வட பேர்
இமயத்து வான் தரு சிறப்பின்
கடவுள் பத்தி்னிக் கல் கால்கொண்ட பின்,
சின வேல் முன்பின் செரு வெங் கோலத்துக்
கனக- விசயர்- தம் கதிர் முடி ஏற்றி,
செறி கழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னரை,
செயிர்த் தொழில் முதியோன் செய் தொழில் பெருக
உயிர்த் தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டி என்று,
யாண்டும், மதியும், நாளும், கடிகையும்,
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண்கொள;
வரு பெரும் தானை மறக்கள மருங்கின்,
ஒரு பகல் எல்லை, உயிர்த் தொகை உண்ட
செங்குட்டுவன் தன் சின வேல் தானையொடு
கங்கைப் பேர் யாற்றுக் கரை அகம் புகுந்து
பால் படு மரபின் பத்தினிக் கடவுளை
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து-
"கங்கையின் தென் கரையில் ஆரிய மன்னர் அமைத்த பாடியில் புகுதல்"
20
மன் பெரும்
கோயிலும், மணி மண்டபங்களும்,
பொன் புனை அரங்கமும், புனை பூம் பந்தரும்,
உரிமைப் பள்ளியும், விரி பூஞ் சோலையும்,
திரு மலர்ப் பொய்கையும், வரி காண் அரங்கமும்,
பேர் இசை மன்னர்க்கு ஏற்பவை பிறவும்,
ஆரிய மன்னர் அழகுற அமைத்த
தெள்ளு நீர்க் கங்கைத் தென் கரை ஆங்கண்,
வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு-
மாடல மறையோன்
வந்து தோன்றி,
‘வாழ்க, எம் கோ! மாதவி மடந்தை
கானல்- பாணி கனக- விசயர்- தம்
முடித் தலை நெரித்தது; முதுநீர் ஞாலம்
அடிப்படுத்து ஆண்ட அரசே, வாழ்க1'' என-
மாடல மறையோன்
மன்னவற்கு உரைக்கும்:
‘கானல் அம் தண் துறைக் கடல் விளையாட்டினுள்
மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு,
ஊடல் காலத்து, ஊழ்வினை உருத்து எழ,
கூடாது பிரிந்து, குலக்கொடி- தன்னுடன்
மாட மூதூர் மதுரை புக்கு, ஆங்கு,
இலைத் தார் வேந்தன் எழில் வான் எய்த,
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி,
குடவர் கோவே! நின் நாடு புகுந்து
வட திசை மன்னர் மணி முடி ஏறினள்.
இன்னும் கேட்டருள், இகல் வேல் தடக் கை
மன்னர் கோவே! யான் வரும் காரணம்:
மா முனி பொதியில் மலை வலம் கொண்டு,
குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன்,
ஊழ்வினைப் பயன் கொல்? உரைசால் சிறப்பின்
வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன்:
“வலம் படு தானை மன்னவன்- தன்னைச்
சிலம்பின் வென்றனள் சேயிழை” என்றலும்,
தாது எரு மன்றத்து, மாதரி எழுந்து,
“கோவலன் தீது இலன்; கோமகன் பிழைத்தான்;
அடைக்கலம் இழந்தேன்; இடைக் குல மாக்காள்!
