தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இசைப்பேரறிஞர் திருப்பாம்புபுரம் சோ.சண்முகசுந்தரம்

 • இசைப்பேரறிஞர் திருப்பாம்புபுரம் சோ.சண்முகசுந்தரம்

  முனைவர் செ.கற்பகம்
  உதவிப் பேராசிரியர்
  இசைத்துறை

  பிறப்பு:

  திரும்பாம்புபுரம் இசை மரபில் தோன்றிய சண்முகசுந்தரம் அவர்கள் திருவீழிமிழலையில் சோமசுந்தரம் பட்டம்மாள் தம்பதியினருக்கு மகனாக 20.05.1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடன் உடன் பிறந்தவர்கள் ஆறு பேர் தனது இசைக்கு வாரிசு வந்துவிட்டது என்று எண்ணி இவரது தந்தையார் மிகுந்த அன்போடு இவர்களை வளர்த்து வந்தார்.

  பள்ளிப்படிப்பு:

  சண்முகசுந்தரம் திருவீழிமிழலையில் தொடக்கப் பள்ளிப்படிப்பையும், விஷ்ணுபுரத்திலும், கும்பகோணத்திலும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் கற்றார்.

  இசைக்கல்வி:

  சண்முகசுந்தரம் தனது பெரியப்பா டி.என்.சுவாமிநாத பிள்ளையிடமும், சித்தப்பா டி.என்.சிவசுப்ரமணியம் பிள்ளையிடமும், தந்தையிடமும் இசைப் பயிற்சிப் பெற்றார். இவரது இசை அரங்கேற்றம் இவரின் பன்னிரண்டாவது வயதில் திருவலஞ்சுழியில் நடைபெற்றது.
  சண்முகசுந்தரத்தின் தந்தை சுவாமி மலை நாகசுரப் பயிற்சிப் பள்ளியில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இங்கு பயில வருவோர்க்கு சண்முகசுந்தரம் இசையியல் பயிற்சியும், சாகித்தியப் பயிற்சியும் அளித்தார். மேலும் பழனியில் நாகசுரப் பயிற்சிப் பள்ளி தொடங்கிட உதவி புரிந்தார்.

  சென்னை வருகை:

  பழனியில் நாகசுரப்பள்ளியில் சில ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு அரசு இசைக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். சென்னை வந்து தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பயின்றார். சங்கீதவித்வான் பட்டம் பெற்றார். தமிழிசைக் கல்லூரியில் பயின்று “இசைமணி” பட்டமும் பெற்றார். மேலும், சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இசை ஆசிரியர் பட்டம் பெற்றார். பிறகு பி.சாம்பமூர்த்தி அவர்களால் நடத்தப்பட்டு வந்த சங்கீத வாத்யாலயா நிறுவனத்தில் இசை பட்டயம் படித்துப் பட்டம் பெற்றார்.
  நெடிய இசை மரபில் தோன்றிய சண்முகசுந்தரம் இயற்கையிலேயே இசைஞானமும், கம்பீரமான குரல்வளமும் பெற்றிருந்தார். இந்த இசை ஞானத்தை அயராத பயிற்சியின் மூலம் மேன்மேலும் செம்மையாக்கிக் கொண்டார். சென்னையில் படித்துக் கொண்டிருந்த பொழுது 1926 ஆம் ஆண்டு கோடம்பாக்கத்தில் “சரஸ்வதி கர்நாடக இசைப்பள்ளி” என்ற இசைப் பள்ளியை நிறுவினார். இருபது ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக இந்நிறுவனத்தை நடத்தி வந்தார்.

  இசை ஆசிரியர்கள்:

  திருப்பாபுரம் சோ.சண்முகசுந்தரம்

  சண்முகசுந்தரம் அவர்கள் இசைக்கல்லூரியில் படிக்கும்போது முசிறி சுப்பிரமணிய ஐயர், தஞ்சை டி.பிருந்தா, டி.எம்.தியாகராஜன், பி.சாம்பமூர்த்தி, எம்.எம்.தண்டபாணி தேசிகர், மதுரை சோமசுந்தரம், சிதம்பரம் எஸ்.ஜெயராமன், குடந்தை ப.சுந்தரேசனார் போன்றோரிடம் இசையின் வளங்களையும், நுட்பங்களையும், திட்பங்களையும் கற்றார்.

  முனைவர் பட்டம் பெறுதல்:

  சண்முகசுந்தரம் முனைவர் பட்ட ஆய்வையும் மேற்கொண்டார். “கீர்த்தனை இயல்” என்கிற பொருளில் ஆய்வு மேற்கொண்டார். முனைவர்.வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார்.

  ஆசிரியப் பணி:

  இவர் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். மாணவர்கட்குக் கற்றுத்தருவதில் மிகுந்த நாட்டம் கொண்டார். 1962 ஆம் ஆண்டு பேராசிரியராகப் பதவி உயர்வுப் பெற்றார். இவர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தீட்சிதர் கீர்த்தனையை மாணவர்களுக்கு எளிமையாக கற்றுக்கொடுத்தார். இம்முறையை அறிந்த இக்கல்லூரியின் முதல்வர் முசிறி சுப்பிரமணிய ஐயர் இவரைப் பெரிதும் பாராட்டினார்.

