தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • நாகசுர சக்கரவர்த்தி டி.என்.இராசரத்தினம் பிள்ளை

  முனைவர் செ.கற்பகம்
  உதவிப் பேராசிரியர்
  இசைத்துறை

  ஆலய வழிபாட்டில் மங்கல வாத்தியக்குழு என்ற ஒரு குழு உள்ளது. மங்கல வாத்தியம் என்பது நாகசுர இசைக் குழுவினைக் குறிக்கும். மங்கல வாத்தியமான நாகசுரத்திற்குப் பெருமைத் தேடித் தந்த கலைஞர்கள் பலர். அவர்கள் நாகசுர சக்கரவர்த்தி என்று போற்றப்பட்டவராகத் திருவாவடுதுறை என்.இராசரத்தினம் பிள்ளை அவர்கள் திகழ்ந்தார். இவரை நாகசுர சக்கரவர்த்தி என்றும், திருவாவடுதுறையார் என்றும், டி.என்.ஆர் என்றும் சிறப்பாக அழைப்பார்.

  டி.என்.இராசரத்தினம் பிள்ளை

   

  பிறப்பும், இசைப்பயிற்சியும்:

  இராசரத்தினம் பிள்ளை அவர்கள் குப்புசாமி பிள்ளை கோவிந்தம்மாளுக்கு மகனாக 27.08.1898 ஆம் ஆண்டு திருவாவடுதுறையில் பிறந்தார். இவரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியனாகும். இவருக்கு தயாளு என்ற தமக்கையும் இருந்தனர். இவர் தனது தமக்கையுடன் இணைந்து திருக்கோடிக்காவல் பிடில் கிருஷ்ணையரிடம் வாய்ப்பாட்டுப் பயிற்சிப் பெற்றார். அன்று முதல் தனது சகோதரியுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் தந்தார். இவரது இசைக் கச்சேரிகளுக்குக் கோபால் பிள்ளை, தஞ்சாவூர் பக்கிரி, குற்றாலம் குப்புசாமி பிள்ளை, கும்பகோணம் அழகு நம்பிப்பிள்ளை போன்றோர் மிருதங்கம் வாசித்துள்ளனர்.

  நாகசுரப் பயிற்சி:

  இராசரத்தினம் பிள்ளை அன்றைய திருவாவடுதுறை ஆதீனத் தலைவரான அம்பலவாண தேசிகரின் கோரிக்கையின் அடிப்படையில், அம்மடத்தைச் சேர்ந்த நாயனக்காரர் மார்க்கண்டேயம் பிள்ளையிடம், நாகசுரம் கற்கத் தொடங்கினார். பின்பு திருவழுந்தூர் கண்ணுச்சாமி பிள்ளையிடமும் கீரனூர் முத்துப்பிள்ளையிடமும் நாகசுரம் பயின்றார். இசை நிகழ்ச்சிகளையும் வழங்கினார். இவர் மன்னார்குடி சின்ன பக்கிரியின் நாதசுவர இசையில் ஈடுபாடு கொண்டார். தானும் அவரைப் போல் பயிற்சி செய்தார். பிற்காலத்தில் அவரைப்போல் சிறந்த கலைஞராக விளங்கினார்.

  திருமணம்:

  இராசரத்தினம் பிள்ளைக்கு சாரதா, சுப்புத் தாயம்மாள், சனகத்தம்மாள், பாப்பம்மாள் என்ற நான்கு மனைவியர் இருந்தனர். இவர்களுக்கு மகப்பேறு இல்லாமையால் ‘சிவாசி’ என்பவரைச் சுவீகார மகனாக ஏற்றுக்கொண்டார்.

  தனக்கென ஒரு பாணி:

  மன்னார்குடி சின்ன பக்கிரியைப் போல் இசைக்க பயிற்சிப் பெற்ற இராசரத்தினம், காலப்போக்கில் தனக்கென ஒரு சிறந்த பாணியை அமைத்துக்கொண்டார். இவரின் நாகசுரத்தில் வீணையின் நாதமும், வாய்ப்பாட்டிற்கு இணையான இசையும் இருந்தது. பூச்சி சீனிவாச ஐயங்கார், மகாவைத்திய நாதைய்யர், வீணை தனம்மாள் போன்றோரின் இசையில் எழுந்த சிறப்பம்சங்கள் எல்லாம் இவரின் நாகசுர ஓசையின் மூலம் வெளிப்பட்டன. நாகசுர இசைக்குழுவில் ஒத்துக்குப் பதிலாக தம்புரா சுருதியில் இசை நிகழ்ச்சியினை வழங்கினார். இராகம் வாசிப்பதில் தனி முறையைக் கையாண்டார். அவ்வாறு தோடி இராகத்தைச் சிறப்பாக இசைத்ததால் “தோடி இராசரத்தினம் பிள்ளை” என்று அழைக்கப்பட்டார். இவரது இசையில் கமகம், விறுவிறுப்பு, கற்பனை, இனிய நாதம், இலய பிடிப்பு என்ற ஐந்து நிலைகளும் தாரக மந்திரங்களாக விளங்கின. இவர் தான் வாழும் காலத்தில் வாழ்ந்த கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்.

