தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Untitled Docement

  • சோழர்கள் காலச் காசியல் வழக்குகள்

    (பொ.அ. 9 - 13அம் நூற்றாண்டு)

    மா. பவானி்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை


    சங்ககாலத்தில் மூவேந்தர்களில் ஒருவரான பாரம்பரியத் தொன்மை கொண்ட சோழர் வம்சம் நீண்ட காலங்களுக்குப் பிறகு பொ.ஆ. 9ஆம் நூற்றாண்டில் மீண்டும் தலையெடுத்தது. பல்லவ அரசர்களுக்கு உட்பட்டிருந்த சிற்றரசரான விஜயலாயன், முத்தரையர்களிடமிருந்து தஞ்சாவூரைக் கைப்பற்றி, பின்னர் பல்லவர்களையும் தோற்கடித்து சோழப் பேரரசை நிலைநாட்டினார். இவர்களில் 15க்கும் மேற்பட்ட அரசர்கள் சுமார் 400 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளனர். இவர்களுள் உத்தமசோழன், முதலாம் ராஜராஜன் (பொ.ஆ. 985-1019 ) முதலாம் இராஜேந்திரன் (பொ.ஆ 1014-1044) முதலாம் குலோத்துங்கன் (பொ.ஆ 1070-1122) போன்ற அரசர்களுடைய பெயர் பொறித்த நாணயங்களே கிடைக்கின்றன சோழர் காலக் கல்வெட்டுக்களில் அக்கம், அச்சு, அன்றாடு நற்காசு, காசு, திரமம், மாடை, மதுராந்தகன் மாடை, பணம், பொன், போன்ற பல காசுகள் பெயர்கள் இடம்பெறுகின்றன.

    சின்னங்கள்

    ஸ்ரீ ராஜ ராஜ

    சோழர்களது காசுகளில் ஒரு பக்கம் புள்ளிகளாலான எல்லைக்குள் இடது பக்கம் மீன் வலது பக்கம் அமர்ந்த நிலை புலி, மதிராந்தகன் என்ற வாசகம், நின்ற நிலை மனிதன், நிற்கும் மனித உருவம் இட பக்கம் அல்லது வலப்பக்கம் விளக்கு, வலது நோக்கி நிற்கும் பன்றியின் மேல் வெண்கொற்றக்குடை, இரு சாமரங்கள், வெண்கொற்றக்குடையின் கீழ் அமர்ந்துள்ள புலி செங்குத்தான இரு கயல்கள் போன்ற சின்னங்களும், மறுபக்கம் புள்ளிகளாலான வட்டத்திற்குள் இடதுபக்கம் மீன் வலது பக்கம் அமர்ந்த நிலை புலி, அமர்ந்த உருவம், அவற்றுடன் சொற்றொடர், சங்கு, சக்கரம், வெண்கொற்றக் குடையின் கீழ் வலப்பக்கம்

    நோக்கி அமர்ந்த நிலை, புலி அதற்கு முன்பாகச் செங்குத்தாக நிற்கும் இரு மீன்கள் போன்ற சின்னங்களுடன் எழுத்துப்பொறிப்புக்கள் இடம்பெற்றிருக்கும். முன்புறம் இலங்கை மனிதன் என்று பொதுவாக ஆய்வாளர்கள் அழைக்கப்பெறும் நிற்கும், அமர்ந்த மனித உருவத்தின் வலதோ அல்லது இடது பக்கமோ தேவநாகரியில் "ஸ்ரீ ராஜ ராஜ " என்று எழுத்துப் பொறிக்கப் பெற்றிருக்கும் காசுகளே அதிக அளவில் கிடைக்கின்றன. அரிய வகையாக ஒரு காசில் முன்புறம் நிற்கும் மனிதனின் வலது கையின் கீழ் காரைக்கால் அம்மையார் போன்ற உருவம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவை பொதுவாக முதலாம் ராஜராஜனது காசுகளாகக் கருதப்பெறினும், பிற சோழ அரசர்கள் மற்றும் பாண்டியரது காலத்திலும் தொடர்ந்து புழக்கதிலிருந்திருப்பதை அறியமுடிகிறது