குடையும் கோலும் பிழைத்தவோ?” என,
இடை இருள் யாமத்து, எரிஅகம் புக்கதும்;
தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன்
போகு உயிர் தாங்க, பொறைசால் ஆட்டி,
“என்னோடு இவர் வினை உருத்ததோ?” என,
உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்த்ததும்;
பொன் தேர்ச் செழியன் மதுரை மா நகர்க்கு
உற்றதும்- எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து, ஆங்கு
என் பதிப் பெயர்ந்தேன். என் துயர் போற்றி,
செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க்கு உரைக்க;
மைந்தற்கு உற்றதும், மடந்தைக்கு உற்றதும்,
செங்கோல் வேந்தற்கு உற்றதும் கேட்டு;
கோவலன் தாதை கொடுந் துயர் எய்தி,
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து , ஆங்கு,
இந்திர-விகாரம் ஏழுடன் புக்கு, ஆங்கு,
அந்தர- சாரிகள் ஆறு- ஐம்பதின்மர்
பிறந்த யாக்கைப் பிறப்பு அற முயன்று,
துறந்தோர்- தம் முன் துறவி எய்தவும்;
துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள்,
இறந்த துயர் எய்தி, இரங்கி மெய் விடவும்;
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர்முன்
புண்ணிய தானம் புரிந்து, அறம் கொள்ளவும்;
தானம் புரிந்தோன்- தன் மனைக்கிழத்தி
நாள் விடூஉ, நல் உயிர் நீத்து, மெய் விடவும்;
மற்று அது கேட்டு, மாதவி மடந்தை
நற்றாய்- தனக்கு. “நல் திறம் படர்கேன்;
மணிமேகலையை வான் துயர் உறுக்கும்
கணிகையர் கோலம் காணாதொழிக” என,
கோதைத் தாமம் குழலொடு களைந்து,
போதித் தானம் புரிந்து, அறம் கொள்ளவும்;
என் வாய்க் கேட்டோர் இறந்தோர் உண்மையின்,
நல் நீர்க் கங்கை ஆடப் போந்தேன்;
மன்னர் கோவே, வாழ்க, ஈங்கு!’ என-
‘நீடு வாழியரோ,
நீள் நில வேந்து!’ என,
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும்: ‘நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா,
ஒத்த பண்பினர், ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர்; ஏவல் கேளார்;
வள நாடு அழிக்கும் மாண்பினர்; ஆதலின்,
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து, அவன்
பொன் புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்!
பழையன் காக்கும் குழை பயில் நெடுங் கோட்டு
வேம்பு முதல் தடிந்த, ஏந்து வாள் வலத்து,
போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள்:
கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர்- ஐஞ்ஞூற்றுவர்
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு,
ஒரு பகல் எல்லை, உயிர்ப் பலி ஊட்டி,
உரை செல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம் வரும் அல்லல்காலை,
தென் புல மருங்கின், தீது தீர் சிறப்பின்,
மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின்,
நிரை மணிப் புரவி ஓர் ஏழ் பூண்ட
ஒரு தனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங் கதிர்க் கடவுள் ஏறினன் என,
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்;
ஊழிதொறு ஊழி உலகம் காத்து,
வாழ்க, எம் கோ! வாழிய, பெரிது! என-
"மாலைப் பிறை கண்டு மன்னவன் நோக்க, கணி எழுந்து உரைத்தல்"
145
150
மறையோன்
கூறிய மாற்றம் எல்லாம்
இறையோன் கேட்டு, ஆங்கு, இருந்த எல்லையுள்;
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க,
பகல் செல, முதிர்ந்த படர் கூர் மாலை,
செந் தீப் பரந்த திசை முகம் விளங்க,
அந்திச் செக்கர், வெண் பிறை தோன்ற;
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க;
இறையோன் செவ்வியின் கணி எழுந்து உரைப்போன்,
‘எண் நான்கு மதியம், வஞ்சி நீங்கியது;
மண் ஆள் வேந்தே வாழ்க!’ என்று ஏத்த-
" மாடலனைத் தனி இடத்து அழைத்து, சோழ நாட்டின் நிலை பற்றிச் செங்குட்டுவன்
வினவுதல்"
155
160
நெடுங்
காழ்க் கண்டம் நிரல் பட நிரைத்த
கொடும் பட நெடு மதில் கொடித் தேர் வீதியுள்,
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
