தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சேர மன்னன் மாக்கோதைக் காசு

  • சேர மன்னன் மாக்கோதைக் காசு

     

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    உலோகம் :வெள்ளி
    எடை :1.1 - 2.1 வரை கிடைத்துள்ளன
    வடிவம் : வட்டம்
    அளவு :1.5 - 1.9
    காலம் :பொ.ஆ. 1ஆம் நூற்றாண்டு (தோராயமாக)

    குறிப்பு:

    நாணயவியலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இக்காசுகளில் 11 வகையான காசுளைத் தமது நூலில் வெளியிட்டுள்ளார். காசுகளின் எடையும், அளவும் எல்லாக் காசுகளுக்கும் ஒன்று போல் இல்லை. எனவே, இக்காசுகளின் எடை சராசரியாக 1 கிராம் முதல் 2கிராம் வரை எனக் கொள்ளலாம்.

    மாக்கோதை பற்றிய இலக்கியக் குறிப்பு

    இலக்கியங்களில் "மாக்கோதை" என்ற பெயர் நேரிடையாகக் குறிப்பிடப்பெறவில்லை. இருப்பினும் கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை என்ற மன்னன் குறிப்பிடப்பெறுகிறான். இவனே "மாக்கோதை" நாணயத்தை வெளியிட்ட மன்னன் எனக்கருதலாம். கோட்டம்பலம் என்பதை கோட்டம் + அம்பலம் எனப் பிரிக்கலாம். கோட்டம் என்பது கேரளாவில் உள்ள கோட்டயம் என்பதைக் குறிக்கும். அம்பலம் என்பது கோயில். இவ்வரசர் கோட்டம்பலம் என்னும் இடத்தில் இறந்திருக்கலாம். அதனால் அப்பெயர் பெற்றிருக்கலாம் எனச் சிதம்பரனார் கூறுகின்றார். கேரளத்தில் அம்பலப்புழை பகுதியில் மாக்கோதை மங்கலம் என்றொரு ஊர் உள்ளது. இதுவே கோட்டம்பலமாக இருக்கலாம் எனப் புருஷோத்தமும் குறிப்பிடுகின்றனர்.

    எழுத்தமைவு

    முதலில் உள்ள பெயரில் "ம" என்ற எழுத்தின் வலப்பக்கம் நெடிலைக் குறிக்க இடம்பெரும் கோடு, எழுத்தின் மேற்பகுதியின் இடப்பக்கம் இடம்பெற்றுள்ளது. இரண்டு, மூன்றாவதாகக் குறிக்கப்பெற்றிருக்கும் எழுத்துக்கள் மாங்குளம் கல்வெட்டில் உள்ளது போன்றே உள்ளது. இதிலுள்ள "தை" நன்கு வளைவுபெற்றுள்ளது. எழுத்துக்கள் மாங்குளம் கல்வெட்டில் உள்ளது போன்றே உள்ளது. நான்காவதாகக் குறிக்கப்பெற்றிருக்கும் நாணயத்தின் முதல் எழுத்தான "மா" குறுக்குக்கோடு குறைந்து, வளர்ச்சியடைந்து பிராமி எழுத்து வகையைப் போல் உள்ளது.

    இந்நாணயத்தைப் பற்றி விளக்கும் இரா.கிருஷ்ணமூர்த்தி , நாணயங்களில் வரையப்பெற்றிருக்கும் உருவங்களைக் கொண்டு, இதில் இறுதியாகக் கொடுக்கப்பெற்றிருக்கும் உருவம் வயதான தோற்றமுடையதாக இருப்பதானால் இந்நாணயம் ஒரே வம்சத்தைச் சேர்ந்த ஐந்து அரசர்களால் வெளியிடப்பெற்றுள்ளது. இந்த அரசர்கள் ஒவ்வொருவரும் 25 வருடங்கள் ஆட்சி செய்து வந்தனர் என்று கணிக்கின்றனர். இவரது கருத்து குழப்பம் தருவதாக உள்ளது. எனவே, நாணயங்களின் உருவ ஒற்றுமையைக்கொண்டு, மாக்கோதையே தனது நடுத்தர வயதிலிருந்து முதிய வயதுவரை இந்நாணயங்களை வெளியிட்டிருக்கலாம் எனக் கருதலாம். மேலும், இந்நாணயத்தின் தலை உருவம் வழுக்கையாகவே காணப்பெறுகின்றது. இதில் மூக்கிற்குப் பின் குடுமி இருப்பதாக ஐ.கே. சர்மா குறிப்பிடுகின்றார். இதுபோன்ற நாணயத்தை இதுவரையில் காண இயலவில்லை.