    உத்தமசோழன்
    செப்பேடு
    (சென்னை அருங்காட்சியகம்)

    மற்றொரு வகை சோழர்களது செப்பேடுகளில் (சென்னை அருங்காட்சியகச் செப்பேடு, லெய்டன் செப்பேடு) இருப்பதைப்போல் வெண்கொற்றக்குடையின் கீழ் இடமிருந்து வலமாக நாணேற்றப்பெற்ற வில் , அமர்ந்த நிலை புலி, அதற்கடுத்து இரு செங்குத்தான மீன்கள் உள்ள காசுகளாகும். இவ்வகைக் காசுகளில் அதிகஅளவில் "இராஜேந்திர சோளஹ" என்ற பொறிப்பு உள்ளதால் இது முதலாம் இராஜேந்திர சோழனால் வெளியிடப்பெற்றதாகக் கருதப்பெறுகிறது. ஆயினும் இச்சின்னம் சோழர்களுக்குப் பொதுவானதாகையால் எல்லாச் சோழர்களும் செப்பேடுகளிலும் காசுகளிலும் இச்சின்னத்தைப் பொறிக்கும் வழக்கத்தைப் பின்பற்றியுள்ளனர் .

    சின்னங்கள் மூலம் அறியப்பெறும் அரசியல் குறிப்புகள்

    ஸ்ரீ ராஜ ராஜ

    கல்வெட்டுக்கள் கொண்டு அரசியல் வரலாற்றினை அறிவதுபோல் காசுகளின் சின்னங்கள் கொண்டும் அக்கால அரசர்களின் அரசியல் நிலைகளை ஓரளவு அறியமுடிகிறது. காட்டாக, தௌலேஸ்வரத்தில் (ஆந்திர மாநிலம்) கிடைத்த இராஜராஜனின் தங்கக் காசுகளில் ஒரு புறம் வெண்கொற்றக்குடையின் கீழ் வலது நோக்கி நிற்கும் பன்றியின் இரு பக்கங்களிலும் இரு குத்துவிளக்குகளும் வெண்கொற்றக்குடையின் இருபுறமும் இரு சாமரங்களும் உள்ளன. காசின் விளிம்பைச் சுற்றிலும் "ஸ்ரீ ராஜ ராஜ" என்று தெலுங்கு கன்னட எழுத்தில் உள்ள காசுகள் கீழை சாளுக்கிய அரசர்களால் ராஜராஜனின் பெயரால் வெளியிடப்பெற்றதாக இருக்கலாம் (காண்க அட்டவணை எண்:12). சோழர் காசுகள் எண்:12). மேலும் "ஸ்ரீ ராஜ ராஜ" என்று பெயர் பொறிக்கப்பெற்ற காசுகளில் வழக்கமான முன்பக்கம் நிற்கும் உருவமும் பின் பக்கம் அமர்ந்த உருவம் மட்டுமன்றி முன்பக்கம் நிற்கும் உருவத்தின் இடது பக்கமோ அல்லது வலது பக்கமோ சங்கு, மீன், பன்றி, திருவடி போன்ற சின்னங்களுடன் மீன், பன்றி போன்றவை முதன்மைப்படுத்தப்பெற்று காணப்பெறுகின்றன. இவ்விதம் சோழச் சின்னங்களுடன் இணைந்து பிற அரசு சின்னங்கள் காணப்பெறுவது அவ்வரசுகளுடன் சோழ அரசு கொண்டுள்ள நட்புறவை வெளிப்படுத்துவனவாகவுள்ளன. பாண்டியரது மீன் சேரரது வில் போன்று ஒரு குறிப்பிட்ட அரசுச்சின்னங்கள் ஒரு வெண்கொற்றக்குடையின் கீழ் சோழ குலச்சின்னமான புலியுடன் இருப்பது சோழ அரசின் ஆளுகையின்கீழ் இவ்விரு வேந்தர்களும் நட்புறவு கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுவதாகவுள்ளது. இத்தகையச் சின்னம் சோழரது செப்பேடுகளிலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதானமாக, சோழ அரசின் சின்னம் பொறிக்கப்படாது பிற அரசுகளின் சின்னம் குறிப்பாக வெண்கொற்றக்குடையின் கீழ் பன்றியுடன், ஜெயஸ்தம்பம் பொறிக்கப்பெற்றுள்ளது போன்ற காசுகளைச் சோழர்களது சாளுக்கிய வெற்றியைக்குறிப்பதாகச் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், இவை சாளுக்கியரின் தன் முனைப்பைக் காட்டுவதாகவே தெரிகிறது. அத்துடன் எழுத்துப்பொறிப்பில்லாத இக்காசுகளை முதலாம் இராஜேந்திர சோழருடையதாகவும் கருதுகின்றனர். சாளுக்கிய சோழரான முதலாம் குலோத்துங்கன் கூட இதை வெளியிட்டிருக்கலாம். எனவே பெயர்கள் பொறிக்கப்பெறாத காசுகளை ஒரு குறிப்பிட்ட மன்னருக்கு உரித்தாக்குவதை ஏற்க இயலாது.