உறையுள் முடுக்கர் ஒரு திறம் போகி,
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச்
சித்திர விதானத்து, செம் பொன் பீடிகை,
கோயில், இருக்கைக் கோமகன் ஏறி,
வாயிலாளரின் மாடலன் கூஉய்,
‘இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர்,
வளம் கெழு நல் நாட்டு மன்னவன் கொற்றமொடு
செங்கோல் தன்மை தீது இன்றோ?’ என-
"மாடலனுக்குப் பொன்னும், நூற்றுவர்- கன்னர்க்கு
நாடு செல்ல விடையும் அளித்தல்"
175
‘பெருமகன்
மறையோன் பேணி, ஆங்கு, அவற்கு
ஆடகப் பெரு நிறை ஐ- ஐந்து இரட்டி,
தோடு ஆர் போந்தை வேலோன், ‘தன் நிறை
மாடல மறையோன் கொள்க’ என்று அளித்து- ஆங்கு,
ஆரிய மன்னர் ஐ- இருபதின்மரை,
சீர் கெழு நல் நாட்டுச் செல்க’ என்று ஏவி-
"ஓடி உயிர் தப்பிய அரசரையும், கனக விசயரையும்,
ஆரியப் பேடியையும், சோழ பாண்டியர்க்குக் காட்டி வருமாறு கஞ்சுக முதல்வரைச் செங்குட்டுவன்
ஏவுதல்"
180
185
190
‘தாபத
வேடத்து உயிர் உய்ந்து பிழைத்த
மா பெரும் தானை மன்ன-குமரர்;
சுருளிடு தாடி, மருள் படு பூங் குழல்,
அரி பரந்து ஒழுகிய செழுங் கயல் நெடுங் கண்,
விரி வெண் தோட்டு, வெண் நகை, துவர் வாய்,
சூடக வரி வளை, ஆடு அமைப் பணைத் தோள்,
வளர் இள வன முலை, தளர் இயல் மின் இடை,
பாடகச் சீறடி, ஆரியப் பேடியோடு;
எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும்
கஞ்சுக முதல்வர் ஈர்-ஐஞ்ஞூற்றுவர்,
அரி இல் போந்தை அருந்தமிழ் ஆற்றல்
தெரியாது மலைந்த கனக விசயரை
இரு பெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவி-
"செங்குட்டுவன் பிரிவினால் அவனது தேவி வஞ்சி மா நகரில் வருந்தியிருக்கும்
நிலை"
200
205
நிதி துஞ்சு
வியல் நகர், நீடு நிலை நிவந்து
கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை,
முத்து நிரைக் கொடித் தொடர் முழுவதும் வளைஇய
சித்திர விதானத்து, செய் பூங் கைவினை,
இலங்கு ஒளி மணி நிரை இடைஇடை வகுத்த
விலங்கு ஒளி வயிரமொடு பொலந் தகடு போகிய,
மடை அமை செறிவின், வான் பொன் கட்டில்,
புடை திரள் தமனியப் பொன் கால் அமளிமிசை,
இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த
துணை அணைப் பள்ளித் துயில் ஆற்றுப்படுத்து- ஆங்கு,
எறிந்து
களம் கொண்ட இயல் தேர்க் கொற்றம்
அறிந்து உரை பயின்ற ஆயச் செவிலியர்,
‘தோள்-துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக’ என,
பாட்டொடு தொடுத்து, பல் யாண்டு, வாழ்த்த-
"நால் வகை நிலப் பாடல்களையும் கேட்டுக் கோப்பெருந்தேவி மகிழ, செங்குட்டுவன்
வஞ்சி மா நகர் வந்து சேர்தல்"
220
அமை விளை
தேறல் மாந்திய கானவன்
கவண் விடு புடையூஉக் காவல் கைவிட,
வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த,
‘வாகை, தும்பை, வட திசைச் சூடிய
வேக யானையின் வழியோ, நீங்கு’ என,
திறத்திறம் பகர்ந்து, சேண் ஓங்கு இதணத்து,
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-
வட திசை
மன்னர் மன் எயில் முருக்கி,
கவடி வித்திய கழுதை ஏர் உழவன்,
குடவர் கோமான், வந்தான்; நாளை,
படு நுகம் பூணாய், பகடே! மன்னர்
அடித் தளை நீக்கும் வெள்ளணி ஆம்’ எனும்
தொடுப்பு ஏர் உழவர் ஓதைப் பாணியும்-
தண் ஆன்
பொருநை ஆடுநர் இட்ட,
வண்ணமும், சுண்ணமும், மலரும், பரந்து;
விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை,
வண்டு உண மலர்ந்த, மணித் தோட்டுக் குவளை
முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின்
முருகு விரி தாமரை முழு மலர் தோய,
குருகு அலர் தாழைக் கோட்டுமிசை இருந்து,
‘வில்லவன் வந்தான்; வியன் பேர் இமயத்துப்
பல் ஆன் நிரை யொடு படர்குவிர் நீர்’ என,
காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ,
கோவலர் ஊதும் குழலின் பாணியும்-
ஓர்த்து
உடன் இருந்த கோப்பெருந்தேவி
வால் வளை செறிய, வலம்புரி வலன் எழ,
மாலை வெண்குடைக்கீழ், வாகைச் சென்னியன்
வேக யானையின் மீமிசைப் பொலிந்து,
குஞ்சர ஒழுகையின் கோநகர் எதிர்கொள,
வஞ்சியுள் புகுந்தனன், செங்குட்டுவன்-என்.