தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சீர்காழி கோவிந்தராஜன்

 • சீர்காழி கோவிந்தராஜன்

  முனைவர் செ.கற்பகம்
  உதவிப் பேராசிரியர்
  இசைத்துறை

  தமிழிசை உலகில் தன் வெண்கலக் குரலினால் முத்திரைப் பதித்தவர் சீர்காழி கோவிந்தராஜர் ஆவார். அயராத உழைப்பால் இசை உலகில் தடம் பதித்தவர் ஆவார்.

  பிறப்பு:

  திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழியில் 19.01.1933 ஆம் ஆண்டு சிவசிதம்பரத்திற்கும் அவயாம்பாளுக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவருடன் உடன் பிறந்தவர் மூன்று சகோதரர், ஒரு சகோதரியும் ஆவார்.

  இளமைப்பருவம்:

  கோவிந்தராஜன் அவர்கள் சீகாழியில் வாணிவிலாஸ் பாடசாலையில் ஆரம்பக்கல்வி பயின்றார். இவரது வீடு பிரம்மபுரீச்வரர் கோவிலுக்கு அருகாமையில் இருந்ததால், காலை நான்கு மணிக்கு ஒலிக்கும் நாதசுவர இசைக்கும், ஓதுவார்கள் பாடும் தேவார இசைக்காகவும் செல்வார்.
  இவர் சிறுவயதில் தேவி நாடக சபையில் குழந்தை நாடிகராக இடம்பெற்று தன் பாட்டுத் திறத்தால் அனைவரையும் கவர்ந்தார். பின்னர் சேலம் மாடர்ன் நாடக சபையிலும் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, கர்நாடக இசைபயிலும் நோக்குடன் சென்னை வந்தார்.

  சென்னைப் பயணம்:

  சென்னையில் பண்டிதர் பி.எஸ்.செட்டியாரின் அறிவுரையின் பேரில் சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்று 1949 ஆம் ஆண்டு “இசைமாமணி” பட்டம் பெற்றார். அப்பொழுது நடைபெற்ற கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல் இசைப்போட்டில் வெற்றி பெற்றார். மேலும், அங்கு இரண்டு ஆண்டுகள் பயின்று 1951 ஆம் ஆண்டு “சங்கீத வித்வான்” என்ற பட்டம் பெற்றார்.

  திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையிடம் இசைப் பயிற்சி:

  கோவிந்தராஜன் அவர்கள் மிகச் சிறந்த புல்லாங்குழல் வித்வான் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையிடம் இசையில் மேற்பயிற்சி பெற்றார். இவர் இசையில் உள்ள பல நுணுக்கங்களையும், கச்சேரிகளில் பாடும் முறையைச் சிறப்பாகக் கற்பித்தார். இவர் தன் கச்சேரிக்கு கோவிந்தராஜனை அழைத்துச்செல்லும் தன் மகன் என்றே கூறுவார். இவரிடம் கோவிந்தராஜன் அவர்கள் சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற பிறமொழிக் கீர்த்தனைகளையும், மேளராகமாலிகை தாள இராகமாலிகையையும் பயிற்சி பெற்றார்.
  சுவாமிநாத பிள்ளையின் அறுபது வயது நிறைவு விழாவை வெகுசிறப்பாக கோவிந்தராஜன் அவர்கள் நடத்தி வைத்தார்.

  தமிழிசை முக்கியத்துவம்:

  தமிழ் மக்கள் வாழக்கூடிய தமிழ்நாட்டில் தமிழ்ப் பாடல்களையே அரங்கினில் பாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். பொருள் விளங்காத பிறமொழிப் பாடல்களைப் பாடுவதைக் காட்டிலும், பொருளை நன்கு அறிந்து பாடல் வெளிப்படுத்தும், பக்தியை இவரது பாடலால் உணரமுடிந்தது. செவ்விசை அரங்கில் தமிழ்ப் பாடல்களைப் பாடிய விரல் விட்டு எண்ணக்கூடிய இசைக் கலைஞர்களில் சீர்காழியும் ஒருவராகத் திகழ்ந்தார். ச

