தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேர மன்னன் மாக்கோதைக் காசு

 • விஜயநகர கால நாணய வழக்காறுகள்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  விஜய நகர அரசு பொ.ஆ. 1336ஆம் ஆண்டு ஹரிஹரர், புக்கர் சகோதரர்களால் துங்கபத்திரை ஆற்றங்கரையில் தோற்றுவிக்கப்பட்டது. இது முகம்மதுபின் துக்ளக் காலத்தில் நிகழ்ந்தது. இப்பேரரசை சங்கம, சாளுவ, துளுவ, ஆரவீடு என்ற நான்கு மரபினர் ஆட்சி நடத்தினர். இவ்வரசு பொ.ஆ. 1565இல் நிகழ்ந்த தலைக்கோட்டைப் போரில் வீழ்ச்சியடைந்தது. இவ்வரசின் தலைநகர் கர்நாடகத்தில் உள்ள ஹம்பியாகும். இவர்களது ஆட்சிப் பகுதியாக ஆந்திர, கர்நாடகப் பகுதிகள் திகழ்ந்தாலும் மதுரையில் முஸ்லீம் ஆட்சியை அழிக்க குமார கம்பணன் தமிழகத்திற்குப் படையெடுத்து வந்தான். இவர்களது ஆட்சி தமிழகத்தில் இருந்ததற்கு இங்குக் கிடைக்கும் கல்வெட்டுக்களே சான்றாகும். இவர்களது நாணயங்கள் தமிழகத்தில் பரவலாகக் கிடைப்பதாக நாணயச் சேகரிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் சென்னை அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பெற்றுள்ள விஜய நகர காசுக்குவியல்களில் ஒன்று கூட தமிழகத்தில் கிடைத்தவை அல்ல என்பது இங்குச் சுட்டத்தக்கது.

  சின்னங்கள்

  இவர்களது காசுகளில் ஒரு பக்கம் மண்டியிட்ட நிலையில் அனுமார் , நிற்கும் கருடன், அஞ்சலி ஹஸ்தத்தில் கருடன், அமர்ந்த நிலை கருடன், சரடுலா (mythical lion), சங்கு சக்கரத்துடன் அமர்ந்த நிலை விஷ்ணு, திமிலுள்ள காளை, படுத்த நிலை காளை, சூரியன், சந்திரன் உமா மகேஸ்வரர், தாமரைமேல் நான்கு கரங்களுடன் பத்மாசனத்தில் அமர்ந்த நிலை சிவன், இடது கரத்தில் திரிசூலம் வலது கரம் அபய முத்திரையில் மற்றொரு கரம் வணங்கும் உமா மகேஸ்வரியை மடியில் தாங்கிய வண்ணம், லட்சுமி நாராயணன், சரஸ்வதியுடன் அமர்ந்த நிலையில் பிரம்மன், யானை, குத்துவாள், சங்கு சக்கரம், ஒன்றையொன்று எதிர்நோக்கும் இரு யானைகள் மற்றும் சங்கு சக்கரம், நரசிம்மர், அழகிய தோரணவாயிலின் முன் நீண்ட கீரீடத்துடன் நிற்கும் வெங்கடேஸ்வரர், வெண்ணையை உண்ணும் பாலகிருஷ்ணன், காளி, யானையைத் தூக்கிச் செல்லும் கண்ட பேருண்ட பறவை, நான்கு யானைகளை நகங்களால் தூக்குவது (அணிகலன்கள் அணிந்த இருதலைகள் கொண்டது) குதிரை, நிற்கும் தாய் மற்றும் தந்தைக்கடவுள், புள்ளியிட்ட வட்டத்திற்குள் யானை, சிம்மாசனத்தில் நீண்ட கிரீடத்துடன் சீதாராமன் லட்சுமணருடன், நடுவில் மாலையிடப்பெற்ற குத்துவாள் அதன் இருபுறமும் ஒன்றை யொன்றை நோக்குவது போல் இரு கருடன், புள்ளியிட்ட வட்டத்திற்குள் படுக்கை நிலையில் செதிலுள்ள மீன், புள்ளியிட்ட வட்டத்திற்குள் மயில், நாமம், நாணேற்றப்பெற்ற வில், அம்பு, உடுக்கை, நர்த்தன கிருஷ்ணன் போன்ற சின்னங்களும் மறுபக்கம் பெரும்பாலும் அந்தந்த அரசர்களின் பெயர்கள் கன்னடம், தெலுங்கு அல்லது தேவநாகரி எழுத்துக்களிலோ அல்லது மூன்று மொழியிலுமோ இடம்பெறும். ஒரு சில காசுகளில் மூன்று வரியிட்ட வட்டத்திற்குள் இரு புறமும் சங்கு, சக்கரம், சோழர் காசுகளில் இருப்பதைப் போன்று நிற்கும் உருவம், குத்துவாள், சங்கு சக்கரத்தின் நடுவே குத்துவாள், இரட்டை வரியிட்ட வட்டத்திற்குள் கண்ட பேருண்ட பறவை, சூரியன், சந்திரன், பூவேலைப்பாடுகள் போன்றவை இடம்பெறும்.

