தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கணபதி

 • கணபதி

  முனைவர் வே. லதா,
  உதவிப்பேராசிரியர்,
  சிற்பத்துறை.

  புராணவரலாறு :

  சுவேத கல்பத்தில், ஒரு சமயம் பார்வதிதேவி நீராடச் செல்லும் வேலையில், தமக்கு ஜெயா, விஜயா என்ற இரு பெண் மெய்க்காவலர்கள் இருந்தபோதும் உண்மையான மெய்க்காவலரின் தேவையினை உணர்ந்தார். எனவே, தமது உடலில் இருந்த அழுக்கினைத் திரட்டி உருவமாகப் படைத்து மெய்க்காவலராக வாயிலில் நியமித்தார். இப்புதிய மெய்க்காவலர் (கணபதி) கண்டிப்பும் பலமும் பெற்றவர். இவருக்கு , நீராடச் சென்றுள்ள தேவியின் இடத்திற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே, கணபதி யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இவ்வேளையில் சிவபெருமான் பார்வதி தேவியை காண வந்தார். வழியில் நின்றிருந்த கணபதி சிவனை இடைமறித்தார். தாங்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று கூறினார். சிவன் உள்ளே செல்ல முயன்றார். கணபதி சிவனை அறியாதவர். சிவன் கணபதியை அறியாதவர். ஆகவே, கணபதி மறுக்க, விவாதம் ஏற்பட்டு யுத்தமாக மாறியது. கடுங்கோபம் கொண்ட சிவபெருமான் தமது மெய்க்காவலர்களை அழைத்து கணபதியை அப்புறப்படுத்த முனைந்தார். சிவனின் மெய்க்காவலர்கள் விரட்டியடிக்கப் பட்டனர். சிவனுக்காக சுப்பிரமணியரும், விஷ்ணுவும் சென்றனர். கடவுளர்களும், ரிஷிகளும் சென்றனர். அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர். சிவபெருமானும் மற்ற கடவுளர்களும் திகைப்படைந்தனர். என்ன செய்வதென்று அறியாத நிலையில் விஷ்ணு (மாயவன்) தமது மாய வியூகத்தினால் கணபதியை அழிக்க முயன்றார். இதனை அறிந்த பார்வதி தமது பெண் மெய்காவலர்களை யுத்தம் நடைபெறுமிடத்திற்கு அனுப்பினார். அதற்குள் கணபதியின் தலை துண்டிக்கப்பட்டது.

  நடனமாடும் நிருத்த கணபதி

  இச் செய்தியினை நாரதர் மூலம் அறிந்த பார்வதிதேவி கடுஞ்சினமடைந்தார். கணபதியின் தலையினைத் துண்டித்தவர்களை அழிக்க ஆயிரம் பெண் தெய்வங்களைப் படைத்தார். இப்பிரபஞ்சம் அதிர்ந்தது கடவுளர்களும், தேவர்களும், ரிஷிகளும் நடுங்கினர். ரிஷிகளும் நாரதரும் தேவியை கைகூப்பி வணங்கி அமைதி காத்தருளுமாறு வேண்டி தாங்கள் தங்களைப் பொருத்தருளுமாறும் வேண்டினர். அதற்கு தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். அதற்கு தேவி, கணபதி மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார். இதனையறிந்த சிவபெருமான் மற்றுமுள்ள விஷ்ணு, சுப்பிரமணியர் ஆகியோர் ஆலோசித்தனர். இறுதியில் சிவபெருமான் கடவுளர்களை அழைத்து வடக்குத் திசை நோக்கிச் செல்லுங்கள் எதிரில் எந்த உயிரினம் தென்படுகிறதோ அதன் தலையினைக் கொய்து கணபதியின் கழுத்தில் பொறுத்துமாறு உத்தரவிட்டார். அவ்வாறு சென்ற போது யானை தென்பட அதன் தலையை பொறுத்தப்படுகிறது. யானையின் (கஜா) தலையைப் பொறுத்தியிருப்பதால் கஜானனன் என்றழைக்கப்பட்டார். உயிர்த்தெழுந்த கணபதியைக் கண்டு பார்வதிதேவி மனமகிழ்ந்தார். சிவனும் மற்ற கடவுளர்களும் நிம்மதியடைந்தனர். இப் பிரபஞ்சம் பழைய நிலைக்கு வந்தது. சிவனுடைய பூதகணப்படைகளை விரட்டியடித்து பேராற்றல் பெற்ற கணபதியைச் சிவன் அனுக்கிரகம் செய்தார். ஈஸ்வரரின் அனுக்கிரகம் பெற்றதால் விக்கேஸ்வரானுக்கிரகமூர்த்தி என்று அழைக்கப்பட்டார். அன்று முதல் பூதகணங்களுக்கெல்லாம் தலைவராக சிவாலயங்களில் முதன்மையானவராக முதல் வணக்கத்துக்குரிய கடவுளாக போற்றப்படுகிறார். கணங்களுக்குகெல்லாம் தலைவனானதால் கணபதி என்று போற்றப்பட்டர். சிவபுராணத்தில் இவ்வாறு கணபதியின் தோற்றம் விளக்கப்படுகிறது.