    எழுத்து மற்றும் மொழி

    அச்சுக்கோர்த்தது போல் அழகுற கற்களில் தமிழ் எழுத்துக்களைப் பொறித்த சோழர்கள் காசுகளில் “தேவநாகரி” எழுத்துக்களையே பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்திற்கு மட்டுமின்றி இலங்கை போன்ற தன் ஆளுகைக்குட்பட்ட பிற இடங்களுக்கும் சேர்த்து காசுகளை அச்சடித்ததால் இந்நிலை இருக்கலாம். ஆனால், சோழர்களது காசுகள் இந்தியாவில் தமிழகத்தைத் தவிர பிற இடங்களில் கிடைத்ததற்கான சான்றுகள் குறைவே. ஆந்திர மாநிலம் தௌளேஸ்வரத்தில் கிடைத்த குவியல் அப்பகுதி சோழரது ஆளுமையின் கீழ் இருந்ததை உணர்த்துகிறது. இந்தியாவிற்கு வெளியில் தாய்லாந்து, இலங்கை போன்ற பகுதிகளில் சோழரது காசுகள் கிடைக்கின்றன.

    கிடைத்துள்ள இடங்கள்

    அரியலூர், ஆரணி, ஆற்காடு, கரூர், கும்பகோணம், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை போன்று தமிழகம் முழுவதுமே குவியலாகக் கிடைத்து வருகின்றன. அண்மையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் நெடுவாக் கோட்டையில் 15கிலோ சோழரது காசுகள் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக அளவில் கிடைக்கின்றன.

    எடையும் உலோகமும்

    கார்ஷாப்பணத்திற்கு அடுத்தநிலையில் சோழர்களே ஒரு நிலையான பொது மதிப்புள்ள ஒரு சீரான எடையுள்ள காசுகளை வெளியிட்டுள்ளனர் எனலாம். இவர்களது காசுகளில் முகமதிப்பீடு (face value) இல்லையென்றாலும் எடை அளவுகளிலும் வடிவத்திலும் ஒரு சீரான தரத்தைப் பின்பற்றியுள்ளனர். சோழர்கள் வெள்ளி, தங்கம், செம்பு போன்ற பல உலோகங்களிலும் காசுகளை வெளியிட்டுள்ளனர். ஆயினும் செம்பாலானவையே அதிக அளவில் கிடைக்கின்றன. வெள்ளிக்காசுகள் பெரும்பாலும் செப்புக்காசின்மேல் முலாம் பூசப்பெற்றதாகவே கிடைக்கின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:56:12(இந்திய நேரம்)