4. சிற்றிலக்கியம்

கலிங்கத்துப் பரணி

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


கலிங்கத்துப் பரணி என்ற நூலின் ஆசிரியர் சயங்கொண்டார். இவர் முதற்குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவராக விளங்கியவர்.

இவருடைய ஊர், இயற்பெயர், பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை வரலாறு முதலிய செய்திகள் தெளிவாகத் தெரியவில்லை.தீபங்குடிப்பத்து என்ற நூலில் உள்ள மூன்றாவது பாடலாலும், தமிழ் நாவலர் சரிதையின் 117-வது பாடலாலும் இவருடைய ஊர் தீபங்குடி என்பது தெரிகிறது. இது சோழநாட்டில் கொரடாச்சேரி என்ற ஊரின் அருகிலுள்ள தீபங்குடியாகும். இவருடைய காலம் கி.பி.1070-1118 என்பர். இவரைப் பிற்காலத்துப் புலவரான பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பரணிக்கோர் சயங்கொண்டான் எனப் புகழ்ந்து பாடி உள்ளார். இவர் இசையாயிரம், உலாமடல் என்னும் நூல்களையும் இயற்றியுள்ளார்.

முதற் குலோத்துங்க சோழன் சோழநாட்டை ஆண்ட தலைசிறந்த மன்னர்களுள் ஒருவன். இவன் சாளுக்கிய குலத்தில் பிறந்தவன். இவன் தந்தை சாளுக்கிய குலத்து இராசராசன். தாய் அம்மங்கை. அம்மங்கை என்பவள் முதலாம் இராசராசனின் மகள். இவன் போர்ப் பயிற்சி மிக்கவன். இராசேந்திரன், உபய குலோத்தமன், அபயன், சுங்கந் தவிர்த்த சோழன் என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றவன். கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து ஆட்சி புரிந்தான். சோழநாட்டில் ஆட்சி செய்த அதிராசேந்திரன் கி.பி.1070 இல் நோயுற்று இறந்தான். அவனுக்கு அரசாளும் வாரிசு இல்லை. எனவே, குலோத்துங்க சோழன் சோழநாட்டின் ஆட்சிப் பொறுப்பை, சோழ அரசனுடைய மகள் வயிற்றுப் பேரன் என்ற உரிமையினால் ஏற்றான். இவனுடைய காலம் கி.பி. 1070- கி.பி. 1120 ஆகும். இவன் ஐம்பது ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய தலைமைப் படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமானைக் கொண்டு கி.பி.1112இல் வட கலிங்கரோடு போர் நிகழ்த்தி வெற்றி பெற்றான். இவன் பட்டத்தரசி மதுராந்தகி என்பவள். இவள் இரண்டாம் இராசேந்திர சோழனது மகள். தியாகவல்லி, ஏழிசைவல்லபி என்று வேறு இரு மனைவியர் இருந்தனர். மதுராந்தகிக்கு ஏழு மக்கள் இருந்தனர். இவன் மேலைச் சாளுக்கியர், நுளம்பர், பாண்டியர், சேரர், தென் கலிங்கர், வட கலிங்கர் ஆகியவர்களுடன் தனித்தனியாக ஏழு முறை போர் தொடுத்து வெற்றி பெற்றுள்ளான். இவன் தனது 42-வது ஆட்சி ஆண்டில் வடகலிங்க வேந்தன் அனந்தவட்மன் என்பவனோடு போரிட்டு வெற்றி பெற்றான். கி.பி.1120-இல் இறந்தான்.

கருணாகரத் தொண்டைமான்

பல்லவர் குலத்தில் தோன்றிய சிற்றரசர்களுள் பெருஞ்சிறப்புடையவன் கருணாகரத் தொண்டைமான். இவன் முதற்குலோத்துங்க சோழனுடைய தலைமைப் படைத் தலைவனாகத் திகழ்ந்தான். இவன் கி.பி.1122இல் வடகலிங்க வேந்தன் அனந்தவட்மனைப் போரில் வென்று நாட்டை அழித்தான். குலோத்துங்க சோழன் இவனுக்கு வேள், தொண்டைமான் என்ற பட்டங்களை வழங்கினான். இவனுடைய ஊர் சோழவள நாட்டில், இப்போது வண்டுவாஞ்சேரி எனப்படும் வண்டாழஞ்சேரி யாகும்.