  படிமக்கலை :

  விக்னேஸ்வரர் அமர்ந்தவாறு அல்லது நின்றவாறு காணப்படுவர். நிருத்த கணபதியாகவும் காணப்படுவார். இவர் இரண்டு கரங்கள் (திவிபுஜம்) கொண்டு திரிபங்க நிலையில் (உடலில் மூன்று வளைவுகள்) தோன்றுவார். சமபங்க நிலையிலும் (நேராக, உடலில் எந்த வளைவுமில்லாமலிருப்பது) அமைந்திருப்பார். அமர்ந்திருப்பாரேயானால் இடது காலை மடக்கி ஆசனத்தின் மீது அமர்த்தி வலது காலை தொடையின் மீது இருப்பது போல தோற்றமளிப்பார். கஜானனனின் தும்பிக்கை வலதுபுறம் இருக்க அமையப்பெற்றிருந்தால் வலம்புரி விநாயகர் என்றழைக்கப்படுவார். இடது புறம் அமையப்பெற்றிருத்தால் இடம்புரி விநாயகர் என்றழைக்கப்படுவார். இவருக்கு மூன்று கண்கள், நான்கு, எட்டு அல்லது பதினாறு கரங்கள் அமையப்பெற்றிருப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன.
  சிவாலயங்களில் முழுமுதற் கடவுளாக வீற்றிருக்கும் கணபதி பல்வேறு கோலங்களில் பல்வேறு பெயர்களில் அமைந்துள்ளார். அவை

  பால கணபதி
  தருண கணபதி
  பக்தி கணபதி
  வீர கணபதி
  சக்தி கணபதி
  உச்சிஷ்ட கணபதி
  மகா கணபதி
  ஊர்த்வ கணபதி
  பிங்கள கணபதி
  ஹேரம்ப கணபதி
  பிரசன்ன கணபதி
  துவஜ கணபதி
  உன்மத்த கணபதி
  விக்னராஜ கணபதி
  புவன கணபதி
  நிருத்த கணபதி
  ஹரித்ர கணபதி
  பாலச்சந்திர கணபதி
  சூப்ரகார கணபதி
  ஏகதந்தன்

  மற்றும் பல கோலங்களில் சிற்ப அமைதி பெற்றுள்ளார்.

  பால கணபதி :

  இவர் குழந்தை வடிவில் இருப்பார். நான்கு கரங்கள் மற்றும் யானைத் தலையினைக் கொண்டவர். மாங்கனி, வாழை, பலா, கரும்பு, ஆகியவைகளை கைகளில் ஏந்தியவர். தும்பிக்கையில் விளாம்பழத்தினைப் பிடித்திருப்பவர்.

  தருண கணபதி :

  இளமையான தோற்றமுடையவர் கைகளில் பாசம், அங்குசம், விளாம்பழம், நாவல் பழம் (ஜம்பு) சேஷமம், மூங்கில் கம்பு ஆகியவைகளைப் பிடித்திருப்பார் சிவந்த மேனியராக இருப்பார்.

  பக்தி விக்னேஸ்வரர் :

  நான்கு கரங்களைக் கொண்டவர். தேங்காய், மாம்பழம், கரும்பு, பாயாசம், ஆகியவற்றைக் கொண்டவர். வெள்ளைநிற மேனியர்.

  வீர விக்னேஸ்வரர் :

  இவர் பதினாறு கரங்களைப் பெற்றவர். வேதாளம், சக்தி, அம்பு, வில், கதை, முத்காரம், கத்தி, கேடயம், பாசம், அங்குசம், சூலம், குண்டம், பரசு, துவஜம் ஆகியவற்றை ஏந்தி சிவப்பு மேனியராய்க் காணப்படுவார்.

