தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காவிரிப்பூம்பட்டினம்

 • காவிரிப்பூம்பட்டினம்

  முனைவர் பா.ஜெயக்குமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  அறிமுகம்:

  சங்ககாலத் (கி.மு.300-கி.பி. 300) தமிழகத்தில் இருந்த துறைமுகங்களில் கிழக்குக் கடற்கரையில் சோழர்களின் உலகத்தரம் வாய்ந்த துறைமுகமாக்க் காவிரிப்பூம்பட்டினம் விளங்கியது.

  அமைவிடம்:

  நாகப்பட்டினம் மாவட்ம் சீர்காழி வட்டத்தில் காவிரிப்பூம்பட்டினம் இன்று ஒரு சிறிய மீனவக் கிராமமாகக் கடற்கரையில் அமைந்துள்ளது. இங்குச் செல்வதற்கு சீர்காழியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

  பெயர்ச்சிறப்பு:

  சங்க இலக்கியங்கள் புகார், பூம்புகார், பட்டினம்,காவிரிப்பூம்பட்டினம் எனப் பல பெயர்களில் சுட்டும் இத்துறைமுக நகரம் காவிரி ஆறு வங்கக் கடலில் புகுகின்ற இடத்தில் அமைந்ததால் இப்பெயர்களைப் பெற்றது எனலாம். இலக்கியங்கள் சுட்டுவதுபோல சங்ககாலத்தில் தமிழகம் வந்து சென்ற மேலை நாட்டுக் கடல் பயணிகளும் இந்நகர் குறித்த சிறப்புகளைப் பதிவு செய்யத் தவறவில்லை. இப்பட்டினத்தைப் பெரிப்ளூசு ‘கமரா’ எனவும், தாலமி கபேரிஸ் எம்போரியான் (Kaberis Emporion) எனவும் குறிப்பிடுகின்றனர். மணிமேகலை காவிரிப்பூம்பட்டினத்தின் பிற பெயர்களாகக் குறிப்பனவற்றில் ‘காகந்தி’ என்பதும் ஒன்றாகும். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் புத்ததத்தர் இங்கிருந்த புத்தவிகாரையில் தங்கியிருந்து பிராகிருத மொழியில் அபிதம்மவதாரம் என்னும் இலக்கியத்தை இயற்றியதாகக் கருதப்படுகிறது. இதில் இவ்வூர் கவேரபட்டினம் எனக் குறிப்பிடப்படுவதோடு இதன் எழில்மிகு தோற்றம், அமைப்பு, அங்கு வாழ்ந்த உயர்குடி மக்கள் மற்றும் அரிய வைரக்கற்கள் முதல்கொண்டு விற்கப்பட்ட பெரிய கடைத்தெருக்கள் வரை பேசுவதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர் (K.V.Raman, Excavation at Poompuhar, II Interantional Tamil Conference, 1968). கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரப் பாடல்களில் இப்பகுதி குறிப்பிடப்படுகிறது. இடைக்காலச் சோழர்களின் காலத்திலும் காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயரே நிலைத்திருந்ததை அக்காலக் கல்வெட்டுகள் வாயிலாக அறியலாம்.

  இலக்கியக் குறிப்புகள்:

  காவிரிப்பூம்பட்டினத்தின் நகரமைப்பு மற்றும் துறைமுகச் சிறப்புகளை பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. வணிக நிமித்தமாக யவனர்கள் இங்கு வாழ்ந்ததைப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. இவர்கள் தங்கிருந்த இடத்தை யவன இருக்கை எனச் சிலப்பதிகாரம் (5-10) சுட்டுகிறது. வெள்ளையன் இருப்பு எனும் ஒரு பகுதி காவிரிப்பூம்பட்டினத்தில் இன்றும் காணப்படுவது நோக்கத்தக்கது. சோழர்களின் சிறப்புமிகு இத்துறைமுக நகரை உருவாக்க யவனத்தச்சர் என அழைக்கப்பட்ட ரோமானிய நாட்டுச் சிற்பிகள் பயன்படுத்தப்பட்டதை மணிமேகலை (19:107-108) காட்டுகிறது. வெவ்வேறு நாடுகளில் இருந்து நீரின் வழியாக இத்துறைமுகத்திற்கு வந்து இறங்கிய பொருட்கள் குறித்தும் அதன் சிறப்புப் பற்றியும் பட்டினப்பாலை (185-193) மிகத் தெளிவாக விவரிக்கிறது.
  அப்பாடல் வரிகள் பின்வருமாறு:

