தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சங்ககாலப் பெருவழுதி பாண்டியன் காசுகள்

 • சங்ககாலப் பெருவழுதி பாண்டியன் காசுகள்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  யானை
  மீன் கோட்டுருவம்
  குதிரை உருவம்
  மற்றும் பெருவழுதி
  எழுத்து பொறிப்பு
  மீன் கோட்டுருவம்

  சங்ககாலத்தில் தமிழகத்தை ஆட்சி புரிந்த மூவேந்தர்களில் பாண்டியர்களே தொன்மை மரபினர். இவர்கள் தமது தலை உருவத்துடன் பெயர் பொறித்த காசுகளையும் வெளியிட்டுள்ளனர். பெருவழுதி என்று ஒரு முறை பொறிக்கப்பட்டதுடன், பெருவழுதி பெருவழுதி என இருமுறை பெயர் பொறிக்கப் பெற்ற காசுகளையும் வெளியிட்டுள்ளனர். தலை உருவம் பொறிக்கப் பெற்றவற்றில் பெருவழுதி எனப் பெயர் பொறிப்புள்ள காசுகளைத் தற்பொழுது ஆர்.கிருஷ்ணமூர்த்தி கண்டு வெளிப்படுத்தியுள்ளார். இவர்களது காசுகளில் ஒரு பக்கம் மீன் சின்னம் கோட்டுருவில் இடம்பெற்றிருப்பினும் மறுபக்கம் யானை, காளை, வேலியிட்ட மரம், மீன், ஆமை உள்ள தொட்டி, டாரின் போன்ற சின்னங்களும் இடம்பெறுகின்றன. இதில் இடம்பெற்றிருக்கும் சின்னங்களின் அடிப்படையில் நாணயவியலாளர் ப.சண்முகம் இவற்றிற்கு காலப் பகுப்பு செய்துள்ளார்.

  காலம்:

  முத்திரைக் காசுகளில் இடம்பெற்றிருப்பதைப் போன்று பல்வேறு சின்னங்கள் கோட்டுருவில் இடம்பெற்றிருப்பதை முற்கால காசுகள் (பொ.ஆ.மு. 200-100) எனவும் உருவங்கள் கோட்டுருவாக இல்லாமல் யானை போன்ற உருவங்கள் தனித்து பிரதானமாக இடம்பெற்றிருப்பது இடைக்கால காசுகள் (பொ.ஆ. 1-100) என்றும் யானை உருவம் முதன்மைப்படுத்தப் பெற்று அதன் முன்புறம் திரிசூலம் இடம்பெறும் காசுகள் பிற்காலத்தைச் (பொ.அ.100-200) சேர்ந்தது எனவும் வகைப்படுத்துகின்றார். இதைப் போன்றே ஆர்.கிருஷ்ணமூர்த்தியும் நாணயங்களை வகைப்படுத்தியுள்ளார்.

  கிடைக்குமிடம்:

  பாண்டியரது காசுகள் மதுரை, வைகை ஆற்றுப்படுகையில் அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகை, கரூர், அழகன் குளம், கும்பகோணம் ஆகிய இடங்களில் கிடைக்கின்றன. வட இலங்கையிலும் பாண்டியர்களது காசுகள் கிடைக்கின்றன.

  எடையும் உலோகமும்:

  பெரும்பாலான சங்ககாலப் பாண்டியர் காசுகள் சதுர வடிவமாகவும் சில காசுகள் வட்டவடிவமாகவும் உள்ளன. 0.50 கிராம் எடையிலிருந்து 10.60 கிராம் வரை எடையுள்ள காசுகளும் கிடைத்துள்ளன. இவர்களது முத்திரைக் காசுகள் வெள்ளி அல்லது செம்பு உலோகத்தால் ஆனவை. பெரும்பாலான காசுகள் செம்பினாலானவை. இக்காசுகள் 1.5 கிராம் எடையுடையதாக அரை கார்ஷாப்பணத்திற்குச் சமமானதாக உள்ளன. பிற்காலத்தில் (பொ.ஆ.மு. 100-300) வெளியிடப் பெற்ற ஒரு சில காசுகள் ஈயத்தால் ஆனவையாக உள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:44:25(இந்திய நேரம்)