  சக்தி கணேசர் :

  சக்தி கணேசரின் வரிசையில் லக்ஷ்மி கணபதி உச்சிஷ்ட கணபதி மகா கணபதி, ஊர்த்வகணபதி, பிங்களகணபதி ஆகிய சிற்ப அமைதிகள் குறிப்பிடப்படுகின்றன. இவைகள் சக்தியுடன் இணைந்த கணபதியின் வடிவங்களாகும்.

  லக்ஷ்மி கணபதி :

  எட்டுக்கரங்களை உடையவர் அவற்றில் கிளி, மாதுளை தாமரை இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் நிறைந்த பாத்திரம், அங்குசம், பாசம், கற்பக விருட்சக்கற்றை மலரின் மொட்டு ஆகியவைகளைப் பிடித்திருக்கும் வெள்ளைநிற மேனியராய்த் தோற்றமளிப்பார். மற்றொரு குறிப்பில் கணபதி நான்கு கைகளை உடையவர் இரண்டு கைகயில் தண்டமும், சக்கரமும் தரித்திருப்பார் முன்வலது கையில் அபயமும் இடது கையில் லக்ஷ்மியை ஆலிங்கனனம் செய்தவாறும் இருப்பார் என்று கூறுகின்றன.

  உச்சிஷ்ட கணபதி :

  சிறந்த வரங்களை அளிப்பவர் பாசம், அங்குசம், கரும்பு ஆகியவைகளையும், மற்றொரு கையில் தேவியைத் தொட்டவாறும் அமைந்திருப்பார். இவர் பத்மாசனத்தில், சிவந்த மேனியராக மூன்று கண்களுடன் அமர்ந்திருப்பார். இவரது தொடையில் விக்னேஸ்வரி என்றழைக்கப்படும் தேவி அமர்ந்திருப்பார்.

  மகா கணபதி :

  பத்து கரங்களை உடையவர். தாமரை மலர் மாதுளை அலங்கரிக்கப்பட்ட நீர்ப்பாத்திரம், கதை உடைந்ததந்தம் கரும்பு நெற்கற்றை பாசம் தரித்து காணப்படுவார். சிவந்த மேனியராக இருப்பார். சக்தி தேவியினை மடியில் அமர்த்தியிருப்பார். இவர் வெள்ளை நிற மேனியுடன் கைகளில் தாமரை மலரினைத் தரித்திருப்பார்.

  ஊர்த்வகணபதி :

  ஆறுகரங்களை உடையவர் இவரின் கரங்களில் கல்காரா மலர், நெற்கற்றை, கரும்புவில், அம்பு, தந்தம் ஆகியவைகளைத் தரித்திருப்பார் மீதமுள்ள ஒரு கையில் மடியில் அமர்த்தியுள்ள தேவுயினைத் தழுவியிருப்பார். கணபதி பொன் மஞ்சள் நிற மேனியராகக் காணப்படுவார் தேவி ஒளியின் நிறத்தில் இருப்பார்.

  பிங்கள கணபதி :

  ஆறுகரங்களை உடையவர் மாம்பழம் பூங்கொத்து (கல்பக விருட்சத்தின் பூங்கொத்து) கரும்பு, மோதகம், சேஷமம், பரசு தரித்திருப்பார். லக்ஷ்மி, கணபதி அருகில் நின்றவாறிருப்பார்.

  ஹேரம்ப கணபதி :

  ஜந்து யாணை முகங்களைத் கொண்டவர். அதில் நான்கு முகங்கள் நான்கு திசைகளைப் பார்த்தவாறிருக்கும். ஐந்தாவது தலை மேல் நோக்கிக் காணப்படும். சிங்கத்தின் மீது அமர்ந்தவாறு காணப்படுவார். எட்டுக்கரங்களை உடையவர். பாசம், தண்டம், அக்கமாலை, பரசு, முட்காரம், மோதகம் அபயம் மற்றும் வரதம் தரித்து பொன்னிற மேனியராய் தோற்றமளிப்பார்.

  பிரசன்ன கணபதி :

  இளங்கதிரவனின் நிறத்தினை உடையவர். இவர் பத்மாசனத்தில் சமபங்கமாகவோ, (நேராக) திரிபங்கமாகவோ (மூன்று வளைவுகள்) இருப்பார். சிவப்பு நிற ஆடை அணிந்து கைகளில் பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்திருப்பார். அபயம் மற்றும் வரதமுத்திரைக்குப் பதிலாகத் தண்டமும் மோதகமும் பிடித்திருப்பார். அதனைத் தும்பிக்கையினால் எடுத்து வாயில் இடுவது போல் அமைந்திருப்பார்.