  கண்ட பேருண்ட பறவை
  ஸ்ரீ பிரதாப அச்சுதராய என்ற நாகரி வாசகம்

  எழுத்துப்பொறிப்புள்ள காசுகள்

  ஸ்ரீவிஜய நகர அரசுகளின் காசுகள் அனைத்துமே எழுத்துப்பொறிப்புள்ளவையே. அவற்றுள் சாளுவ வம்ச அரசின் காசுகள் மட்டும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. இவர்கள் கன்னடம், தெலுங்கு, நாகரி எழுத்துக்களையே காசுகளில் பயன்படுத்தியுள்ளனர். விஜயநகர அரசு தோன்றிய காலம் இந்து சமயத்தின் மீட்டுருவாக்கக் காலம் என்பதற்கு தென்னிந்திய நாணயவரலாற்றிற்கும் ஒரு பொற்காலம் என்றால் மிகையாகாது. இக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு நாணயப்புழக்கம் மிகுந்து இருந்துள்ளது. தங்கம், பொன் உலோகத்தாலான காசுகள் வெளியிடப்பெற்றுள்ளன. தங்கக்காசுகள் மிதமிஞ்சிய அளவில் வழக்கில் இருந்துள்ளன. காசின் முன்புறம் வித விதமான சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. காசின் பின்புறம் அதை வெளியிட்ட அரசர்களின் பெயர்கள் பொறிக்கப்பெற்றன. எழுதுப்பொறிப்பில்லாத காசுகளே இல்லை என்ற அளவில் நாணயங்கள் திகழ்ந்துள்ளன. அரசிற்குப் பிற வருவாய்களை விடப் பண வருவாய்க்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பெற்றுள்ளது. சங்கம வம்சத்தைச் சேர்ந்த மன்னர் இரண்டாம் ஹரிஹரர் (பொ.ஆ. 1377-1404) அரசிற்குச் சேர வேண்டிய வரி வருவாய்களைப் பண்டமாக அல்லாமல் காசுகளாக மட்டுமே பெறும்படி ஆணையிட்டுள்ளார். இதுவே விஜய நகர அரசின் பணப்புழக்கத்திற்கு மிகச் சிறந்த சான்றாகும்.

  விஜய நகர அரசுக்கு முன்னர் ஆட்சி செய்த அரசுகளின் (ஹொய்சளர், சேவுனர்கள், காகத்தியர்கள், பிற்காலப் பாண்டியர்கள்)காசுகளையும் இவர்கள் தங்கள் அரசில் பயன்படுத்தியுள்ளனர். ஹொய்சளர் காலத்தில் பயன்படுத்தப்பெற்ற நாணய வழக்காறுகளான கத்யானா, பணா, ஹகா, விசா போன்ற நாணயங்களை இவர்களும் பயன்படுத்தியுள்ளனர்.

  விஜய நகர காசுகளின் உலோகமும் எடையும்:

  விஜய நகர காசுகளைத் தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், செப்புக்காசுகள் என வகைப்படுத்தலாம். உண்மையில் கிடைக்கும் காசுகள் பெரும்பாலும் கலப்பு உலோகத்தால் ஆனவையாகவே உள்ளன.