  “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
  காலின் வந்த கருங்கறி மூடையும்
  வடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
  தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
  கங்கை வாரியும் காவிரிப் பயனும்
  ஈழத்துண்ர்வும் காழகத் தாக்கமும்
  அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
  வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு”

  இப்பாடலிலிருந்து நீரின் வழியாக வரப்பெற்ற உயர்வகை குதிரைகள், நிலவழியாகக் கொண்டு வரப்பட்ட மிளகு, வடக்கு மலைகளிலிருந்து தருவிக்கப்பட்ட அரிய வைரக்கற்கள் மற்றும் பொன், மேற்கு மலைகளில் கிடைக்கின்ற சந்தனம் உள்ளிட்ட வாசனைப் பொருள்கள் தென்கடல் முத்து, கீழைக் கடல் பகுதியிலிருந்து பெறப்படும் பவளம், கங்கை மற்றும் காவிரியின் வளத்தால் பெறப்பட்ட பொருள்கள், ஈழத்திலிருந்து உணவு வகைகள், காழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை (பெரும்பாலும், உலோகப்பொருளாக இருக்க வேண்டும்) , பிற இடங்களிலிருந்து வந்து இறங்கிய அரிய மற்றும் பெரிய பொருள்களும் இத்துறைமுகம் வந்து சென்றதை அறிவதிலிருந்து இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகச் செயல்பாடுகள் உச்சநிலை பெற்றிருந்ததை அறியமுடிகிறது. கடல் வாணிபத்தால் இத்துறைமுக நகரில் காணப்பட்ட செல்வவளம் பற்றிச் சிலப்பதிகாரம் (2:2-6) பேசுகிறது. இத்துறைமுகத்திற்கு இரவு நேரங்களில் வந்துசேரும் கப்பல்களுக்குத் திசையினை உணர்த்த கலங்கரை விளக்கம் இருந்ததை மேற்சுட்டிய இலக்கியம் “இலங்கு நீர் விரைப்பிற் கலங்கரை விளக்கமும்” என்ற பாடல் வரியின் வாயிலாகத் தெரிவிக்கிறது.

  புகார் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி சிறப்பாக நடைபெற்றதையும், இப்பொருட்களுக்குச் சுங்கம் வசூலிக்கப்பட்டதையும், இதற்கு அடையாளமாக அப்பொருட்களின் மேல் சோழ அரசின் புலி முத்திரை இடப்பெற்றதையும் பின்வரும் பட்டினப்பாலை பாடல் வரிகள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.

  “நீரினின்றும் நிலத்தேற்றவும்
  நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்
  அளந்தறியாப் பலபண்டம்
  வரம்பறியாமை வந்தீண்டி
  அருங்கடிப் பெருங்காப்பின்
  வலியுடை வல்லணங்கினோன்
  புலி பொறித்துப் புறம்போக்கி
  மதி நிறைந்த மலிபண்டம்
  பொதி மூடைப் போர் ஏறி”

  காவிரிப்பூம்பட்டினத்தில் புலி உருவம் பொறித்த பலவகையான முத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை (ஆறுமுக சீதாராமன், சங்ககாலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள், ஆவணம், 1994) மேற்சுட்டிய இலக்கியச் செய்திகளுக்கு வலுசேர்ப்பதாகும். இம்முத்திரைகளில் 6.150 கிராம் எடையுள்ள செம்பு முத்திரை ஒன்று குறிப்பிடத்தக்கதாகும். இதில் புலி வலது பக்கம் நோக்கிய நிலையில் முன்காலைத் தூக்கியும், வாயைத் திறந்து கொண்டும் மிகக் கம்பீரமாகக் காட்டப்பட்டுள்ளது. இதில் புலிச்சின்னம் குழிவாக முத்திரை முறையில் உள்ளது. இதில் எழுத்துகள் எதுவும் காணப்படவில்லை. இம்முத்திரை துறைமுகத்தில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கவேண்டும். இத்துறைமுகத்திலிருந்து அரசுக்கு நிறைய வருவாய் வரப்பெற்றதோடு வாணிபம் வளர்ச்சியடைந்திருந்ததால் புகார் நகரமும் செல்வச் செழிப்போடு காணப்பட்டது என்பதையும் உணரமுடிகிறது.

