கலிங்கத்துப் பரணி
பாட அறிமுகம்
Introduction to Lesson
தமிழில் முதன் முதல் எழுந்த பரணி இலக்கியம் கலிங்கத்துப் பரணி. இது தாழிசை என்ற பாடல் வகையால் அமைந்தது. 599 தாழிசைப் பாடல்களைக் கொண்டதாகும். முதற்குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவரான சயங்கொண்டார் பாடிய இந்நூலை, இரண்டாங் குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவர் ஒட்டக்கூத்தர் தாம் பாடிய தக்கயாகப் பரணி யில், ‘தென் தமிழ்த் தெய்வப் பரணி’ எனப் போற்றியுள்ளார்.
பரணி
பரணி என்பது போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரனைப் புகழ்ந்து பாடுவதாகும்.
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவ னுக்கு வகுப்பது பரணி
என்பது வெண்பாப் பாட்டியல் என்னும் இலக்கண நூலின் சூத்திரம் ஆகும்.