தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழகத்தில் கிடைத்துள்ள ரோமானியர்காசுகள்

  • தமிழகத்தில் கிடைத்துள்ள ரோமானியர்காசுகள்

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    ரோமானியர்கள் (பொ.ஆ.மு. 1 ஆம் நூ. – பொ.ஆ. 3 ஆம் நூ):

    பொ.ஆ.மு. 1-3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியர் காசுகள் தமிழகத்தில் பரவலாக்க் கிடைக்கின்றன. இது சங்ககாலத் தமிழருக்கும் ரோமானியருக்கும் இடையே நிலவிய கடல் சார் வணிகத்திற்கு மிகச் சிறந்த சான்று ஆகும். தமிழர்கள் கடல் சார் வணிகத்தில் சிறந்து விளங்க தமிழ் நாட்டின் இயற்கையமைப்பும் ஒரு முக்கிய காரணி என்பது நாம் அறிந்ததே. தொன்மைக் காலந்தொட்டே இவர்கள் கடலின் வலிமையை உணர்ந்து அதை அடக்கி ஆண்டுள்ளனர் என்பதற்கு “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி” என்ற புறப்பாடல் வரிகளே சான்றாக உள்ளன. தமிழர்கள் கடலோரங்களில் மட்டுமின்றி நடுக்கடலிலும் பயணம் செய்துள்ளனர். ‘நாவாய்’ என்ற இந்த லத்தீனிய சொல்லே தமிழருடன் யவனர்கள் கொண்டுள்ள கடல் வாணிகத் தொடர்பினை விளக்கும் சான்றாக உள்ளது. “யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” என்று சங்க இலக்கியமான புறநானூறும் சான்று பகர்கிறது. யவனர்கள் என்ற சொல் பொதுவாக அந்நியர்களைக் குறித்தாலும் பெரும்பாலும் அது கிரேக்க, ரோமானியர்களையே குறித்து நின்றது. ரோமானியரது கலமானது தமிழ்நாட்டின் மிளகை எடுத்துச் சென்று ரோம நாட்டின் பொன்னை இங்கு கொண்டு வந்து சேர்த்ததை மேற்சுட்டிய புறநானூற்றுப் பாடல் சுட்டுகிறது.

    மிளகு வணிகமே முற்காலத் தமிழ் வணிகர்களுக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்துள்ளது. ரோமப் பேரரசிற்கும் இந்தியாவிற்கும் இடையே சென்ற கப்பல்களின் சரக்கில் முக்கால் பகுதி மிளகும் வாசனைத் திரவியங்களும், அரிய கல்மணிகளுமாகவே இருந்தன. இவை தென்னிந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. இம்மிளகு மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்பட்டதால் ரோம் நகரில் ஒரு பவுண்டு 15 தினாரி வரை விற்கப்பட்டது.

    தமிழகத்துடனான ரோமானிய வணிகம் பொ.ஆ.மு. 1 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் செழிக்கவில்லை. இக்கால வரம்புக்கு முற்பட்ட ரோம மன்னர்களின் நாணயங்கள் தமிழ்நாட்டில் இதுவரையில் கிடைக்கவில்லை. ரோமாபுரியின் அகஸ்டஸ் மன்னன் (பொ.ஆ.மு. 34) காலத்திலிருந்தே தமிழகத்துடனான நேர்முக ரோமானிய வணிகத் தொடர்பு கிட்டியுள்ளது. ரோமானிய நாட்டுடனான தமிழரது வாணிகம் பேரரசின் ஆதரவின் கீழ் செழித்து வளர்ந்தது. ரோமிற்கு பாண்டிய மன்னனின் தூதுவன் சென்றுள்ளான். மதுரையிலும் யவனர்களுக்கான தனிச்சேரி இருந்துள்ளது. ரோமாபுரி வணிகம் சிறந்து விளங்கிய காலத்தில் அரிக்கமேட்டில் பண்டகச் சாலையொன்றும், விற்பனைச் சாலையொன்றும் நடைபெற்றுதையும், ரோம மட்கலங்கள் இங்கு கிடைப்பதையும் அகழாய்வுகள் மெய்பித்துள்ளன. ரோமிலிருந்து ஆண்டுதோறும் 6,00,000 பவுன் மதிப்புள்ள தங்கம் தமிழரின் வாணிகத்திற்காகச் செலவானது. இவ்விதம் ரோமாபுரியின் செல்வம் தமிழகத்திற்குச் சென்றதையும் தமிழகப் பண்டங்களில் ரோமருக்கிருந்த ஆரா வேட்கையையும் மக்கள் சிலரால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.

