தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • வசவசமுத்திரம்

  முனைவர் பா.ஜெயக்குமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை  அறிமுகம்

  பல்லவர்கள் ஆண்ட முக்கியப் பகுதியான தொண்டை மண்டலத்தில் தொல்லியல் சிறப்புக்குரிய இடங்களில் வசவசமுத்திரம் முக்கியமானதாகும். சங்க இலக்கியங்களில் இவ்வூர் தொடர்பான நேரடியான குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை என்றாலும் கூட தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் யவனர் தொடர்புள்ளவைகளில் இவ்விடமும் ஒன்றாகச் சான்றுகளின் வாயிலாக அறியப்படுகிறது.

  அமைவிடம்

  காஞ்சிபுரம் மாவட்டம், செங்கற்பட்டு வட்டத்திலுள்ள வசவசமுத்திரம் சென்னைக்கு அருகில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்திலிருந்து தெற்கே 16 கி.மீ தொலைவிலும், வாயலூருக்கு வடக்கே 4 கி.மீ தொலைவிலும். பாலாறு வங்கக்கடலில் கலக்கும் இடத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள ஊராகும்.

  ஊர்ச் சிறப்பு

  இக்கடற்கரைப் பகுதியில் சங்ககாலத்தில் கீழை மற்றும் மேலை நாடுகளுடன் சிறப்பான கடல் வாணிபத் தொடர்பினைக் கொண்டிருந்த ‘நீர்ப்பெயற்று’ எனும் துறைமுக வணிக நகரம் இருந்ததாகச் சங்க இலக்கியமான பெரும்பாணாற்றுப்படை (319-323) குறிப்பிடுகிறது. இவ்விலக்கியக் குறிப்புகளிலிருந்து இத்துறைமுகத்திற்கு ஏராளமான கப்பல்கள் வந்து சென்றதாகவும், இக்கப்பல்களில் மேற்கிலிருந்து வெண்மை நிறமுள்ள தரமான உயர் வகையைச் சேர்ந்த குதிரைகளும், வடக்கிலிருந்து மக்களுக்குத் தேவையான பல்வேறு உணவுப்பொருட்களும் ஏற்றிக்கொண்டு வந்ததாகவும், இங்கிருந்த மாளிகைகளில் வணிகர்கள் வாழ்ந்ததையும், தெருக்கள் மற்றும் பொருள் பாதுகாக்குமிடங்களான பண்டகச்சாலைகளைக் காவலர்கள் காத்துவந்ததையும், இங்கு உயர்ந்த கலங்கரை விளக்கம் இருந்ததையும் குறிப்பிடுவதிலிருந்து சங்ககாலத்தில் இவ்விடம் ஓர் சிறந்த பன்னாட்டு வணிகத் தலமாக இருந்ததை உணரமுடிகிறது.நீர்ப்பெயற்றுத் துறைமுகத்தை ஆய்வாளர்கள் மாமல்லபுரமாகவும், சதுரங்கப்பட்டினமாகவும் (வசவசமுத்திரம் கடற்கரைப் பகுதியிலேயே வடக்கில் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது) அடையாளப்படுத்துகின்றனர். எனினும், மாமல்லபுரம் பல்லவர் காலத்திலும் (கி.பி 6-7 ஆம் நூற்றாண்டு), சதுரங்கப்பட்டினம் இடைக்காலத்தில் (கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு) சம்புவராயர்களின் ஆட்சிக் காலத்திலும் சிறந்த துறைமுகங்களாக இருந்தவை என்பதால் காலத்தின் பழமையைக் கருத்தில் கொண்டால் நீர்ப்பெயற்று என்பது மாமல்லபுரமாகவோ அல்லது சதுரங்கப்பட்டினமாகவோ இருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதமுடியும். இருப்பினும் வசவசமுத்திரம், மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம் ஆகிய மூன்றும் அவை சிறப்புப் பெற்றிருந்த காலங்களில் பாலாற்றின் வழியாகக் காஞ்சிபுரத்தை இணைத்த பெருமைக்குரியன. தமிழகத்தில் விஜயநகர் ஆட்சிக் காலத்தில்தான் ‘சமுத்திரம்’ என்ற பெயர் தமிழகத்தில் தோன்றியது என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் வசவசமுத்திரம் என்னும் பெயரும் விஜயநகர ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் ஜனனாத நல்லூர் (ஜனனாதன் என்பது இம்மன்னனின் பட்டங்களுள் ஒன்றாகும்) என அழைக்கப்பட்டுள்ளது.

  அகழாய்வுச் சிறப்பு

  வசவசமுத்திரம் பகுதியில் மேற்பரப்பாய்வில் ரோமானிய மதுக்குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இங்கு 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. அகழாய்வில் யவனர் தொடர்புக்குரிய அம்பொரா மற்றும் ரூலெட்டட் மண்பானைகள் கிடைத்துள்ளமை பெரும்பாணாற்றுப்படை இலக்கியக் குறிப்புகளுக்கு வலுசேர்ப்பவையாக அமைகிறது. அரிக்கமேடு அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது போன்று அருகருகே இரண்டு உறைகிணறுகள் மற்றும் துணிகளுக்குச் சாயம் தோய்க்கப் பயன்படுத்தப்பட்ட தொட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டமை சிறப்புக்குரியனவாகும். இது, இத்துறைமுகத்திலிருந்து யவன தேசத்துக்குத் துணி வகைகள் ஏராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

   

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:51:33(இந்திய நேரம்)