  தமிழிசையில் ஈடுபாடு:

  பிறமொழிப் பாடல்களைக் கற்றுக்கொடுக்க வல்லராகத் திகழ்ந்த போதும், தமிழிசையின் மீது ஈடுபாடு கொண்டு கீதம், வர்ணம், கீர்த்தனைகளை தமிழிலேயே மாணவர்களுக்குக் கற்பித்தார். தமிழ்க் கீர்த்தனைகளை மேடைகள் தோறும் பாடி வந்தார். ஆய்வரங்குகளில் செயல்முறை விரிவுரைகளைத் தந்தார். இவரின் கம்பீரமான குரலும், எடுத்துரைக்கும் பாங்கும் பலரையும் கவர்ந்தன.

  வகித்த பதவிகள்:

  சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தபோது, மதுரை இசைக் கல்லூரியிலும் சென்னை இசைக் கல்லூரியிலும் முதல்வராகப் பணிபுரிந்தார். 2000 ஆம் ஆண்டு முதல் சென்னைத் தமிழிசைச் சங்கத்தில் இயக்குனராகவும், பண்ணாராய்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளராகவும் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். அகில இந்திய வானொலி நிலையத்தில் ‘ஏ’ கிரேடு கலைஞராகவும் விளங்கினார். தமிழிசையின் வளத்தை வெளிநாடுகளிலும் பரப்பினார். தமிழிசைப் பரப்பும் தூதர்போல் இவர்தம் வெளிமாநில பயணங்கள் அமைந்திருந்தன.

  பட்டங்கள்:

  இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதினையும், சென்னைத் தமிழிசைச் சங்கத்தில் இசைப் பேரறிஞர் விருதினையும் பெற்றார். மேலும் பல்வேறு அமைப்புகள் தந்த இசைக் கலைச்செல்வர், இசைநற்கலைஞர், தமிழ்ப் பண்ணிசைப்பாணர், திருப்புகழ் மாமணி போன்ற விருதினையும் பெற்றார்.
  இவர் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்தார். தமிழ்நாட்டில் பல்வேறு இசைக் கல்லூரிகள் மற்றும் இசைப்பள்ளிகள் தொடங்குவதற்கு இவர் முக்கியப் பணியாற்றினார்.

  இசைப்படைப்புகள்:

  சண்முகசுந்தரம் அவர்கள் தமிழிசை நுணுக்கம், தமிழிசைப் பயிற்சிக்கலை களஞ்சியம், சீர்காழி மூவர் பாடல்கள், தேவார மூவர் பாடல்கள் போன்ற நூற்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றில் தமிழிசைப் பயிற்சிக் கலை களஞ்சியம் இசைப்பயிலும் மாணவர்களுக்குச் சிறந்த இசை இயல் நூலாக விளங்கி வருகின்றது.
  மேலும், சீர்காழி மூவர் பாடல்கள், நமச்சிவாயக் கண்ணி, வேதநாயகம் பிள்ளை பாடல்கள், தமிழ்வர்ணங்கள், கீதங்கள், மரபுப் பாடல்களை பல்வேறு ஒலிநாடாவின் மூலம் வெளியிட்டுள்ளார்.

  சீர்காழியில் தமிழிசை மூவர் விழா:

  இவரது பெரும்பணிகளில் ஒன்று ஆண்டுதோறும் முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவிராயருக்காக சீகாழியில் சீகாழி மூவர் இசை விழாவினை நடத்தினார். தொடக்க நிலையில் அன்பர்கள் உதவியோடு இவ்விழாவை நடத்தினார். பின்பு தமிழக அரசின் சார்பில் மூன்று நாள் விழாவை நடத்தினார். தற்பொழுது சீகாழியில் திறந்து வைக்கப்பட்டுள்ள “சீகாழி மூவர் மணிமண்டபம்” தோன்றிட இவரும் துணைபுரிந்தார். திருவையாற்றில் தியாகராசர் ஆராதனை விழா நடப்பதுபோல் சீகாழி மூவர் இசை விழாவை நடத்தி பெரும் வெற்றியும் பெற்றார்.

  மறைவு:

  சண்முகசுந்தரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு 18.05.2010 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
  திருப்பாம்புபுரம் இசை மரபில் தோன்றிய சண்முகசுந்தரம் தன் வாழ்நாளில் இசையில் பெரும் சாதனையைச் செய்தார். தமிழிசைப் பாடல்களை மேடை தோறும் முழங்கி, அவற்றைப் பாடத்திட்டமாக வகுத்துப் பல்வேறு இசை நிறுவனங்கள் தோன்றவும், பண்ணராய்ச்சிப் பணிகள் திறம்பட நடக்கவும், சீர்காழி மூவர் இசை விழா ஆண்டுதோறும் நடத்திடவும் ஆக்கமும் ஊக்கமும் செய்த இசைப் பேரறிஞர் சோ.சண்முகசுந்தரத்தின் வாழ்வு தமிழிசை வாழ்வு என்று கூறும் அளவிற்குத் திகழ்ந்தது. சீர்காழி மூவர் பாடல்கள் போற்றும் இடமெங்கும் இவரது நினைவு நம்முன்வரும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:10:47(இந்திய நேரம்)