தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • திருத்தொண்டத் தொகை

  முனைவர் இ.அங்கயற்கண்ணி
  பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
  இசைத்துறை

  அறிமுகம்:

  ஏழாம் திருமுறையில் சுந்தரர் பாடிய 39 ஆவது பதிகம் திருத்தொண்டத்தொகை என்னும் தலைப்பில் வழங்கப்படுகிறது.

  பதிகம் எழுந்த சூழல்:

  திருவாரூர் கோவிலில் தேவாசிரியன் மண்டபத்தில் சிவனடியார்கள் கூடியிருந்த போது, சுந்தரமூர்த்தி சுவாமிகள் இப்பதிகத்தைப் பாடினார். “தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” எனத் தொடங்கும் முதற் பாடலடியைச் சிவபெருமானே எடுத்துக் கொடுக்க, அவர் திருவருளால் சுந்தரர் பாடத் தொடங்கினார். தேவாசிரியன் மண்டபத்தில் இருந்த அடியார்களின் தனித்தனி அடியேனென்று வைத்துப் பாடி தொகையடியாரையும் பாடித் திருத்தொண்டர் தொகையை முடித்தார். இதில் கூறிய முறையிலேயே சேக்கிழார் பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார் வரலாற்றை வகுத்து விரிவு செய்தார்.

  பதிக அமைப்பு:

  ஒவ்வொரு பாடலின் இறுதி வரியும், “ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே” என்று நிறைவடைகிறது. 1 முதல் 9 பாடல்களில் சுந்தரர் 63 நாயன்மார்களையும் பாடி அவர்களுக்குத் தாம் அடியேன் என்று பாடுகிறார். பத்தாம் பாடலில் தாம் எல்லோருக்கும் அடியேன் எனப் பாடுகின்றார்.

  இப்பதிகத்தில் இடம் பெற்றுள்ள அறுபத்து மூன்று நாயன்மார்களின் பெயர்கள் வருமாறு.
  1. அதிபத்தர்
  2. அப்பூதி
  3. அமர்நீதி
  4. ஆனாயர்
  5. இசைஞானி
  6. இடங்கழி
  7. இயற்பகை
  8. இளையான் தன் குடிமாறன்
  9. உருத்திர பசுபதி
  10. எறிபத்தர்
  11. ஏயன்கோன் கலிக்காமன்
  12. ஏனாதி நாதன்
  13. ஐயடிகள் காடவர்கோன்
  14. கணநாதர்
  15. கணம் புல்ல நம்பி
  16. கண்ணப்பர்
  17. கலயன்
  18. கலிக்கம்பன்
  19. கலியன்
  20. கழல்சத்தி
  21. கழறிற்றறிவார்
  22. கழற்சிங்கன்
  23. களந்தைக் கோசி
  24. கறைக்கண்டன்
  25. காடவர்கோன்
  26. காரி
  27. குறும்பர்
  28. கோட்புலி
  29. சடையன்
  30. சண்டிப்பெருமாள்
  31. சாக்கியர்
  32. சிலச்சிறை
  33. சிறப்புலி
  34. சிறுதொண்டர்
  35. செருத்துணை
  36. சோமாசிமாறன்
  37. தண்டி
  38. தாயன்
  39. தார்நம்பி
  40. திருக்குறிப்புத் தொண்டர்
  41. திருநாவுக்கரையன்
  42. திருநாளைப்போவார்
  43. திருநீலகண்டர்
  44. திருநீல கண்டத்துப் பாணனார்
  45. திருமூலன்
  46. நமிநந்தி
  47. நரசிங்க முனையரையர்
  48. நின்றசீர் நெடுமாறன்
  49. நின்றவூர்
  50. நீலநக்கர்
  51. புகழ்ச்சோழர்
  52. புகழ்த்துணை
  53. பூசல் நாயனார்
  54. பேயார்
  55. மயிலை வாயிலான்
  56. மானக்கஞ்சாறன்
  57. முருகன்
  58. மூர்க்க நாயனார்
  59. மூர்த்தி
  60. மெய்ப்பொருள்
  61. விரிஞ்சையர்கோன்
  62. விரல்மிண்டர்
  63. வேல்நம்பி முனையடுவார்.

  இப்பதிகத்தின் பத்தாம் பாடலில்,

  பத்தராய்ப் பணிவார்கள் எல்லாருக்கும் அடியேன்
  பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
  சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
  திருஆரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
  முப்போதும் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
  முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
  அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

  என்றவாறு அடியார்களுக்கெல்லாம் தாம் அடியேன் என்று பாடியுள்ளார்.

  முடிவுரை:

  அடியார்களின் பட்டியலை 9 பாடல்களில் குறிப்பாகக் காட்டியிருப்பதால் இப்பதிகம் திருத்தொண்டர் தொகை என்று அழைக்கப்படுகிறது. இப்பதிகமே பெரியபுராணம் எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்தமையால் திருத்தொண்டத்தொகை தமிழிசைத் துறையில் முக்கியத்துவம் பெறுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:09:57(இந்திய நேரம்)