தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிட்சாடனர்

 • பிட்சாடனர்

  முனைவர் வே.லதா,
  உதவிப்பேராசிரியர்,
  சிற்பத்துறை.

  புராணப்பின்னணி :

  ஒரு சமயம் சிவன், விஷ்ணுடன் (கோகினி வடிவில்) “பிச்சைப்பாத்திரம்” ஏந்தி “தாருகவனம்” சென்றனர். தாருக வனத்தில் ரிஷிகள் செருக்குற்றிருந்தனர். அதாவது தங்களுக்கு மும்மூர்த்திகளும் இணையானவர்கள் இல்லை என்றும், வேத மந்திரங்களிலும், வேள்விகளிலும் தங்களைவிடச் சிறந்தவர்கள் இல்லை என்று கர்வமுற்றிருந்தனர். சிவபெருமான் ரிஷிகளுக்குத் தகுந்த பாடம் புகட்ட விழைந்தார். சிவபெருமான் தம் உடலில் ஆடையில்லாது, மோகினி (விஷ்ணு) பின் தொடர ரிஷிகளின் குடில்களுக்குச் சென்றார். ரிஷிகள் தங்களது கடமைகளை (வேள்விகல் மற்றும் வேத மந்திரம் ஓதுதல்) மறந்து மோகினியின் அழகில் தங்களின் எண்ணங்கள் வயப்பட்டுப் பின் தொடர்ந்தனர். ஒருகனம் ரிஷிகள் தங்கள் பத்தினிமார்கள் (மனைவிமார்கள்) அனைவரும் சிவனின் பின் செல்வதை அறிந்து யாகத்திலிருந்து புலியினையும், நாகத்தினையும், குள்ள உருவம் கொண்ட அபஸ்மாரனையும் (முயலகன்) மானினையும் ஏவி சிவனை அழிக்க முயன்றனர். ரிஷியினால் ஏவப்பட்ட புலியின் தோலினை ஆடையாக அணிந்து கொண்டார். நாகத்தினையும், மானினையும் கைகளில் உபகரணமாகவும், ஆபரணமாகவும் கொண்டார். முயலகனைக் காலடியில் மிதித்து “ஆனந்த்த் தாண்டவம்” புரிந்தார். ரிஷிகள் தங்களது தவறினை உணர்ந்தனர். உலகியல் நெறிமுறைகளான பிரவிருத்தி மார்க்கத்தினைப் பின்பற்றாமலிருந்ததைச் சிவபெருமான் பிட்சாடனர் வடிவில் ரிஷிகளுக்கு உணர்த்திய சிற்ப வடிவாகும். இப்புராணப் பின்னணியை லிங்க புராணம் விளக்குகின்றது.

  ரிஷிபத்தினி மற்றும் பூத கணம் பின்தொடர பிட்சாடனர்

  கூர்மபுராணத்தில் பிட்சாடனரைப் பற்றி மற்றொரு குறிப்பு கூறப்படுகிறது. பிரம்மன் இப்பிரபஞ்சத்தைப் படைத்தது தாமென்று எண்ணிச் செருக்குற்றிருந்தார். பிரம்மனின் முன் லிங்கோத்பவராக ருத்ரன் தோன்றினார். வேதங்களும், ரிஷிகளும் ஏற்ற நிலையில் பிரம்மன் மறுக்க வேறு வழியில்லாது பிரம்மனின் ஐந்தாவது தலையைச் சிவன் (பைரவ வடிவில்) கொய்ததனால் “பிரம்மஹத்தி தோஷம்” பெற்றார். சிவன் காசி சென்றடைகிறார். பிச்சைப் பாத்திரம் ஏந்திய பிட்சாடனருக்கு மகாலெட்சுமியின் கரங்களால் பிச்சையளித்த கனமே “பிரம்மகபாலம்” மறைந்ததாகவும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாகவும் குறிப்பிடுகிறது.

  சாஸ்த்திரச் சான்றுகள்:

  பிட்சாடனரின் படிமக்கலைக் கூறுகள் காசியப சில்பசாஸ்திரம், சகளாதிகாரம், ஸ்ரீதத்துவநிதி அம்சுமத்பேதாகமம், காமிகம், காரணாகமம், சில்ப ரத்தினம் ஆகியவற்றில் விளக்கப்பட்டுள்ளன.

  படிமக்கலை:

  அம்சுமத்பேதாகமம், இவரைப் பிரம்மனையும், விஸ்வக்சேனரையும் (விஷ்ணுவின் அம்சம்) கொன்றவர் என்று கூறுகிறது. விஸ்வக்சேனரின் எலும்புகளைக் கோர்த்து தோளில் சார்த்தியவாறு ஸ்தானக நிலையில் வலது கால் முன்னோக்கி இருப்பது போல அமைந்திருப்பார்.

  இவர் ஆடையில்லாத மேனியராகக் காணப்படுவார். சிவனுக்குரிய சகலாபரணங்களும் அணிந்திருப்பார். கைகளில் பிரம்ம கபாலப் பாத்திரம் ஏந்தி, பூதகணம் தம் தலையில் பிச்சைப் பாத்திரத்துடன் பின் தொடரச் செல்வார். தலையில் ஜடாபாரம் அணிந்து, பிறைச் சந்திரனைச் சூடியிருப்பார். அருகில் ரிஷி பத்தினி நின்றிருப்பார். பிட்சாடனர் இடையில் சர்ப்ப மேகலை அணிந்திருப்பார் (திருவாமாத்தூர்) முன் இடது கையில் கபாலமும், முன் வலது கை மானைத் தொட்டவாறும் அல்லது மானிற்கு அருகம்புல் தருவது போலவும் பின் வலது கை நாகத்தைப் பிடித்தவாறும் அமைந்திருக்கும்.

  காஞ்சிக் கைலாசநாதர் கோயிலில் இரண்டு கைகளைக் கொண்ட பிட்சாடனர் படிமம் அமைந்துள்ளது. ஒரு கையில் சிகிபீஞ்சையும் (மயில்தோகைக் கற்றை) மற்றொரு கையில் அக்க மாலையைப் பிடித்தவாறு சின்முத்திரையில் அமைந்திருக்கும்.

  சிறப்பு:

  பிட்சாடனர் சிற்பம் சோழர்காலத்தில் புகழ்பெற்ற சிற்பமாகும். தஞ்சைப் பெரிய கோயிலில் கற்சிற்பமாகவும், உலோகச் சிற்பமாகவும், அதற்குரிய அணிகலன்களைப் பெற்றிருந்ததாகவும் கல்வெட்டுக்களில் குறிப்புகள் இருக்கின்றன. கல்வெட்டு இவரைப் “பிச்சதேவர்” என்று குறிப்பிடுகிறது. சோழர்காலச் சிவாலயங்களில் தேவகோட்டங்களில் இடம்பெற்றதுடன் உற்சவமூர்த்தியாகவும் போற்றப்பட்டார். சோழர் கோயில்களில் திருநாமநல்லூர், நாகப்பட்டினம், திருக்காரவாசல், வழுவூர், கரந்தை, திருச்செங்காட்டங்குடி, மேலப்பெரும்பள்ளம் ஆகிய கோயில்களில் உலோகத் திருமேனியராக விளங்குகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:04:04(இந்திய நேரம்)