தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அக்னி

 • அக்னி

  முனைவர் கி.கந்தன்,
  துறைத்தலைவர்,
  சிற்பத்துறை.

  இந்து மதத்தில் தற்போது பிரம்மா விஷ்ணு மற்றும் சிவன் மும்மூர்த்திகளாகக் கருதப்படுவது போன்று வேத காலத்தில் அக்னி, இந்திரன் மற்றும் சூரியன் மும்மூர்த்திகளாக வழிபடப்பட்டுள்ளனர். பல்வேறு இறை உருவங்களை வழிபடுவதற்கு அக்னி ஒரு வழியாகக் (மார்க்கமாகக்) கருதப்படுகிறது. அக்னியானது வானத்திலிருந்து பூமிக்கு எடுத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் அக்னி மூவேறு நிலைகளில் வழிபடப்படுகிறது. பூமியில் தீயாகவும், பெருவெளியில் மின்னலாகவும், ஆகாயத்தில் சூரியனாகவும் வழிபடப்படுகிறார். அக்னி என்ற சொல் ‘இக்னீஸ்’ என்ற லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இச்சொல் நெருப்பினைக் குறிக்கும் இலத்தீன் சொல் ஆகும். வேத காலத்தில் அக்னி இரண்டு மரத்துண்டுகளைத் தேய்த்த பொழுது தோற்றம் பெற்றதாகவும் அக்கட்டைகளில் ஒன்றின் பெயர் அரணி என்றும் அரணி என்பது அக்னி என்று பெயர் பெற்றது.

  அகனி

  வேத காலச் சுலோகங்களில் அக்னி இரண்டு தலைகளையும், நான்கு கொம்புகளையும், மூன்று கால்களையும், ஏழு கைகளையும் பெற்றவராகக் குறிக்கப்படுகிறது. பிற்காலத்தில் அக்னியானது ருத்ரன் மற்றும் சிவனுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் ஓர் நிலையில் கார்த்திகேயனின் தந்தையாகவும் கூறப்பட்டுள்ளது. அக்னியின் மனைவி ‘சுவாகா’ என்று அழைக்கப்படுகிறாள். ஹரிவம்சம் என்ற நூலில் அக்னியின் வடிவம் கருநிற ஆடைகளால் அலங்கரிக்கப்பட வேண்டும். தலையில் சுவாலைகளுடன் இருக்க வேண்டும். முன் கைகள் அபயம் மற்றும் வரதம் முத்திரையிலும் பின் கைகள் வேள்விக்குப் பயன்படுத்தப்படும் சுருக் மற்றும் சுருவா ஏந்தியிருக்க வேண்டும் என்ற குறிப்புகள் காணப்படுகின்றன. ஆடு அக்னியின் வாகனமாகக் கருதப்படுகிறது.

  ‘திசை பாலகர்’ என்ற நிலையில் அக்னி வழிபடும் பொழுது எண் திசை பாலகர்களில் தென் திசைக்குரிய கடவுளாகக் கருதப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:06:46(இந்திய நேரம்)