட்ட வைத்தீஸ்வரன் கோயிலில் அங்காரகன் எனப்படும் செவ்வாய்க்கு சிறப்புப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

  சந்திரன் :

  நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்த நிலையில் சந்திரன் இடம்பெறுகிறது. ‘சந்திரா’ என்னும் சொல் மின்னுதல் அல்லது ஜொலித்தல் என்ற வகையில் பொருள் கொள்ளப்படுகிறது. வேத காலத்தில் வழிபாட்டிலிருந்த ‘சோமா’ என்ற கடவுளோடு சந்திரன் இணைப்படுத்தப் படுகிறது. தேவர்கள் திருப்பாற்கடலில் அமிர்தம் வேண்டி கடைந்த பொழுது அதில் ஜொலித்திடும் தன்மையுடன் தோன்றியதால் ‘சந்திரன்’ என்ற பெயர் பெற்று வான மண்டலத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று புராணங்கள் கூறுகின்றன. அடுத்ததாக தட்சனின் இருபத்து ஏழு நட்சத்திரங்களான பெண்களை சந்திரன் மணம் முடித்த நிலையில் இவர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரியான அன்பினைச் செலுத்திட வேண்டும் என்ற தட்சனின் கட்டளையிலிருந்து சந்திரன் முரண்பட்டதன் விளைவாக தட்சன் அளித்த சாபத்தினால் சந்திரன் வளருதல், தேய்தல் என்ற இரு நிலைகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

  சந்திரன்

  அம்சுமத் பேதாகமம் சந்திரனின் படிமம் நின்ற நிலையிலோ அமர்ந்த நிலையிலோ அமைக்கப்படலாம் என்றும், இரு கைகளுடன் அமைக்கப்படும் இப்படிமத்தில் குமுத மலர் இருந்திட வேண்டும் என்றும், வெண்மை நிறத்துடன், சந்திரனின் மார்பு பகுதியில் யக்ஞோபவீதம் இடம் பெறவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பூர்வ காரணாகமம் இடப்பகுதியில் ரோகிணி என்ற தேவி இடம் பெறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. பன்னிரண்டு ராசிகளில் ரிஷபம் மற்றும் கடக ராசியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூர் என்ற இடத்தில் அமைந்துள்ள ஆலயம் சந்திரனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டதாகும். இவ்வாலயம் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்தனால் கட்டப்பட்டதாகும்.

  வியாழன் :

  வியாழன் (குரு)

  வடமொழியில் ‘பிரகஸ்பதி’ என்று அழைக்கக்கூடிய வியாழன் ஒன்பான் கோள்களில் ஒன்றாகும். வேத காலக் கடவுளான இக்கோள் தேவ குரு என்று அழைக்கப்படுகிறது. (சுக்கிரன் – அசூர குரு) ரிக் வேதத்தில் இக்கோள் அங்கிரஸ் ரிஷியின் மகனாகக் கருதப்படுகிறது. இப்படிமத்தின் நான்கு கைகளில் முன், வலது மற்றும் இடக்கை வரத முத்திரையுடனும் அக்க மாலையுடனும் இருந்திட வேண்டும். பின் கைகளில் கமண்டலமும் தண்டமும் இருந்திட வேண்டும். மஞ்சள் வண்ணத்துக்குரிய இப்படிமம் எட்டுக் குதிரைகள் படிமங்கள் பூட்டப்பட்ட வெள்ளித்தேரில் இருந்திடலாம் என்று விஷ்ணு தர்மோத்திரம் கூறுகிறது. பன்னிரண்டு ராசிகளில் தனூர் (தனுசு) மற்றும் மீன ராசிகள் வியாழனுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகோயேஸ்வரர் கோயில் வியாழன் அல்லது குருவுடன் தொடர்புடைய கோயில் ஆகும்.

