தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருநாவுக்கரசர்

 • நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

  (தவில்) 1894-1949

  முனைவர் இரா.மாதவி
  உதவிப் பேராசிரியர்
  இசைத்துறை

  சென்ற நூறு ஆண்டுகளில் தவில் வித்வான்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மிகவும் பிரசித்திப்பெற்ற ஒருவர். இவர் 3.9.1894 அன்று பிறந்தார். இவருடைய தாய் தெய்வயானையம்மாள் என்பவர்.

  இவர் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தியிடம் மிக்க மரியாதையுடையவர். இவர் கஞ்சிராவும் வாசிப்பதுண்டு. ஒரு பிரபல கச்சேரியில் புதுக்கோட்டையார் மிருதங்கம் வாசிக்க இவர் கஞ்சிரா வாசித்தார். மீனாட்சிசுந்தரம் தமது மாமன் நீடாமங்கலம் தவில் வித்துவான் கோவிந்த தவில்காரரிடம் தவில் வாசிக்கும் பயிற்சி பெற்றார். தவில் வாசிப்பில் தமக்கென்றே ஒரு பாணி அமைத்துக்கொண்டு சம்பாத்தியத்தில் சிறிதும் வழுவாமல் தவில் வாசிப்புக் கலையை நாடு முழுமையும் போற்றும்படிச் செய்தார். பல நுணுக்கங்களில் சிறப்பான தேர்ச்சியை இவர் வாசிப்பால் காணமுடியும்.

  சிறிது காலம் நாகூர் சுப்பையா, செம்மனார் கோயில் இராமசாமி ஆகியோருடைய நாதசுரத்திற்கு தவில் வாசித்து வந்தார். பிறகு திருவீழிமிழலைச் சகோதரர் இருவரிடம் வாசிக்கத் தொடங்கி 30 ஆண்டு காலம் அவர்களுக்கு வாசித்து வந்தார். இவருடைய வாசிப்பைக் கேட்ட மாங்குடி சிதம்பர பாகவதர் 2 நாதசுரங்களோடு ஒத்து மூன்றாவது நாதசுரமோ என்று ஐயுரும்படி ஒலிக்கிறது என்று புகழ்ந்தாராம். திருவாரூரில் மலைக்கோட்டை பஞ்சாபகேச பிள்ளையோடு வாசிக்கும் போது கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருந்த காஞ்சிபுரம் நயினாப்பிள்ளை, கொன்னக்கோல் பக்கிரி ஆகிய இசை மேதைகள் இவருடைய பெரும் சாதனையை மிகவியந்து பாராட்டியிருக்கிறார்கள். ‘நம்’ என்ற சொல்லை அவர் கையாண்ட விதத்தில் இன்றுவரை வேறொருவருமே வாசிக்கவில்லை என்று முதிர்ந்த தவில் கலைஞர்கள் கூறினர்.

  நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் தமிழ் நாட்டில் பல சமஸ்தானங்களில் பாராட்டும் பரிசும் பெற்றார். சென்னையில் ஒருமுறை அவர் வாசித்தபோது சென்னை கேசவப்பெருமாள் கோயிலில் தங்கத்தாலான தவில் வாசிப்புக் குச்சி இவருக்குப் பரிசாக வழங்கினார்கள். தவிலரசு, அபிநவ நந்தீசர், படஹராத்யப்ரவீண போன்ற பல பட்டங்கள் இவருக்குத் தாமே வந்தன.

  இவருடைய மருகர் நாச்சியார்கோயில் இராகவப்பிள்ளை என்பவர் இவரது முக்கியசீடர். திருவாவடுதுறை இராஜரத்தினம், திருவெண்காடு சுப்பிரமணியன் ஆகியோருக்குத் தவில் வாசித்தார். இளமையிலேயே தவில் வல்லவராகித் தம் குருவிற்கே பெருமை தேடித்தந்தவர். தனித்தவில் அல்லது ஸ்பெஷல் தவில் எனும் சொல்லாட்சித் தோன்றி நிலவ வித்திட்டார்.

  திருமணம்

  பசுபதிகோவில் வீரபத்திரத் தவில்காரர் என்பவர் மைசூர் சமஸ்தான வித்வானாயிருந்தவர். அவருடைய மகள் நாகம்மாளை மீனாட்சிசுந்தரம் பிள்ளை 10.2.1913 அன்று திருமணம் செய்துகொண்டார்.

  சீடர்கள்

  பந்தணை நல்லூர் ரத்தினம் பிள்ளை, கூறைநாடு கோவிந்தராசுபிள்ளை, திரு நாகேஸ்வரம் ரத்தின சுவாமி பிள்ளை, நாச்சியார் கோவில் இராகவப்பிள்ளை, ஈமணி ராகமையா, திருவிழந்தூர் வேணுகோபாலபிள்ளை, கரந்தை ஷண்முகம் பிள்ளை கண்டியூர் முத்தையாபிள்ளை, மிருதங்க வித்வான் கோயம்புத்தூர் ராமசாமிப்பிள்ளை, கடம்வித்வான் ஆலங்குடி ராமச்சந்திரன் முதலியோர், மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் சீடர்களிற் சிலர்.

  ஸ்ரீவாஞ்சியம் கோவிந்தப்பிள்ளை, வழுவூர் முத்துவீரப்பிள்ளை, அம்பகரத்தூர் மலைப்பெருமாள் பிள்ளை, அம்மாசத்திரம் கண்ணுசாமிபிள்ளை, அம்மாப்பேட்டை பக்கிரிப்பிள்ளை, இப்படியான பல தவில் மேதைகளின் வாசிப்பை அடிக்கடி கேட்கவும் அதைத் தம் தொழில் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளவும் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு வாய்ப்புகள் நிறைந்தன.

  இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையிலும் சென்று வாசித்துப் புகழ் பெற்றிருந்தார். அவருடைய புதல்வரான சண்முகவடிவேலும் மிக்க புகழோடு தவில் வாசித்து வந்தார். மீனாட்சி சுந்தரம் அவர்கள் 12.2.1942இல் காலமானார். இந்தத் தவில் மேதையின் பெயரும் புகழும் தவில் வாத்தியம் உள்ளளவும் நிலைத்திருக்குமென்றால் ஐயமில்லை.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:16:25(இந்திய நேரம்)