தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேர மன்னன் மாக்கோதைக் காசு

  • திருவெள்ளரை பல்லவர் காலக் கல்வெட்டு

     

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    அமைவிடம் :திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திருவெள்ளரை
    இடம் :திருவெள்ளறையில் உள்ள புண்டரிகாக்ஷப் பெருமாள் கோயிலின்
    பின்புறம் உள்ள கிணற்றில் உள்ளது. இக்கிணறு தற்பொழுது நாலுமூலைப் பெருங்கிணறு என்றழைக்கப்பெறுகிறது.
    அரசன் : தந்திவர்மன்
    வம்சம் :பல்லவர்கள்
    ஆட்சியாண்டு: 5
    பொ.ஆண்டு: 805 (பொ.ஆ 9ஆம் நூற்றாண்டு)
    மொழி : தமிழ்
    எழுத்து : தமிழ்

    கல்வெட்டுப் பாடம்

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ பாரத்வாஜ கோத்ரத்தின் வழித்தோன்றிய பல்லவ திலத குலோத்பவன் தந்திவர்மற்கு யாண்டு நான்காவது எடுத்துக்கொண்டு ஐம்பதாவது முற்றுவித்தான் அலம்பாக்க விஷையநல்லுளான்

    2. தம்பி கம்பன் அரையன் திருவெள்ளரைத் தென்னூர்ப் பெருங்கிணறு இதன் பியர் மார்ப்பிடுங்குப்பெருங்கிணறென்பது இது ரட்சிப்பார் இவ்வூர் மூவாயிரத்தெழு நூற்றுவரோம்

    இரண்டாம் பிரிவு

    3. ஸ்ரீ கண்டார் காணார் உலகத்திற் காதல் செய்து நில்லாதேய் பண்டேய் பரமன் படைத்த நாள்பார்த்து நின்று நையாதேய்

    4. தண்டார் மூப்பு வந்துன்னை-த்தளரச்செய்து நில்லாமுன் உண்டேல் உண்டு மிக்குது உலகமும் அறைய வைமிந்நேய்

    விளக்கம்:

    திருவெள்ளரையின் தென்னூர் பகுதியில் ஒரு கிணறு தோண்டப்பெற்றுள்ளது. அதற்கு மாற்பிடுகு பெருங்கிணறு என்று பெயர் சூட்டப்பெற்றுள்ளது. இது பல்லவ அரசனான தந்திவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இக்கிணறை அமைத்தவன் ஆலம்பாக்க விசையநல்லூழானின் தம்பி கம்பன் அரையன் என்பவன். பல்லவ மன்னன் தந்திவர்ம்மனின் நான்காவது ஆட்சியாண்டில் இக்கிணறு வெட்ட ஆரம்பித்து ஐந்தாவது ஆண்டில் முற்றுவிக்கப்பட்டுள்ளது. இவன் பாரத்துவாஜ கோத்திரத்தின் வழித்தோன்றிய பல்லவ திலக குலோத்பவன் என்று புகழப்படுகிறான். மூவாயிரதெழுநூற்றுவரோம் என்பவர் ஒரு வணிகக்குழுவினராவார். அக்கிணறைக் காக்கவேண்டிய பொறுப்பை இவ்வூர் மூவாயிரத் தெழுநூற்றுவர் ஏற்றுள்ளனர்.

    உலகத்தின் நிலையாமையை எடுத்துக்கூறி மூப்புவந்து நம்மை கொண்டுச்செல்லும் முன் நம்மைப் பற்றி உலகமறிய தர்மகாரியங்களைச் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறது

    சிறப்பு:

    நீர்ப் பாசனத்திற்குக் கிணறுகள் வெட்டுவது பல்லவர் காலத்திலும் நிகழ்ந்துள்ளது. மேலும், இக்கல்வெட்டு வாழ்வின் தத்துவத்தினை விளக்குகிறது. இன்று கண்டவர் நாளை காண இயலாத உலகம் என உலகத்தின் நிலையாமையை எடுத்துக் கூறுகிறது. இறப்பதற்கு முன் தர்ம காரியங்களைச் செய்யுமாறு வலியுறுத்துகிறது. தற்போதும் இந்தக் கிணறு உள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:54:42(இந்திய நேரம்)