தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • தே.கல்லுப்பட்டி

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  தே.கல்லுப்பட்டி ஒரு தொல்பழங்கால, வரலாற்றுக்கால ஊராகும்.

  அமைவிடம்

  இவ்வூர் மதுரையிலிருந்து இராசபாளையம் செல்லும் சாலையில், சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு மேற்கே தேவன்குறிச்சி என்ற மலையும், அதே பெயரில் அமைந்த ஊரும் உள்ளது. இவ்வூரில் தான் வரலாற்றுச் சின்னங்கள் காணப்படுகின்றன. தேவன்குறிச்சி மலைக்கருகில் ஒரு பெரிய ஏரியும் உள்ளது.

  சிறப்பு

  தேவன்குறிச்சிக்கு அருகில் நுண்கற்காலக் கருவிகள் கிடைக்கின்றன. இவை இப்பகுதியில் வேட்டையாடி உணவு சேகரித்து வாழ்ந்து வந்த மக்கள் இருந்தமையைப் புலப்படுத்துகின்றன. இவை இடைக்கற்காலத்தைச் சேர்ந்தவையாகும்.

  இங்கு ஒரு இரும்புக்கால, பெருங்கற்கால வாழ்விடம் மற்றும் ஈமச் சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த இடத்தில் இந்திய அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுகள் செய்துள்ளது. இங்கு ஒரு பாறை மறைவிடமும் உள்ளது. இதிலும் பழங்கால மக்கள் வாழ்ந்துள்ளனர்.

  இங்கு நடைபெற்ற அகழாய்வுகளில், புதிய கற்காலத்தின் பின்பகுதி மற்றும் இரும்புக் காலத்தின் முற்பகுதியைச் சேர்ந்த பானையோடுகள், பிற தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. புதிய கற்காலத்தின் சிவப்புப் பானையோடுகளும், கற்கோடரிகளும், கோட்டுருவம் கீரப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்துள்ளன.வரலாற்றுத் துவக்கக்கால இரசட் கலவை பூசப்பட்டு ஓவியம் தீட்டப்பெற்ற பானை ஓடுகளும் காணப்படுகின்றன. ஒரு பிராமி எழுத்துப் பொறிப்புள்ள ஓடும் கிடைத்துள்ளது. ரௌலட்டட் தட்டு வகைப் பானை ஓடு ஒன்றும் கிடைத்துள்ளது.

  இங்கு பாண்டியர்காலக் கல்வெட்டுகளுடன் கூடிய ஒரு சிவன் கோவில், மலைக்குத் தென்கிழக்கே அமைந்துள்ளது. இதன் அருகே பிற்கால நடுகற்கள் உள்ளன.

  இம்மலையின் தெற்கே ஈமத்தாழிகள் மற்றும் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சில, இந்திய அரசு தொல்லியல் ஆய்வுத் துறையில் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இரும்புப் பொருட்கள், கருப்பு-சிவப்புப் பானைகள் கிடைத்துள்ளன.

  இங்கு மணிகள், சங்கு வளையல் துண்டுகள், செர்ட் மற்றும் குவார்ட்ஸால் ஆன கற்கருவிகளும் கிடைக்கின்றன.

  இந்த இடம் தமிழகத்தில் கிடைத்த இரும்புக்கால இடங்களில் மிகப் பழைமையானவைகளில் ஒன்றாகும்.

  மேற்கோள் நூல்

  V.Selvakumar, 1996. Investigations into the Prehistoric and Proto Historic Cultures of the Upper Gundar Basin, Madurai District. Ph.D Dissertation. Poona University.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:09:24(இந்திய நேரம்)