    ரோம பேரரசன் நீரே (பொ.ஆ. 68) காலமான பிறகு வெஸ்பேசியன் அரசேற்றான். இவன் எளிமை விரும்பி. அதனைத் தொடர்ந்து நிலவிய அரசியல் குழப்பங்கள் போன்ற பல காரணங்களால் தமிழக ரோமானிய வணிகம் சிறிது காலம் குன்றியது. பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு வெளியிடப் பெற்ற நாணயங்கள் தமிழகத்தில் கிடைக்கவில்லையென கே.கே.பிள்ளை குறிப்பிடுவதுடன் இந்த ஒரு காரணத்தை மட்டுமே கொண்டு வாணிகம் அறவே அற்றுவிட்டது என்றும் கூற இயலாது. பேரரசன் கான்ஸ்டன்டைன் (பொ.ஆ. 324-337) காலத்தில் மீண்டும் தமிழகத்துடனான வணிகம் தொடர்ந்து வந்துள்ளது என்றும் உரைக்கின்றார். இக்கருத்தை உறுதி செய்யும் சான்றாக பிற்காலத்தைச் சேர்ந்த ரோமானிய செப்புக் காசுகளை ஆர்.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்து தெளிவுற விளக்கியுள்ளார். இவை மதுரை, திருக்கோயிலூர், கரூர் போன்ற ஊர்களிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன.

    காசுகள்:

    ரோமானியர்களது காசுகளைக் குடியரசு காசுகள், பேரரசுக் காசுகள் என இரு வகைப்படுத்தலாம்.

    குடியரசு காசுகள்:

    குடியரசு காசுகளில் தொன்மையானதாக்க் கிடைக்கப் பெறுவது சி.நேவியஸ் பல்புஸ் (C.NAEVIOUS BALBUS) என்ற வெளியீட்டாளரின் பெயர் பொறித்த காசுகளாகும். இவ்வகைக் காசுகளில் பெரும்பாலும் ஒருபுறம் வீனஸ், புவன் போன்ற கிரேக்க கடவுளர்களின் தலையும், பின்புறம் ஒரு சில காசுகளில் நின்ற நிலையிலுள்ள பருந்து, அதன் கீழே அரசனின் பெயர் பொறிக்கப் பெற்றுள்ளது. கரண்டி, ஜாடி, மந்திரக்கோல் போன்றவையும் காணப்பெறுகின்றன. இக்காசுகளில் DICTITER COSTER, CASSIVS, MAXIM PONTIF, AVGVR இது போன்ற வாசகங்கள் இடம்பெறுகின்றன.

    பேரரசு காசுகள்:

    ரோமானியப் பேரரசு காலக் காசுகளில் அகஸ்டஸ், டைபீரியஸ் ஆகியோரின் காசுகளே அதிகம் கிடைத்துள்ளன. டைபீரியஸின் காசுகள் மக்ஸிம் பாண்டிஃப் (maxim pontiff) வகைக் காசுகள் என்றழைக்கப் பெறுகின்றன. மற்ற அரசர்களில் கயஸ் (Gaius) கிளாடியஸ் நீரோ வெஸ்பேசியன், டோமிதியன் (Domitian) அந்டோநியஸ் பயஸ் (antoninus pius) மார்க்கஸ் ஆரேலியஸ் (marcus aurelius) செப்திமியஸ் செவெரெஸ் (septimius severus) கரகல்லா ஆகியோரது காசுகள் குறைந்த அளவிலும் கிடைத்துள்ளன. பொ.ஆ.மு. 100லிருந்து பொ.ஆ. 300 வரைக் கிடைக்கும் ரோமானியர்களது காசுகள் தங்கம், வெள்ளி உலோகத்தாலானதாகவே உள்ளன. குறிப்பாகத் தங்க்க்காசுகளே அதிகம் கிடைத்துள்ளன. இவை உலோக மதிப்புக் கருதி தமிழக வணிகர்களால் வரவேற்கப் பெற்றுள்ளன. ஆனால் பொ.ஆ. 300க்குப் பிறகு தமிழகத்தில் கிடைக்கும் (கரூர், திருக்கோயிலூர் போன்ற இடங்களில்) ரோமானியர்களது காசுகள் செப்பு உலோகத்தாலான குவியல்களாகவே கிடைத்துள்ளன. இது கொண்டு ரோமானியர்களது குடியிருப்புகள் தமிழகத்தில் இக்காலக் கட்டத்தில் நிகழ்ந்துள்ளதாகக் கருதலாம்.

    சின்னங்கள்:

    ரோமானியர்களது காசுகளில் வீனஸ், புவன் போன்ற அவர்களது தெய்வங்களோ அல்லது அந்தந்த அரசர்களின் தலை உருவத்துடன் எழுத்துப்பொறிப்புகளும் இடம்பெறுகின்றன.

    தமிழகத்தில் ரோமானியக் காசுகள் கிடைக்கும் இடங்கள்:

    தமிழகத்தில் அகிலாண்டபுரம், ஆனைமலை, கல்லகிணர், சாவடிப்பாளையம், திருப்பூர், பூதி நத்தம், பெண்ணார், பொள்ளாச்சி, வெள்ளலூர் (கோயமுத்தூர்), உத்தமபுரம் (மதுரை), கத்தாங்கண்ணி (ஈரோடு), கரிவலம் வந்த நல்லூர் (திருநெல்வேலி), கரூர், கலையம்பத்தூர் (திண்டுக்கல்), காருகாக்குரிச்சி (புதுக்கோட்டை), கிருஷ்ணகிரி (தருமபுரி), கோனேரிப்பட்டி (சேலம்), சொறையப்பட்டு, தொண்டைமாநத்தம் (கடலூர்), பிஷப்டவுன் (உதகமண்டலம்), , மாம்பலம் (சென்னை), மதுரை போன்ற இடங்களில் ரோமானியக் காசுகள் கிடைக்கின்றன.

    ரோமானிய போலிக் காசுகளும் வெட்டுக் காசுகளும்:
    (Imitaiton & slash coins)

    ரோமானியர்களது காசுகளைப் போல் போலியாகச் செய்யப் பெற்ற காசுகள் இந்தியா முழுவதும் தமிழகத்திலும் காணப்பெறுகின்றன. அரசனின் காசின் பின் பக்கத்தில் மற்றொரு அரசனின் உருவம் பொறிக்கப் பெற்ற காசுகளும், சரியாக அரசனின் முகப்பகுதியில் வெட்டுக் குறியுள்ள காசுகளும் தமிழகத்தில் கிடைக்கின்றன. இவ்விதக் காசுகள் ரோமானிய காசுகளின் உலோக மதிப்புக்கருதி, குறைந்த மாற்றுள்ள காசுகள் புழகத்தில் விடுவதற்காக அச்சிடப் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. அந்நியரது காசுகளைப் புழகத்திலிருந்து நிறுத்துவதற்காக இவ்விதம் வெட்டுக்குறிகள் இடம்பெற்றுள்ளதாக ஒரு சிலரும், தங்கத்தின் மதிப்பை சோதிக்கவே இவ்விதம் இடம்பெற்றுள்ளது என ஒரு சிலரும் கருதுகின்றனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:44:55(இந்திய நேரம்)