மூவருலா பாட அறிமுகம்
Introduction to Lesson
தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் உலா என்பது ஒன்றாகும்.
பாட்டில் இடம்பெறும் தலைவன் வீதி உலா வருவதைச் சிறப்பித்துப் பாடுவதாகும்.இதனை
உலாப்புறம் எனவும் வழங்குவர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற
நால்வகைப் பாடல் வகையில் கலிவெண்பாவால் இயற்றப் பெறும்.

தலைவன் வீதி உலா வருகையில், அவ்வீதியிலுள்ள பேதை, பெதும்பை, மங்கை,
மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற ஏழுவகைப் பருவப் பெண்களும்
தலைவனைக் கண்டு காமுறுவதாகப் பாடப் பெறுவதாகும். தலைவன் பெயர்
கூறப்படுவதாலும், அவனைக் கண்டு மகளிர் காமுற்றதாக உரைப்பதாலும் இது
புறப்பொருளைச் சார்ந்த பெண்பாற் கைக்கிளைத் திணையுள் அடங்கும். கைக்கிளை
என்பது ஒருதலைக் காமம் ஆதலின் இது பாடாண் திணைக்கு உரியதாகும்.

அரசர், வள்ளல், வழிபடும் தெய்வம், தம் ஆசிரியர் மீது உலாக்கள் பாடப்பெறும்.

பாட்டுடைத் தலைவன் பெருமை, நீராடுதல், ஊர்திகளில் செல்லுதல்,உடன் வருவோர்,
மகளிர் கூட்டம் காத்திருத்தல், காமுறுதல் ஆகியன உலாவின் முதற்பகுதியாகவும்,
அதன்பின் ஏழுவகைப் பருவ மங்கையரின் இயல்புகள், அழகுபடுத்தல், விளையாடுதல்,
தலைவரைக் காணுதல், காமுறுதல் என்பன இரண்டாம் பகுதியாகவும் கூறப்பெறும்.

மூவருலா எனும் இந்நூல் கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரால் பாடப் பெற்றதாகும்.
விக்கிரம சோழன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன், அவன் மகன்
இரண்டாம் இராசராசன் ஆகியோர் மீது தனித்தனியே பாடப்பெற்ற மூன்று உலாக்கள்
அடங்கியதாகும். இதனால் இந்நூலுக்கு மூவருலா என்று பெயர். விக்கிரம சோழன்
உலா342 கண்ணிகளையும், குலோத்துங்க சோழன் உலா 387 கண்ணிகளையும், இராசராச
சோழன் உலா 391 கண்ணிகளையும் உடையன. கலிவெண்பாவில் ஓரெதுகை அமைந்த
இரண்டு அடிகளைக் கண்ணி எனக் கூறுவர்.

இந்த உலாவில் சோழருடைய குலச்சிறப்பு, அரசர்களின் பெருமை, பள்ளி எழுதல்,
அழகு செய்தல், யானையின் மீது அமர்தல், உடன் வருவோர், அவர்கள் கூற்று என்பன
முதற்பகுதியாகவும், ஏழுவகைப் பருவ மகளிரின் அழகு, உணர்ச்சிகள், விளையாட்டுகள்,
காமுறுதல், பேசுதல் ஆகியன இரண்டாம் பகுதியாகவும் கூறப்பெற்றுள்ளன.