  சீர்காழி இசையின் சிறப்பு

  சீர்காழியின் இசையில் சுருதி சுத்தம், சாரீர வளம், பாவம், ஈடுபாடு, உற்சாகம் போன்ற இசையின் அனைத்து அம்சங்களும் நிறைந்து காணப்பட்டது. பாடலைப் பாடும் போது வல்லினம், மெல்லினம் அறிந்து பாடுதல், பக்கவாத்தியங்களுக்கு மேல் அவரின் குரல் ரீங்காரம் செய்த முறைமை போன்றவை சிறப்பாக இருக்கும். சீர்காழி வெண்கலச் சாரீரமுடையவர். அவருடைய குரலுக்கு ஒலிப்பெருக்கியே தேவையில்லை. நினைத்தது பேசும் நாதசுவர சாரீரம் உடையவர்.
  சீர்காழி தன் கச்சேரிகளுக்கு நான்கு தாள வாத்தியங்கள் வைத்துக்கொள்வர். ஏனெனில் தாள இசைக்கலைஞர்கள் பிழைப்புக்கு வழிக்கொடுப்பார்.
  சீர்காழி பத்மஸ்ரீ போன்ற பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், சிறந்த பண்பாட்டோடு வாழ்ந்து வந்தார். பட்டமும் பதவியும் தேடி வந்த நிலையிலும் அடக்கத்துடன் காணப்பட்டார். இவரின் குரல் சிறப்பால் மட்டும் புகழ்பெறாமல் அவரின் அயராத சாதகத்தின் மூலமாகவும் இசையுலகில் நிலைத்து நின்றார்.

  பெற்ற பட்டங்களும், பரிசுகளும்:

  சீர்காழி கோவிந்தராஜன் பெற்ற
  விருதுகளை அணிந்திருக்கும் காட்சி

  இவர் 1949 ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரல் இராஜாஜி இவருக்கு தம்புராவையும், சென்னை சங்கீத வித்வத் சடையில் தங்கப் பதக்கத்தையும், கலைமாமணி, இசைப் பேரறிஞர், பத்மஸ்ரீ போன்ற பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றார்.

  ஆசிரியப்பணி:

  இவர் 1978 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அதில் வழங்கப் பெற்ற சன்மானத்தை அப்பல்கலைக்கழகத்தில் தன் குருவின் பெயரால் அறக்கட்டளை நிறுவி அங்கு அளித்தார். மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் இசைத்துறை கலைப்புல முதன்மையராகப் பணியாற்றி பல மாணவர்களுக்கு இசையைக் கற்பித்தார். 1983 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. மேலும், இவர் சென்னைத் தமிழிசைக் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார்.

  திரைப்படத் துறையில் பங்களிப்பு:

  திரைப்படத் துறையில் சீர்காழி அவர்கள் நடிகராகவும், பின்னணி இசைப் பாடகராகவும் செயல்பட்டுள்ளார். “திருச்செந்தூரில் கடலோரத்தில்”. “தேவன் கோவில் மணியோசை”, “உள்ளத்தில் நல்ல உள்ளம்”, “திருப்பதி மலை வாழும் வெங்கடேசா” போன்ற பல பாடல்கள் அவரின் குரலில் வெளியான மிகச் சிறந்த பாடலாகும். தெய்வத்திருமணங்கள் படத்தில் அகத்தியர் வேடமிட்டு மிகவும் சிறப்பாக நடித்தார். மேலும், இராஜராஜ சோழன் படத்தில் நம்பியாண்டார் நம்பியாகவும் நடித்தார்.
  இவர் முருகன் மீதும், திருப்பதி வெங்கடேசப் பெருமாள், அபிராமியின் மீது அந்தாதியும் பாடியுள்ளார். இப்பாடல் பக்தி சுவையை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
  அரசாங்கத்தின் சார்பில் நடைபெறும் பொழுது நிகழ்ச்சிகளில் சீர்காழி தான் இறைவணக்கம் மற்றும் வாழ்த்துப் பாடல் பாடுவது வழக்கமாக இருந்தது.

  பாடல் தொகுப்பு:

  சீர்காழி பாடிய பாடல்கள் “இசைமணியின் பக்தி மாமாலை” இரண்டு பாகத்தை அவரது மகன் டாக்டர்.சீர்காழி சிவசிதம்பரம் வெளியிட்டுள்ளார். இதில் பக்திப் பாடல்களும், திருக்குறள் பாடல்களும், தமிழ் மூவரின் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
  இவர் இலங்கை, புங்குடுதீவு, இலண்டன், மலேசியா, பினாங்கு, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று பல பல்கலைக்கழகங்களிலும் பொது இடங்களிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

  மறைவு:

  சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் கடும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு 24.03.1988 ஆம் ஆண்டு தனது 55வது வயதில் உயிரிழந்தார். இவர் இறக்கும் போது “உலகம் வாழ்க” என்று முருகன் கோயிலைப் பார்த்து சொல்லியவாறே உயிரிழந்தார். பக்திப்பாடல்களையும் தேசப் பாடல்களையும் தன் வெண்கலக் குரலில் மூலம் ஒலித்த சீர்காழி கோவிந்தராசனின் இசைப் பணியினை அவர் தம் மகன் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பறைச்சாற்றிக் கொண்டிருக்கின்றார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:10:07(இந்திய நேரம்)