  பொதுவாக அக்காலத் தமிழகத் துறைமுகங்களில் வங்கம் மற்றும் நாவாய் போன்ற கலங்கள் வாணிப நோக்கில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததைச் சங்க இலக்கியங்கள் பல இடங்களில் சுட்டுகின்றன. அகநானூறு (255:1-6) குறிப்பிலிருந்து வங்கம் என்பது பொருள்களை ஏற்றிச் செல்லத்தக்க வகையில் மிகப்பெரிய கப்பலாக இருந்திருக்க வேண்டும் என்பதை உணரமுடிகிறது.

  “………………………. கூம்பொடு
  மீப்பாய் களையாது மிசைபாரம் தோண்டாது
  புகா அர்ப் புகுந்த பெருங்கலம்”

  என்னும் புறநானூறு (30:11-13) வரிகள் பாய்மரத்தில் (mast) கட்டப்பட்டிருந்த பாய்கன் (sails) களையாமல் (இறக்கப்படாமல்) பெரிய கலங்கள் (ships) புகார் துறைமுகத்திற்குள் வந்து சென்றதைக் காட்டுவதிலிருந்து சங்ககாலத்தில் இத்துறைமுகச் செயல்பாடுகள் மிகச் சுறுசுறுப்புடன் இருந்ததைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

  அகழாய்வுச் சிறப்பு:

  1960 ஆம் ஆண்டு எஸ்.பரமசிவன் என்பவர் இக்கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட காந்த அளவியல் (magnetic survey) ஆய்வில் இங்குக் கட்டடப் பகுதிகள் புதையுண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இந்தியத் தொல்லியல் துறை 1962ஆம் ஆண்டு இக்கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட மேற்பரப்பாய்வு மற்றும் அகழாய்வுகள் சிறப்புக்குரியதாகும் (Indian Archaeology-A Review, 1962-1967). மேற்பரப்பாய்வில் (exploration) வானகிரி, கீழையூர் ஆகிய இடங்களில் கருப்பு-சிவப்பு மண்கலச் சில்லுகளுடன் ஒருபக்கம் புலி மறுபக்கம் யானை பொறிக்கப்பட்ட சோழர்காலச் செப்புக்காசு, யவனர் தொடர்புக்குரிய ரூலெட்டட் பானை ஓடுகள், அரிய கல்வகைகளினாலான மணிகள் (beads) மற்றும் வெள்ளையன் இருப்பு என்ற இடத்தில் ரோமானிய நாணயம் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.

  அகழாய்வில் இத்துறைமுகத்தின் உலகளாவிய வரலாற்றுச் சிறப்புகளைக் காட்டும் பல அரிய கண்டுபிடிப்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. கீழையூரில் பெரிய செங்கற்களால் உருவாக்கப்பட்ட சுவர்களுடன் கூடிய கட்டடப் பகுதியும் அச்சுவர்களின் மேல் மரத்தினாலான கம்பங்களும் (wooden - posts) கண்டுபிடிக்கப்பட்டன. இக்கட்டடப் பகுதி ஏற்றுமதி இறக்குமதிக்குப் பயன்படுத்தப்பட்ட துறைமுகப் பகுதியின் படகுத் துறையாக (wharf) அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மரக்கம்பங்கள் துறைமுகத்தில் கப்பல்களைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கரிப்பகுப்பாய்வு (Carnbon 14 Dating) காலக்கணிப்பு முறையில் இக்கம்பங்கள் கி.பி. 3ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளமை இத்துறைமுகத்தின் தொன்மைக்கு அறிவியல் பூர்வமான சிறப்பைச் சேர்ப்பதோடு பட்டினப்பாலை காட்டும் இத்துறைமுகச் சிறப்பும் இதன் வழி மெய்ப்பிக்கப்படுகிறது. இக்கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்களின் நீளம், அகலம், கணம் முறையே 60×40×7 செமீ அளவு கொண்டதாக மிகப்பெரிய செங்கற்கலாகக் காணப்படுகின்றன.

