மூவருலா ஆசிரியர் அறிமுகம்
Introduction to author
     மூவருலாவின் ஆசிரியர் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர். இவர் சோழவள
நாட்டில் தஞ்சை ஒட்டங்காடு என்ற இடத்திற்கு அருகில் உள்ள மலரி என்னும் ஊரில்
பிறந்தவர். இவர் தந்தையார் சிவசங்கர பூபதி. தாயார் வண்டார் பூங்குழலி.
ஒட்டக்கூத்தருடைய இயற்பெயர் கூத்தர் என்பதாகும். இது தில்லை நடராசப்
பெருமானுடைய திருப்பெயராகும். கலைமகளை வழிபட்டு ஈட்டி எழுபது என்ற நூலைப்
பாடி, வெட்டப்பட்ட தலைகள் ஒட்டி உயிர் பெறுமாறு பாடியதால் ஒட்டக்கூத்தர் என்று
அழைக்கப் பெற்றார் என்றும், விக்கிரம சோழன் தன்மீது பாடிய உலாவில் உள்ள ஒரு
கண்ணியை ஒட்டிச் செய்யுள் இயற்றும்படி கேட்க, உடன் ஒட்டிச் செய்யுள் பாடியமையால்
ஒட்டக்கூத்தர் எனப் பெற்றார் எனவும் சிலர் கூறுவர். கூத்தர் என்பது இவரின்
இயற்பெயர் என்றும், ஒட்டம் என்பது இடத்தைப் பொ
ருத்து வந்ததென்றும் ஆய்வாளர்
சொல்லுவர்.

     இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும். வடமொழி நூல்களிலும் நல்ல புலமை
பெற்றவர். சோழ மன்னர் மூவருக்கும் அரசவைப் புலவராக இருந்தவர். இம்மூவருள்
ஒருவன் இவருக்கு அரிசிலாற்றங்கரையில் ஒரு ஊரையே கொடுத்தான். இது கூத்தனூர்
என வழங்கப்பெறுகிறது. இவ்வாறு தமிழகமெங்கும் பல ஊர்கள் இவர்
பெயரில் திகழ்கின்றன.

     இவர் அரும்பைத் தொள்ளாயிரம், ஈட்டி எழுபது, காங்கேயன் நாலாயிரக்
கோவை, குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், தக்கயாகப் பரணி
முதலிய
நூல்களையும் எழுதியுள்ளார். இவர் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், காளக்கவி
என்றும் அழைக்கப் பெற்றார்.

குலோத்துங்க சோழன் உலா

     இரண்டாம் குலோத்துங்க சோழன் வரலாறு:

     கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரால் எழுதப்பெற்ற மூவருலா என்னும் நூலில்
இரண்டாம் குலோத்துங்க சோழன் உலாத்தலைவனாக இடம் பெறுகிறான். தன்
தந்தை விக்ரம சோழனால் கி.பி. 1133 இல் இளவரசர் பட்டம் சூட்டப் பெற்றான்.
பிறகு 1135 இல் அரியணை ஏறினான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் நாடு
எல்லா வளங்களும் பெற்று அமைதியான ஆட்சி நடந்தது.

     இவனுக்கு     வழங்கப்பெறும்     சிறப்புப் பெயர்கள் அபயன், அநபாயன்,
எதிரிலிப் பெருமாள், கலிகடிந்த சோழன், திருநூற்றுச் சோழன், பெரிய
பெருமாள்
என்பனவாகும். இவனுக்கு தியாகவல்லி, முக்கோக்கிழானடிகள் என்ற
இரு     மனைவியர்     இருந்தனர். இருவரில் தியாகவல்லி பட்டத்தரசியாக
இருந்தவள். இவளுக்குரிய சிறப்புப் பெயர் புவனமுழுதுடையாள் என்பதாகும்.
இராசராசன் என்னும் பெயருடைய மகன் ஒருவன் இருந்தான்.

     தில்லையில் இவன் செய்த திருப்பணிகளைக் குலோத்துங்க சோழன் உலா,
இராசராச சோழன் உலா, தக்கயாகப் பரணி
ஆகிய நூல்கள் விளக்கமாகக்
கூறுகின்றன.     சிதம்பரம்     சிவன் கோவிலுக்குப் பொன் வேய்ந்து, திருச்சுற்றுச்
சுவரும் அமைத்தான்.

     ஏழுநிலைக் கோபுரங்கள் அடங்கிய சிவகாமிக் கோட்டம் அமைத்தான். அதனருகே
திருச்சுற்று மாளிகையும், திருக்குளமும் அமைத்தான். பொன்னாலும் மணியாலும் அழகு
செய்யப்பெற்ற தேர் ஒன்றைச் செய்தான். நகரெங்கும் பல மண்டபங்களைக் கட்டினான்.
இவனது ஆட்சிக் காலத்தில் எல்லா வளங்களும் நிறைந்த பெருநகரமாகச் சிதம்பரம்
விளங்கியது.

     திருவாரூர்க் கோவிலில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
சைவ நாயன்மார்களுக்குச் சிலைவைத்து வழிபாட்டிற்கும், விழாவிற்கும் செலவுசெய்ய
நிலங்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறான். இவன் வைணவ சமயத்தில் கருத்து
வேறுபாடு கொண்டிருந்தான்.

     இவன் தமிழ்ப் புலமையும், பல்வகைச் செய்யுள் இயற்றும்     ஆற்றலும்
இலக்கிய, இலக்கண அறிவும் கொண்டிருந்தான். இத்தகைய திறமையானவனுக்கு
ஆசிரியராக     இருந்தவர்     ஒட்டக்கூத்தர். ஒட்டக்கூத்தர் இவனை ஞான
கெம்பீரன், நித்திய கீத பிரமோகன், தூரக வித்தியா விநோதன்
என்று
புகழ்ந்து கூறியுள்ளார். ஒட்டக்கூத்தர் இவனது அவைக்களப் புலவராக இருந்தார்.
இவர் இவன்மீது குலோத்துங்க சோழன் உலா, பிள்ளைத்தமிழ் போன்ற
நூல்கள் இயற்றியுள்ளார்.

     திருநாம     நல்லூர்,     திருவதிகை, திருமுதுகுன்றம் போன்ற
ஊர்களிலும் திருப்பணிச் செய்துள்ளான். இவன் கி.பி.1133 லிருந்து 1150 வரை
சோழ நாட்டை ஆண்டான். இவன் காலத்தில் சைவ சமயம் ஏற்றம் பெற்றிருந்தது.