    காலம் குறித்த கருத்துக்கள்:

    குறிப்பு:

    காசுகள் எவற்றிலும் காலம் குறிக்கப்பெறுவதில்லை. எழுத்தமைதி, இலக்கியக் குறிப்புகளோடு பிற சான்றுகளையும் ஒப்பிட்டே காசுகளுக்குக் காலம் கணிக்க இயலும்.

    கருவூரில் கிடைத்த இக்காசிற்குக் கிருஷ்ண மூர்த்தி பொ.ஆ.மு. 100 - பொ.ஆ.100 எனக் காலம் கணிக்கிறார். இவர் தலைபொறிக்கப் பெற்ற காசுகள் கிரேக்கர்களைப் பின்பற்றிச் செய்யப்பட்டது எனக் கருதுகிறார். கிரேக்கர்கள் தமிழகத்தோடு செய்த வணிகத்தை அடியொட்டி அக்காலத்தைக் கணிக்கிறார். துவக்கத்தில் தலை உருவம் பொறிக்கப்பெற்ற வெள்ளிக் காசுகளை வெளியிட்டது மேற்கத்திய ஷத்திரபர்களே. இவர்கள் இந்தோ கிரேக்க மன்னர்களின் "ட்ரெச்சம்" என்ற காசு வகைகளைப் பின்பற்றி இவ்விதம் வெளியிட்டுள்ளனர். இவர்களைப் பார்த்து சாதவாகனர்கள் பின்பற்றியுள்ளனர். உள் நாட்டு அரசுகளில் குறிப்பாக இந்தியாவிற்குள் முதன் முதலில் தலைப் பொறிப்பு வெள்ளிக் காசுகளை வெளியிட்ட பெருமை சேர அரசர்களை அதுவும் மாக்கோதையையே சாரும் என்கிறார் . அத்துடன் இதுவரைச் சாதவாகனர்களே கிரேக்கர்களைப் பின்பற்றித் தலை உருவம் பொறித்த காசுகளைப் பொறித்தனர் என்றும், இப்பொழுது அக்கருத்து மாற்றத்தக்கது என்றும் கூறுகின்றார். சங்க காலத்தின் அடிப்படைச் சான்றாக விளங்கும் இலக்கியங்களை நாம் ஒதுக்கிவிட இயலாது. எனவே, இவரது கருத்தோடு இலக்கிய ஆசிரியர்களின் கருத்துக்களும் இங்கு ஆய்வு செய்யப்பட வேண்டிய ஓன்றாகிறது. சங்க இலக்கியங்களைத் திறம்பட ஆய்வு செய்துள்ள வ. குருநாதன் இம்மன்னனுக்கு பொ.ஆ. 50 - 75 எனக் காலம் கணித்துள்ளார். இக்காலக் கணிப்பு எழுத்தமைதியோடும் ஒத்துச் செல்வதால் இக்கருத்தினை ஏற்கலாம்.

    மாக்கோதை காசிற்கு ஐராவதம் மஹாதேவன் பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டென்று காலம் கணிக்கிறார். பதிற்றுப் பத்து இலக்கியங்களின் அடிப்படையில் மாக்கோதை மன்னன் கொல்லிப்புறை என்ற காசுகளை வெளியிட்டுள்ளதாகக் கருதப்படும் அரசர் மாந்தரஞ்சேரல் இரும்பொறை மாக்கோதைக்கு முன்னர் ஆண்ட மன்னராவார். கொல்லிப்புறை காசிற்கு பொ.ஆ.1ஆம் நூற்றாண்டு எனக் காலம் கணிக்கும் இவர் மாக்கோதைக்கு பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டு எனக் கணிப்பது ஏற்க இயலாததாக உள்ளது. எனவே, அறிஞர்கள் எழுத்தமைதியை மட்டுமன்றி இலக்கியங்களையும் உற்றுநோக்கி தமது கருத்துக்களை வெளிப்படுத்தினால் வளரும் ஆய்வாளர்களுக்கு உறுதுணையாக அமையும் எனக் கருதுகிறேன்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:54:03(இந்திய நேரம்)