தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பரசுராம அவதாரம்

  • ராமவதாரம்

    முனைவர் கி.கந்தன்,
    துறைத்தலைவர்,
    சிற்பத்துறை.

    விஷ்ணுவின் அவதாரங்களில் சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்களால் அறியப்பட்ட அவதாரம் ராமவதாராமாகும். விஷ்ணு முழுமையாக ஓர் மனிதனாக இப்புவியில் தோன்றி வாழ்ந்து மறைந்த நிகழ்வுகள் இவ் அவதாரத்தின் புராணப் பின்னணியாக அமைகிறது. சூரியக் குலத்தில் தசரதனின் மகனாகத் தோன்றியவர் ராமன் ஜனகனின் மகளான சீதையை மணந்து, பரதன் முடியினைச் சூடுவதற்காக 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார். இந்நிலையில் ராமனின் துணைவியான சீதையை இலங்கையின் வேந்தன் இராவணன் கவர்ந்து சென்றான். சீதையை மீட்டிட தமது இளையோன் லட்சுமணன் மற்றும் அஞ்சனையின் மகளான ஆஞ்சநேயரின் உதவியுடன் சேது சமுத்திரத்தைக் கடந்து அசோகவனத்தில் இருந்த சீதையினை மீட்டு வந்தார். இதன் பின் ராமன் முடிசூடி பன்னெடுங்காலம் ஆட்சி புரிந்ததாக இராமாயணம் வாயிலாக அறிய முடிகிறது. தமிழகத்தில் இராமாயணம் என்பது கம்பரால் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதில் கம்பர், தமிழ்ப் பண்பாட்டு மரபு பிறழா வண்ணம் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியதாக்க் கம்பராமாயணத்தை உருவாக்கினார்.

    இராம அவதாரம்

    சான்று:

    இந்திய அளவில் இந்தியா முழுமையும் பல்வேறு இலக்கியச் சான்றுகளைப் பெற்றுள்ள இராமவதாரம் தொடர்பான சான்றுகள் தமிழகத்தில் சங்ககாலம் முதலே அறிய கிடைக்கிறது. இதனைத் தொடர்ந்து சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் இது தொடர்பான சான்றுகள் இராமரை முதன் முதலாக அவதாரமாகக் குறிப்பிட்டுள்ளன. கி.பி. 6 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்ற பக்தி இயக்கக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆழ்வார்களின் நாலாயிரந்திவ்வியப் பிரபந்தத்தில் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது.

    தமிழகக் கலையில் இராமன்:

    தமிழகக் கலையில் மகாபலிபுரத்தில் இராம அவதாரம் தொடர்பான கல்வெட்டு ஒன்று காணக்கிடைக்கிறது. இக்கல்வெட்டு ஏறக்குறைய கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம். கலை வடிவங்கள் என்ற வகையில் தொடக்கக்காலக் குடவரைகளிலும், கட்டுமான கோயில்களிலும் இராமரின் படிமம் இடம் பெறவில்லை. முற்காலச் சோழர் காலத்தில் குறிப்பாக முதலாம் பராந்தகன் வட ஆற்காடு மாவட்டத்தில் தொண்டைமாநாடு என்ற இடத்தில் இராமர் பெயருடைய கோதண்ட இராமேஷ்வரர் கோவில் ஒன்று எடுப்பிக்கப்பட்டது. இக்கோயில் முதலாம் பராந்தகனால் கட்டப்பட்டது என்பதை கல்வெட்டுக்கள் மூலம் (ARE 286/1906 மற்றும் 230/ 903) அறியமுடிகிறது. அதன் தொடர்ச்சியாகச் சோழ மன்னன் முதலாம் பரந்தகனால் கி.பி.10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புள்ளமங்கை, முதலாம் ஆதித்தனால் கி.பி 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கண்டியூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் எடுப்பிக்கப்பட்ட கோயில்களின் இராமரின் படிமம் நிருமானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகப் பிற்காலச் சோழர் காலத்தில் குறிப்பாக முதலாம் குலோத்துங்கனின் கி.பி. 1070-1120 பல்வேறு கோயில்களிலும் இராமன், இலக்குமணன், சீதை மற்றும் ஆஞ்சநேயரின் படிமங்கள் நிர்மாணிக்கப்பட்டன. கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆட்சியைத் தொடங்கிய விஜயநகரப் பேரரசர்கள் இந்து மதத்தில் வைணவச் சார்பாளர்கள் ஆவார்கள். அதனால் இவர்களின் ஆட்சிக் காலத்தில் எடுப்பிக்கப்பட்ட வைணவ ஆலயங்களில் இராமர் படிமம் அதிக அளவு அமைக்கப்பட்டன. இராமருக்காகத் தனிக்கோயில் கட்டிடும் ஓர் மரபும் தமிழகத்தில் உருப்பெற்றது. இம்மரபு தஞ்சை, மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் ஆட்சி செய்த நாயக்கர்கள் காலத்திலும் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மராட்டியர் காலத்திலும் தொடர்ச்சியாக வந்தது.

    படிமக்கலை:

    இராமர் மனிதவடிவில் தோன்றியவர் என்ற பின்னணியில் இவரின் சிற்பங்கள் இரு கைகளுடனே அமைந்திருக்கும். இதில் வலது கையில் அம்பும், இடது கையில் வில் இடம்பெற்றிருக்கும். நின்ற நிலையில் இச்சிற்பம் உடலமைதியில் திரிபங்கம் என்று கூறக்கூடிய மூன்று வளைவுகளைக் கொண்டதாக்க் காட்டப் பெற்றிருக்கும். இப்படிமத்தின் வலப்பகுதியில் சீதை நின்ற நிலையில் அமைக்கப் பெற்றிருக்கும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:04:14(இந்திய நேரம்)