தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • அனுமன்

  முனைவர் கி.கந்தன்,
  துறைத்தலைவர்,
  சிற்பத்துறை.

  இந்து மதத்தில் வைணவ மரபில் இடம்பெற்றுள்ள சிறு தெய்வங்களான ஆதிஷேசன், கருடன், விஸ்வக்சேனர் ஆகியோர் பல்வேறு புராண பின்னணிகளால் சிறப்பு பெற்றவர். இவர்களில் அனுமன் அல்லது ஹனுமன் எனப்படுபவர் இந்தியா முழுமையிலும் வழிபடப்படும் ஓர் சிறு தெய்வமாகும். இந்திய காப்பியங்களில் ஒன்றான இராமாயணம் ராமனுக்கு அடுத்த நிலையில் பேசப்படுபவன் அனுமனாவான். மேலும் இந்திய வழிபாட்டு மரபில் தொன்மைக்கால விலங்கு வழிபாட்டின் தொடர்ச்சியாக அனுமன் வழிபாடு அமைக்கப்பட்டுள்ளது. கலை வரலாற்று ஆய்வாளர்கள் பலர் Proto Dravidian மற்றும் Pre-Dravidian என்று கருதுகின்றனர்.

  அனுமன்

  தொன்மம் :

  ‘அனுமன்’ என்ற வடமொழி சொல் ஆனமந்தி (ஆண்குரங்கு) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் சங்க இலக்கியங்களில் மந்தி என்ற சொல் பெண் குரங்கினைக் குறிப்பிடும் சொல்லாக இருந்து வந்ததின் அடிப்படையில் மேற்கூறிய கோட்பாடு என்பது தவறானதாக இருக்கலாம் என்று மூர்ரே (murray) என்ற ஆய்வாளர் கருதுகின்றார். அனுமன் என்பவர் ஆஞ்சிநேயர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் வாயுவுக்கும், அஞ்சனைக்கும் மகனாகப் பிறந்தார். அஞ்சனையின் மகன் என்ற நிலையில் இவர் ஆஞ்சிநேயர் என்று பெயர் பெறுகிறார். அனுமனின் தாடைப்பகுதி (Hanu-Jaw) அகன்று காணப்படுவதால் அதன் அடிப்படையில் இவர் அனுமன் என்று பெயர் பெற்றார் என்று கூறப்படுகிறது. அனுமனின் தாயான அஞ்சனா என்பவர் மிகவும் அழகான விண்ணுலக தேவதையாக இவன் தான் பெற்ற சாபத்தால் பெண் வானர வடிவில் புவியில் தோன்றினாள். இவள் கேசரியுடன் அனுமனை ஈன்றெடுத்தாள் என்று ஒரு புராணத்தின் வாயிலாக அறியமுடிகிறது. இருப்பினும் அனுமன் வாயுவின் குமாரன் என்பதுபெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஓர் புராண கதையாகும்.

  பிரம்மச்சாரியான அனுமன் எந்நிலையிலும் யாராலும் வீழ்த்த முடியாத ஒரு வரத்தினைப் பிரம்மனிடமிருந்து பெற்றிருந்ததால் மேலும் தேவைக்கேற்ப உருமாறும் ஓர் வல்லமையும் அனுமனுக்குப் பிரம்மனால் அளிக்கப்பட்டிருந்தது. அழிவற்றவனாக அனுமன் வாழ்ந்திடும் வரம் சிவனால் அளிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சிறப்புக்களை பெற்ற அனுமன் சுக்ரிவனின் இருப்பிடத்திற்கு அருகே வந்த போது அனுமன் ராமனைச் சந்தித்ததில் பெயர் பெற்றவன் இராமாயணத்தில் சுந்தரகாண்டம் என்பது அனுமனை மையப்படுத்தி அமைந்தது என்று கூறலாம். இலங்கைக்குச் செல்லுகையில் அசோகவனத்தில் சீதையைச் சந்தித்தல், இலங்கா தகனம் லங்காதரன் என்று கூறப்படும் இலங்கையை அழித்த நிகழ்வு, இராவணனுடனான போரில் இராமனுடன் இணைந்து செயல்பட்ட போது மாண்டவர்களை உயிர்பிக்க சஞ்சிவிமலையை எடுத்து வந்தது, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அனுமனின் வல்லமையின் வெளிப்பாடாக அமைகிறது.

  கலை :

  தமிழ்க் கலையில் ஏறக்குறைய கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து அனுமன் தொடர்பான கல்வெட்டுச் செய்திகள், படிமக்கலைச் சான்றுகள் கிடைக்கப்பெறுகின்றன. தொடக்க நிலையில் வைணவக் குழுபடிமத்தில் ஒருவராக இடம்பெற்ற அனுமன் பின்னர் தனிக் கடவுள் என்ற நிலையில் உயர்த்தப்பட்டார்.

  முற்காலச் சோழர் காலத்தில் கிட்டத்தட்ட இடம்பெற்றுள்ள இராமாயணக் கதை நிகழ்வுகளை வெளிப்படுத்தும் சிற்றுருவ தொடர் சிற்பங்களில் அனுமனின் வடிவமும் அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வைணவ ஆலயங்களில் அனுமனின் கல் மற்றும் செப்புப் படிமங்கள் உருவாக்கப்பட்டன. விஜயநகர ஆராய்ச்சியாளர்கள், வைணவச் சார்பாளர்கள் என்ற நிலையில் அவர்களின் காலத்தில் அனுமனின் படிமங்கள் அதிக அளவில் உருப்பெற்றன. குறிப்பாக, பஞ்சமுக ஆஞ்சநேயர் என்ற படிமம் இவர்களின் கலைப்படைப்பாகும். இப்படிமத்தின் முன்நோக்கியுள்ள முகம் வானரவடிவிலும் வலப்புறத்தில் நரசிம்மரின் முகத்தோற்றத்திலும் இடதுபுறத்து முகம் கருடனின் முகத்தோற்றத்துடனும் பின்புறத்தில் உள்ள முகம் பன்றியின் வடிவில் காணப்படும். மேல்நோக்கி உள்ள முகம் குதிரையின் முகத்தோற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இப்படிமம் கைகளில் வாள், திரிசூலம், கட்வங், பாசம், அங்குசம், மலை, மரம் மற்றும் மண்டை ஓட்டினைத் தாங்கியவாறு அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு கைகளில் கோமுத்ர அமைப்பிலும் இருந்திட வேண்டும் ஸ்ரீ தத்துவ நிதி விளக்கியுள்ளது.

  பொதுவாக அனுமனின் படிமம் என்பது இராமனின் படிமம் வலது பக்கம் அமைக்கப்பட்டிருக்கும் இதன் உயரம் இராமனின் மார்பு அளவு வரை அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு கைகளுடன் காணப்படும் இப்படிமத்தின் வலது கரம் பணிவின் அடையாளமாக வாயின் மீது வைக்கப்பட்டிருக்கும் இடது கரம் தொங்கவிடப்பட்ட நிலையில் காணப்படும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:05:04(இந்திய நேரம்)