  வானகிரி பகுதியில் செங்கற்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நீர்த்தேக்கம் (water-reservoir) ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நீர்த் தேக்கத்தில் காவிரியிலிருந்து நீரைக் கொண்டு வந்து தேக்கி வைத்துப் பின்னர் அதிலிருந்து நீரைப் பகிர்ந்தளிப்பதற்கு ஏதுவாக மிக நேர்த்தியான தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. இந்நீர்த் தேக்கத்தின் தொழில்நுட்பம் சங்ககாலத் தமிழர்களின் தொழில் நுட்பத் திறனுக்குச் சான்று பகர்வதாகும்.

  காவிரிப்பூம்பட்டின அகழாய்வுக் கண்டுபிடிப்புகளின் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது மேலையூரில் பல்லவனீச்சுரம் என்னும் கோயிலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தப் பள்ளி ஆகும். இப்பள்ளியில் 8 சதுரடி பரப்பளவு கொண்ட ஏழு அறைகள் காணப்பட்டன. இதன் சுவர்களில் சுதை உருவங்களும், ஓவியங்களும் வெளிக்கொணரப்பட்டன. இவ்வறைகளின் ஒன்றில் தியான நிலையில் புத்தரின் திருமேனி ஒன்றும் மற்றொரு அறையில் சலவைக் கல்லினாலான புத்தபாதம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலையூர் மற்றும் வானகிரி பகுதிகளில் தொல்லியலாளர்கள் மேற்பரப்பாய்வின் போது கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தமதம் சார்ந்த சுடுமண் பொம்மைகளைக் கண்டுபிடித்துள்ளனர் (தினமலர் : 6.8.1998 மற்றும் தினமணி : 16.8.98). அக்காலத்தில் புத்தமதச் செயல்பாடுகள் இப்பகுதியில் மிகவும் வலுவாக இருந்ததை மேற்சுட்டிய கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.

  தமிழக அரசு தொல்லியல் துறையினர் 1998 ஆம் ஆண்டு இங்கு மேற்கொண்ட அகழாய்வில் யவனருடன் தொடர்புடைய அம்பொரா மண்ஜாடிகளின் சில்லுகளும், பிராமி எழுத்தில் ‘அபிமகததோ’ எனப் பொறிக்கப்பட்ட மண்கலச் சில்லும் கிடைத்துள்ளன. மேற்சுட்டிய எழுத்துப்பொறிப்பு இலங்கையில் காணப்படும் பிராமி எழுத்துகளுடன் தொடர்புடையதாகக் கொள்ள இடமுண்டு.

  கடலகழாய்வு:

  தமிழக அரசு தொல்லியல் துறை கோவா தேசியக் கடலாய்வு நிறுவனத்துடன் இணைந்து 1991 ஆம் ஆண்டு முனைவர் எஸ்.ஆர்.ராவ் தலைமையில் பூம்புகாரில் கடலகழாய்வினை நடத்தியது. இதில் 23 அடி ஆழத்தில் ஒரே சீரான வடிவமுள்ள பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த கட்டடப் பகுதி ஒன்று காணப்பட்டமை சிறப்புக்குரியது. இக்கட்டடம் சங்ககாலக் கட்டடமாக அடையாளப்படுத்தப்படுவதோடு அக்காலத்தில் கடலின் சீற்றத்தால் அழிக்கப்பட்டிருக்கவேண்டும் எனவும் கருதப்படுகிறது. காவிரிப்பூம்பட்டின நகரம் கடலின் சீற்றத்தால் (கடல்கோளால்) அழிக்கப்பட்டத்தை மணிமேகலை குறிப்பிடுவதையும் இங்கு நோக்குதல் தகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:42:56(இந்திய நேரம்)