தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • பாபநாசம் சிவன்

  முனைவர் செ.கற்பகம்
  உதவிப் பேராசிரியர்
  இசைத்துறை

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் தெலுங்கு, வடமொழிப் பாடல்களே பாடப்பெற்றன. இனிய இசையில் அமைந்த செந்தமிழ்ப் பாடல்களை மக்கள் விரும்பிக் கேட்பதற்காக பல இயலிசைப் புலவர்கள் தூய தமிழ்ப் பாடல்களைச் சிறந்த இசை மெட்டுடன் படைக்கலாயினார்.
  இசைநயம் மிக்கப் பாடல்களைத் தமிழில் இயற்றி சிறந்த தொண்டாற்றியவர்களில் பாபநாசம் சிவனும் ஒருவராவார். இவர் தனிப்பாடல்களையும், திரைப்படப் பாடல்களையும் ஏராளமாக இயற்றியுள்ளார். இவரின் பாடல்கள் எளிமையாகவும், இனிமையாகவும், எளிய தமிழ் மொழியில் அமைந்திருப்பதால் மக்கள் அனைவரும் விரும்பிப் பாடும் பாடல்களாக அமைந்துள்ளன.

  பாபநாசம் சிவன

  பிறப்பு:

  பாபநாசம் சிவன் கி.பி.1890 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 26 ஆம் நாளில் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள போலகம் என்னும் சிறிய கிராமத்தில் இராமாமிர்த அய்யருக்கும், யோகாம்பாளுக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

  இளமைப்பருவம்:

  பாபநாசம் சிவனின் இயற்பெயர் “இராமைய்யா” என்பதாகும். இவர் தந்தையாருடன் நாள்தோறும் கோவிலுக்குப் போகும்போது இறைவனது நாமாவளிகளைப் பாடிக்கொண்டே செல்வார். பிற்காலத்தில் கீர்த்தனைகள் இயற்ற முன்னோடியாக இவ் அனுபவம் திகழ்ந்தது. சிவனின் ஏழாவது வயதில் தந்தை காலமானப் பிறகு, தாயாருடன் திருவனந்தபுரம் சென்றார். அங்கு திருவனந்தபுரம் மன்னர் சமஸ்கிருத கலாசாலையில் படித்து “உபாத்யாய” “வையாகரணி” என்ற இருபட்டங்களையும் பெற்றார்.

  இசைக்கல்வி:

  திருவனந்தபுரத்தில் இருந்த காலத்தில் சிறந்த சங்கீத வித்வானான சாம்ப பாகவதர், மகாதேவபாகவதரிடமும், தனது தாயாரிடமும், பாலக்காடு பரமேஸ்வர பாகவதரிடமும், நேமம் நடேச பாகவதரிடமும், கோனேரிராஜபுரம் வைத்தியநாதய்யரிடமும் இசைப் பயிற்சி பெற்றார்.

  பெயர்க்காரணம்:

  பாபநாசம் சிவன் முனிவர் போல் புலித்தோலணிந்து கோவில்களுக்குச் சென்று பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த காரணத்தினால் “சிவன்” என்று அழைக்கப்பட்டார். மேலும், பாபநாசத்தில் தங்கிய பொழுது, கணபதி அக்ரஹாரத்தைச் சேர்ந்த சாம்பசிவ ஐயர் இவரைப் ‘பாபநாசம் சிவன்’ என்று அழைக்க, அன்று முதல் பாபநாசம் சிவன் என்ற பெயர் இசையுலகில் வழங்கப்படலாயிற்று.

  அரிகதை செய்தல்:

  பாபநாசம் சிவன் இளம்பருவத்திலேயே கோவில்களில் நடைபெறும் அரிகதைகளை ஆர்வத்துடன் கேட்டு மகிழ்வார். பிற்காலத்தில் இவ் அனுபவத்தின் மூலம் பத்து சரித்திரங்களைக் காலட்சேபமாக இயற்றி அவற்றை நிகழ்த்தியும் காட்டியுள்ளார்..

  இல்லறம்:

  1917 ஆம் ஆண்டு பழனம் சுப்பிரமணிய ஐயர் முயற்சியால் இலட்சுமி என்பரை மணந்தார். இவருக்கு நீலாராமமூர்த்தி, ருக்மணி ரமணி ஆகிய இரு மகள்களும், கீர்த்திவாசன் மற்றும் இராமதாசன் என்ற இரு மகன்களும் பிறந்தனர். “ராமதாசன்” என்ற தனது மகனின் பெயரையே தமது பாடல்களுக்கு முத்திரையாகப் பயன்படுத்தினார்.

  முதல் பாடல்:

  பாபநாசம் சிவன் 1911 ஆம் ஆண்டு படைத்த “உன்னைத் துதிக்க அருள் தா” என்ற குந்தலவராளி இராகப் பாடல் இவரின் முதல்பாடலாகும். திருவாரூரைச் சார்ந்த ‘சிமிழி சுந்தரமையர்’ சிவனின் பாடல்களால் ஈர்க்கப்பட்டார். சிவனுக்குத் ‘தமிழ்த் தியாகைய்யர்’ என்ற பட்டத்தை அளித்துக் கௌரவித்தார்.
  இவர் இசைப்பாடல்கள் பலவற்றை படைத்துள்ளார். அப்பாடல்களுக்கு தாமே இசையும் அமைத்துள்ளார். இவற்றோடு ஏனையோர் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.