  துவஜ கணபதி :

  நான்கு கரங்கள் பெற்றிருக்கும். புத்தகம், அக்கமாலை, தண்டம், கமண்டலம், தரித்து கோரமான தோற்றத்துடன் இருப்பார்.

  உன்மத்த உச்சிஷ்ட கணபதி :

  மூன்று கண்களுடையவர். சிவந்த மேனியர் இவரது கைகளில் பாசம் அங்குசம், மோதகம், தண்டம் தரித்து பத்மாசனத்தின் மேல் அமர்ந்திருப்பார்.

  புவனேச கணபதி :

  எட்டுக்கரங்களை உடையவர். சங்கு, அம்பு, கரும்பு, மலரம்பு, உடைந்த தந்தம் பாசம், அங்குசம், நெற்பயிர் ஆகியவைகளைத் தரித்திருப்பார். வெள்ளை நிற மேனியராகக் காணப்படுவார். மன்மதனின் உபகரணமான மலரம்பினையும் கரும்பினாலான வில்லையும் கையிலேந்தியிருப்பார்.

  விக்னராஜ கணபதி :

  பாசம் மற்றும் அங்குசத்தைக் கைகளில் தரித்திருப்பார். மாம்பழத்தை உண்பது போலக் காணப்படுவார். மூஷிகத்தினை வாகனமாக்க் கொண்டவர். சிவப்பு நிற மேனியராக அமைந்திருப்பார்.

  நிருத்த கணபதி :

  கணபதி நடனமாடுவது போல அமைந்திருக்கும். எட்டுக்கரங்களைப் பெற்றிருப்பார். அவற்றில் பாசம், அங்குசம், அப்பம், குதாரா, தண்டம், வளையம், அங்குலியம், மீதமுள்ள ஒரு கையினைத் தொங்கவிட்டவாறு நடன அசைவிற்கு ஏற்றது போல அமைந்திருக்கும் பொன் மஞ்சள் நிற மேனியுடையவர் பத்மாசனத்தின் மீது இடது காலைச் சற்று வளைத்து ஊன்றியவாறும் வலது காலை மேலே தூக்கி நடனமாடுவது போல இருக்கும். பெரும்பாலும் இச்சிற்பம் நான்கு கரங்களைப் பெற்றதாக அமைந்திருக்கும்.

  ஹரித்ர கணபதி :

  இவர் ராத்திரி கணபதி என்றழைக்கப்படுவார். நான்கு கரங்கள் கொண்டவர் பாசம், அங்குசம், மோதகம், தண்டம் தரித்திருப்பார். மூன்று கண்களைக் கொண்டவர். மஞ்சள் நிற மேனியரான இவர் மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பார்.

  பாலச்சந்திர கணபதி :

  சந்திரனை நெற்றியில் திலகமாகச் சூடியதால் இப்பெயர் பெற்றார்.
  இவ்வாறாக மேலும் பல்வேறு பெயர்களில் சகலாபரணங்கள் அணிந்து சிற்ப அமைதி பெற்றிருப்பதாகச் சிவபுராணம் குறிப்பிடுகின்றது.

  சான்றுகள் (சாஸ்திரங்கள் மற்றும் புராணங்கள்) :

  இவரைப்பற்றிய குறிப்புகள் லிங்கபுராணம் சிவபுராணம், வராகபுராணம், மத்சயபுராணம், விநாயகபுராணம், முத்கலபுராணம், கந்தபுராணம் பிரமாண்டபுராணம், பவிஷ்யபுராணம் ஆகிய புராணங்களிலும், உத்தரகாமிக்காகமம், சுபரபேதாகமம் ரூபமந்தணம் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன.

  வரலாற்றுச்சிறப்பு :

  கணபதி சிற்பம் பற்றிய குறிப்புகள் புராணங்களிலும் இலக்கியங்களிலும் பல்வேறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. எனினும் தமிழகத்தில் பல்லவர்கள், பாண்டியவர்கள் காலங்களில் வந்ததாக்க் கருதப்படுகிறது. சோழர்காலங்களில் இராஜராஜன் கல்வெட்டுக்களில் ”பரிவாரால யத்துப் பிள்ளையார்” என்னும் குறிப்பு காணப்படுவது இச்சிற்பத்தின் பழைமையையும் சிறப்பினையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:04:55(இந்திய நேரம்)