  வெள்ளி (சுக்கிரன்) :

  சுக்கிரன்

  ஒன்பான் கோள்களில் வெள்ளி என்பது வடமொழியில் சுக்கிரன் எனப்படுகிறது. சுக்கிரன் என்ற சொல் வெண்மையைக் குறிப்பதாகும். அசுரர்களின் குருவாகிய இக்கோள் பிருகு முனிவரின் மகனாகக் கருதப்படுகிறது. வீனஸ் என்று அழைக்கப்படும் கோளுடன் இணைப்படுத்தப்படும் சுக்கிரன் வாரக் கிழமைகளில் வெள்ளி கிழமையின் அதிபதியாகக் கருதப்படுகிறது. பன்னிரண்டு ராசிகளில் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. சுக்கிரனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோயில் நாகை மாவட்டத்தில் கஞ்சனூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. சுக்கிரனின் படிமம் வியாழனைப் போன்று நான்கு கைகளுடன் அமைக்கப்படவேண்டும் என்று சில்ப நூல்களில் காணப்படுகிறது.

  சனி :

  சனிசரண்

  சனி என்ற இக்கோள் நவக்கிரகத்தின் ஏழாவது கோளாக அமைகிறது. ‘சனீச்சரன்’ என்று அழைக்கப்படும். இக்கோளின் இயக்கம் மந்தமாக அமைந்திருப்பதால் ‘ஏச்சரன்’ என்ற பின் ஒட்டு இக்கோளின் பெயரில் இடம்பெற்றுள்ளது. இது சூரியன் மற்றும் சாயாவின் கருதப்படுகிறது. எனவே, இக்கோள் ‘சாயா புத்திரர்’ என்று அழைக்கப்படுகிறது. சனிக்கோளின் மனைவி ‘நீலா தேவி’ எனக் கருதப்படுகிறது. காகம் இதன் வாகனம் ஆகும். சனீஸ்வரன் கருப்பு வண்ணம் கொண்டதாகவும், காலின் அமைப்பு சற்றே முடம் உள்ளதாகவும், இரண்டு கைகளுடன் வலது கையில் தண்டம் மற்றும் இடது கையில் வரத முத்திரை இடம் பெற்றிருக்கலாம் என்று விஷ்ணு தர்மோத்திரம் குறிப்பிட்டுள்ளது. பன்னிரு இராசிகளில் மகரம் மற்றும் கும்ப ராசிகள் சனியின் தொடர்பு பெற்ற ராசிகளாகும். திருநள்ளாறு என்ற ஊரில் அமைந்துள்ள திர்பாதணயேசுவரர் கோயில் சனி வழிபாட்டிற்குரியத் தலமாகும்.

  ராகு மற்றும் கேது :

  இராகு

  ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்கள் நவக்கிரங்களில் சாயா கிரகம் அல்லது நிழல் கிரகம் எனப்படுகிறது. இதில் ராகுவின் தோற்றம் இடுப்பு வரையில் மனித உடலும் அதன் கீழ்ப் பகுதி பாம்பின் உடல் பெற்று அமைந்துள்ளது. கேதுவின் உருவம் இதற்கு மாற்றாக மேல் பாதி பாம்பின் உடலும் கீழ்ப் பகுதி மனித உடலும் பெற்றுள்ளது.

  கேது

  தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த பொது ராகு மற்றும் கேது யாருக்கும் தெரியாமல் அமிர்தத்தை விழுங்க முற்பட்ட நிலையில் மோகினியினால் அடையாளம் காணப்பட்டு இவர்களின் தவறுகளுக்காக இத்தகைய வடிவத்தை அமைந்திடச் சாபம் பெற்றனர். பன்னிரண்டு ராசிகளில் இக்கோள்களுக்கு தொடர்பு காணப்படவில்லை. இவற்றின் படிமங்கள் இரண்டு கைகளுடன் அமைக்கப்பட வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் என்னும் கோயில் ராகுவுடன் தொடர்புடைய கோயில் ஆகும். நாகை மாவட்டம் சாயாவனம் என்ற கோயில் கேதுவுடன் தொடர்புடையது ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:07:36(இந்திய நேரம்)