  தோற்றப்பொலிவு:

  இராசரத்தினம் பிள்ளை அவர்கள் பரந்தமுகம், கம்பீரமான பார்வை, சிறப்பான சிகை அலங்காரம், ஷெர்வானி உடை, கையில் நாகசுரம், சிறப்பான அலங்காரம், மணக்கும் வாசனை, புன்னகைத் தவழும் இதழ்கள், காதில் மின்னும் கடுக்கண், நெற்றியில் அழகூட்டும் திலகத்தினையும் உடையவராக விளங்கினார்.

  திரைப்படத் துறை:

  டி.என்.ஆர் திரைப்படத் துறையிலும் பங்கு பெற்றிருந்தார். “மிஸ் கமலா” என்ற படத்தில் நாகசுர கச்சேரி செய்தார். 1940 ஆம் ஆண்டு “கவிகாளமேகம்” என்ற திரைப்படத்தில் கவிஞர் காளமேகமாக நடித்தார். இவர் ஒரு காட்சியில் நாகசுரம் வாசிக்க என்.எஸ்.கிருஷ்ணன் ஒத்து வாசித்தார். பாரதிதாசனும் இப்படத்தில் பங்கு கொண்டிருந்தார். இப்படத்தில் திருமலை நாயக்கர் அவையில் அதிமதுர கவி கூறும் பொருளுக்கு ஏற்ப பாடல்களைத் திறம்படப்பாடும் கலைஞனாக நடித்தார்.

  வானொலி நிகழ்ச்சி:

  திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் சுதந்திரப் பொன்விழா ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சியில் டி.என்.ஆரின் நாகசுர நிகழ்ச்சியை ஒலி பரப்பியது. அகில இந்திய வானொலி நிலையம் இவரின் நாகசுர இசையுடன் இவரின் பாட்டுக் கச்சேரிகளையும் பலமுறை ஒலி பரப்பியது.
  நமது நாடு சுதந்திரம் அடைந்த 15.08.1947 ஆம் நாளில் டெல்லி மாநகரில் கொண்டாடப்பட்ட சிறப்புமிகு சுதந்திர தின விழாவில் நேரு இந்நாட்டின் சுதந்திரப் பிரகடனம் செய்யும் முன்னர் டி.என்.ஆரின் மங்கல இசை ஒலிக்கப்பட்டது. டி.என்.ஆரின் இசையோடு சுதந்திர இந்தியா எழும்பியது.

  வெளிநாட்டுப் பயணம்:

  கடல் கடந்து வெளிநாட்டிற்குச் சென்று நாகசுரம் வாசித்த முதல் கலைஞராக இராசரத்தினம் பிள்ளை விளங்கினார். இவர் இலங்கை, மலேசியா போன்ற பல நாடுகளுக்குச் சென்று நாகசுர இசை நிகழ்ச்சியினை வழங்கியுள்ளார்.

  இறுதி வாழ்க்கை:

  இராசரத்தினம் பிள்ளை தம் வாழ் நாளின் இறுதி நாட்களில் சென்னையில் தங்கினார். மாரடைப்பு நோய்க்கு ஆளாகி இருந்தார். இராஜாஜி இவரைச் சட்ட மேல் சபை உறுப்பினராக்க ஏற்பாடு செய்தார். உடல்நலம் சரியில்லாத காலத்திலும் இசைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். ஒருமுறை செம்மங்குடி சீனிவாச அய்யர் இவர் தம் உடல் நிலைமையும், சாதகம் செய்யும் முறையையும் பார்த்து இப்படி சாதகம் செய்தால் உடல்நிலை என்னவாகும் என்று கேட்டபொழுது ஐயர்வாள் நான் சாதகம் செய்து கொண்டிருக்கும் வரை தான் இராஜரத்தினம் நிறுத்திவிட்டால் கழுதைரத்தினம் ஆகிவிடுவேன் என்றார். இத்தகு சிறப்புப் பெற்ற இராசரத்தினம் பிள்ளை அவர்கள் 12.12.1956 அன்று மாரடைப்பு நோயால் இறந்தார். இவரின் உடல் மயிலாப்பூர் சுடுகாட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
  கவியரசு கண்ணதாசன் இராசரத்தினம் பிள்ளை இசைக்கும் தோடி இராகத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

  “செவியினில் ஓடி எங்கள்
  சிந்தையில் ஓடி இந்த
  புவியெலாம் ஓடி நின்பால்
  பொங்கிய தோடி வேறிங்கு
  எவரிடம் போகும் ஐயா”

  என்கிறார். பேரறிஞர் அண்ணா, தமிழரின் அருங்கலைச்செல்வமான நாகசுரக்கலையின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்து இக்கலைக்குப் பெருமையும் புகழையும் சேர்த்த மாபெரும் கலைஞனான இராசரத்தினம் பிள்ளை நாகசுரக் கலை உலகச் சக்ரவர்த்தியாக அன்றும் விளங்கினார் இன்றும் விளங்குகிறார் என்கிறார். நாகசுர கலைஞர்களுக்கு இவரது பெயிரில் இராச ரத்தினா விருது வழங்கப்பட்டு வருகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:09:37(இந்திய நேரம்)