  தங்கக் காசுகள் :

  காத்யானா, வராகன் (வராகா) என்பது விஜய நகர அரசின் நிலையான தங்கக் காசுகளாகும். இவை 3.5 கிராம்கள் (52 கிரேய்ன்ஸ்) எடையுடையன. வராகன் காசுகளிலேயே கட்டி வராகா, தொட்ட வராகா, சுத்த வராகா போன்ற வகைகள் உள்ளன. காத்யானாவும் சுத்தவராகன் மற்றும் வராகன் இவை ஒரே எடையளவு உடையன. தொட்ட வராகன் என்பது வரகனைப்போல் இரு மடங்கு எடை உடையவையாகும். 7.65 கிராம் (119.7 கிரேய்ன்ஸ்) எடையுடைய தொட்ட வராகன் காசுகளைத் துளுவ வம்ச மன்னர் கிருஷ்ணதேவராயர் வெளியிட்டுள்ளதாக வால்டர் எலியட் குறிப்பிடுகிறார். இவர் திருப்பதி வெங்கடேஷ்வரருக்குக் கனகாபிஷேகத்திற்கு இக்காசுகளை வழங்கியுள்ளார். ஒரிசா. கொண்டவீடு, உதயகிரியை வெற்றிப் பெற்றதன் நினைவாகவும், பெருமாளைக் கௌரவிக்கும் நோக்குடனும் இக்காசுகளை வெளியிட்டுள்ளார்.

  பிரதாப் (pratapa) - அரைவராகன்:

  பிரதாப் என்பது அரை வராகன் எடை உள்ள காசுகளாகும். இவை 1.7 கிராம்கள் 26 தானிய எடை அளவுள்ளவை.

  கடி (kati)

  கடி என்பது கால் வராகன் எடை அளவுள்ள தங்கக் காசாகும். (0.85 கிராம்கள் 26 கிரெய்ன்கள்)

  பணா (Pana)

  பணா என்பது வராகனில் பத்தில் ஒரு பங்கு எடையுள்ள காசாகும். (0.34 கிராம்கள் 13 கிரெய்ன்கள்)

  ஹாகா

  ஹாகா என்பது வராகனில் 40இல் ஒரு பங்கு எடையளவுள்ள தங்கக் காசாகும். (0.064 கிராம்கள் 1.25கிரேய்ன்கள்)

  விஜய நகர கால நாணயப்பெயர்கள்:

  விஜய நகர அரசில் காத்யானா, வராகன், பிரதாப், கடி, பணா, ஹாகா போன்ற தங்கக் காசுகளும், தாரா, பணா என்ற வெள்ளிக் காசுகளும், ஜிடல், தாரா போன்ற செப்புக் காசுகளும் பயன்பாட்டில் இருந்துள்ளன.

  விஜய நகர கால நாணயச்சாலைகளும் , நாணயச்சாலையின் அதிகாரிகளும்:

  இவர்கள் காலத்தில் நாணய அச்சுச் சாலைகள் இருந்துள்ளன. இவை தமிழில் அச்சுச் சாலைகள் என்று அழைக்கப்பெற்றுள்ளன. கன்னடத்தில் கம்மட்டா என்று அழைக்கப்பெற்றுள்ளது. அச்சுப் பனாய அதிஷ்டாயக என்பவர் நாணயச்சாலைகளில் அச்சடிக்கும் காசுகளுக்கு விதிக்கப்பெற்ற வரிகளை வசூலித்ததற்கான சான்றுகள் கல்வெட்டுக்களில் உள்ளன.

  நாணயச் சாலைகள் இருந்த இடங்கள்:

  பர்கூர் காத்யானா, மங்களூரு காத்யானா, கண்டிகொடே வராகா, குட்டி ஹொன்னு, அடோனி ஹொன்னு, தடபத்ரி ஹொன்னு போன்ற காசுகளின் பெயர்கள் கொண்டு இவை அச்சிடப்பெற்ற இடங்களை அறியலாம். தண்டநாயக்கர் போன்ற அரசின் ஆளுநர்கள் காசுகளைத் தாங்களாகவே வெளியிடும் உரிமையினைப் பெற்றுள்ளனர். ஒரு பகுதி ஆளுநரின் காசுகள் பிறப்பகுதிகளில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கசர் ஃபரெடரிக் என்ற அயல்நாட்டுப் பயணி தெரிவிக்கிறார்.

  எழுத்துப்பொறிப்புள்ள காசுகள்

  ஸ்ரீவிஜய நகர அரசுகளின் காசுகள் அனைத்துமே எழுத்துப்பொறிப்புள்ளவையே. அவற்றுள் சாளுவ வம்ச அரசின் காசுகள் மட்டும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. இவர்கள் கன்னடம், தெலுங்கு, நாகரி எழுத்துக்களையே காசுகளில் பயன்படுத்தியுள்ளனர்.

  .
புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:56:03(இந்திய நேரம்)