திருக்குற்றாலக் குறவஞ்சி
பாடல் கருத்து
Theme of the Poem
ஓர் இடம் விட்டு வேறு இடத்திற்கு ஓடிக்கொண்டிருப்பது பூக்களோடு கூடிய புது வெள்ளப் பெருக்கு. மக்கள் இடம் பெயர்வது இல்லை.
முனிவர்களின் ‘உள்ளம்’ மட்டுமே தங்களின் தவ வலிமையால் மனம் ஒடுங்கிக் காணப்படும். இல்லறத்தினர் அன்பால் இணைந்து-பிணைந்து உளம் மகிழ்ந்து வாழ்கின்றனர்.
ஆணும் பெண்ணும் இல்லற நெறியில் இன்புறுவதால் பெண்களின் இடை (இடுப்பு) எப்பொழுதும் துன்புற்ற நிலையிலேயே உள்ளது. மக்கள் தங்கள் தேவை நிறைவேறவில்லை, கிடைக்கவில்லை என்று வாடியதே இல்லை.
முத்துக்களைப் பெற்றெடுப்பதால் சங்குப் பூச்சிகள் துன்புற்றன. மக்கள் வருத்தம் அடைவது இல்லை.
மண்ணில் போடப்படுவது விதைகள் மட்டுமே. சிறுவர் முதல் பெரியோர் வரை பயன் அற்றவர் என்று யாரையும் ஒதுக்கி வைப்பது கிடையாது.
பெண்களின் கால்களில் அணிந்துள்ள கிண்கிணிகள் மட்டுமே ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும். அங்கு துன்பமுற்று புலம்பக் கூடிய மக்கள் ஒருவரும் இல்லை.
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கனுள் வீடுபேறு அடைவதற்குரிய அறத்தையும், புகழையும் மட்டுமே மக்கள் விருப்பத்தோடு தேடிக்கொண்டிருக்கிறார்கள். உலக வாழ்க்கைக்கு மட்டுமே தேவையான செல்வத்தை மனிதர்கள் ஒருபோதும் தேடி அலைவது இல்லை.
மேற்கூறிய அனைத்து சிறப்புகளையும் (தன்னகத்தே) பெற்று விளங்குவது குற்றாலநாதர் வாழுகின்ற எங்கள் சிறந்த நாடாகும்.