தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • அதியமான் கோட்டை

     

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    இது ஒரு சங்ககால ஊர் ஆகும்.

    அதியமான் கோட்டை சங்ககால மன்னரான அதியமானின் தலைநகராகக் கருதப்படுகின்றது. அதியமானைப் பற்றிச் சங்க இலக்கியத்தில் பல குறிப்புகள் உள்ளன. ஜம்பை என்ற ஊரில் “ஸதியபுதோ” அதியமானைக் குறிப்பிடும் தமிழ் பிராமிக் கல்வெட்டு உள்ளது.

    அமைவிடம்

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரியிலிருந்து 6 கி.மீ தொலைவில் சேலம் செல்லும் சாலையில் அதியமான் கோட்டை உள்ளது. இதன் பழைய பெயர் தகடூராகும்.

    தொல்லியல் சான்றுகள்

    இவ்வூரில் இரும்புக்கால, வரலாற்றுத் துவக்கக்கால வாழ்விடம் உள்ளது. இங்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை அகழாய்வு செய்துள்ளது. இந்த அகழாய்வின்போது 5 குழிகள் தோண்டப்பட்டன. இவற்றில் மூன்று பண்பாட்டுக் காலங்களின் சான்றுகள் கிடைத்துள்ளன. முதல் பண்பாட்டுக்காலம் பெருங்கற்காலம் / சங்ககாலத்தைச் சேர்ந்ததாகும். இங்கு கருப்பு-சிவப்பு மற்றும், சிவப்பு நிறப்பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

    இரண்டாம் பண்பாட்டுக் காலத்தில், சங்கம் மருவிய காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட காலச் சான்றுகள் கிடைத்துள்ளன. மூன்றாம் பண்பாடு, பொ.ஆ.11-16 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாகும்.

    இந்த அகழாய்வில் தாய்த் தெய்வம் என்று கருதப்படும் சுடுமண் பொமமைகள், விலங்கு உருவங்கள் மற்றும் அகல் விளக்குகள், பல விலங்குகளின் எலும்புகள், குதிரையின் எலும்பு, காதணிகள், அரிய கல்மணிகள் மற்றும் சங்கு வளையல் துண்டுகள் கிடைத்துள்ளன.

    இங்கு சோழர் காலக் கட்டடப் பகுதிகளும் காணப்படுகின்றன. பொ.ஆ 12 ம் நூற்றண்டைச் சேர்ந்த கோட்டையும் இங்கு இருந்துள்ளது. இன்று இந்த இடம் அழிந்து மண் மேடாகக் காட்சி அளிக்கின்றது.

    மேற்கோள் நூல்

    தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி). 2005 தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேடு. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:57:04(இந்திய நேரம்)