  இயற்றமிழாற்றல்:

  பாபநாசம் சிவன் இயலையும், இசையையும் நன்கு அறிந்தவராக விளங்கினார். இவர், ஜெயதேவரின் அஷ்டபதியைத் தமிழில் மொழிபெயர்த்தார். அவற்றிற்கு விரிவுரையும் வழங்கியுள்ளார். “வடமொழிச் சொற்கடல்” என்ற வடமொழி - தமிழ் அகராதியைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். தமிழ், சமஸ்கிருத மொழிகளில் வல்லவராக வாழ்ந்துள்ளார்.

  கலாசேத்ராவில் இசைப்பணி:

  பாபநாசம் சிவன்1934 ஆம் ஆண்டு முதல் 1939 ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் சென்னையிலுள்ள கலாசேத்ரா நிறுவனத்தின் இசைப்பிரிவின் தலைவராகப் பணியாற்றினார். இங்கு பணியாற்றிய பொழுது ஆண்டாள், கிருஷ்ணமாரிக்குறவஞ்சி, கீதகோவிந்தம் போன்ற பல தமிழ் வடமொழி நாட்டிய நாடகங்களுக்கு இசையமைத்துக் கொடுத்துள்ளார். இந்நிறுவன நிருவனர் ருக்மணி அருண்டேலின் ஆடல் நிகழ்ச்சியில் இசைக் கலைஞராகவும் திகழ்ந்துள்ளார்.

  நாடகப்பணி:

  பாபநாசம் சிவன் நாடகத்துறை வல்லவராகவும் திகழ்ந்துள்ளார். பதினான்கிற்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு இசை அமைத்துள்ளார். நாடகங்களுக்குரிய பாக்களையும் புனைந்துள்ளார். சில நாடகங்களில் தானே நடித்தும் உள்ளார்.

  திரைத்துறை:

  கலைத்துறையில் ஒன்றான திரைத்துறையில் சிவன் அவர்கள் சிறப்பான தடம் பதித்துள்ளார். ஏராளமான திரைப்படபாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்துள்ளார். குபேரகுசேலா, பக்தசேதா, தியாகபூமி போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தும் உள்ளார். 1933 முதல் 1960 ஆம் ஆண்டுக்குள் சுமார் 120 படங்களுக்கு 1000க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார். இப்பாடல்களுக்கு தாமே இசையமைத்துள்ளார். இவர் திரையில் எழுதி இசையமைத்த பாடல்கள் சில.

  1. ஆடும் தெய்வம் - காம்போதி
  2. நீ இரங்காயெனில் - அடாணா
  3. மன்மத லீலையை வென்றார் உண்டோ - சாருகேசி
  இவரின் திரை இசைப்பாக்கள் திரைத்துறையின் வெற்றிக்குத் துணை புரிந்துள்ளன.

  தேசப்பற்று:

  இறைப்பணியில் மட்டுமல்லாமல், தேச விடுதலைக்கும் தொண்டாற்றியுள்ளார். இவர் நாட்டுப்பற்று மிகுந்த பாடல்களையும் புனைந்துள்ளார். மேலும் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் மீதும் பாரதியார் மீதும் பாடல்கள் பலவற்றை இயற்றியுள்ளார்.
  1. நம் நாடு சுதந்திரம் - சுத்தசாவேரி
  2. காந்தியைப் போலொரு - செஞ்சுருட்டி
  பாபநாசம் சிவன் தமிழிசை வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார். தமிழிசை உருக்கள் பலவற்றையும் படைத்துத்தந்துள்ளார். இவ்வுருக்களில் வர்ணம், கிருதி, கீர்த்தனம், இராகமாலிகை, தில்லானா முதலிய இசை வகைகளும் அடங்கும்.
  1. வர்ணம் - சுவாமி நான் உந்தன் அடிமை - நாட்டைக்குறிஞ்சி
  2. கீர்த்தனை - தாமதமேன் - தோடி
  3. கீர்த்தனை - கண்ணனைப் பணி மனமே - சண்முகப்பிரியா

  பாடல் தொகுப்புகள்

  பாபநாசம் சிவன் இயற்றியப் பாடல்களைக் “கீர்த்தனை மாலை” என்ற பெயரில் ஆறு பாகங்களாக அவரின் மகள் திருமதி ருக்மணி ரமணி அவர்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வெளியிட்டுள்ளார். மேலும், அவர் இயற்றிய வர்ணங்கள் “வர்ணமாலை” என்ற நூலாகவும், இராமரின் சரிதம், காரைக்காலம்மையாரின் இடை நாடகமும், மூன்று ஒலிநாடாக்களும், சிவனின் வரலாறு கூறும் “ஸ்ரீ பாபநாசம் சிவன் சரிதம்” “எனது நினைவுக்கடல்” போன்ற தலைப்புகளில் ருக்மணி ரமணி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளன. இவரது படைப்புகளை ஒருசேரக் கண்டுணரும் வாய்ப்பை இவர்தம் குடும்பத்தார் மேற்கொண்டுள்ளனர்.

  மறைவு:

  இறைப்பற்றும் தேசப்பற்றும் மிக்க பாபநாசம் சிவன் அவர்கள் தமது 83-வது அகவையில் 1.10.1973 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். இவருடைய பாடல்கள் புகழடைந்த அளவு வேறு எவருடைய பாடல்களும் அவரவர் வாழ்நாட்களில் புகழடையவில்லை. சிறந்த கவிவாணராகவும், இசைவாணராகவும், கலைவாணராகவும் தொண்டாற்றிய பாபநாசன் சிவனுக்குக் கலையுலகமும் தமிழிசை உலகமும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:09:15(இந்திய நேரம்)