தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • சாம்பல் நிற ஓவியம் தீட்டப்பட்ட பானை வகை

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்


    சாம்பல் நிற ஓவியம் தீட்டப்பட்ட பானை வகை வட இந்தியாவில் காணப்படுகின்றது. இது இந்தியாவின் இரும்புக்காலம் மற்றும் சிந்துவெளி நாகரித்திற்குப் பின் வட இந்தியாவில் மக்கள் குடிப்பெயரலை அறிய உதவுகின்றது.

    சாம்பல் நிற ஓவியம் தீட்டப்பட்ட பானை வகைப் பண்பாடு (Painted Grey Ware Culture - PGW) ஓர் இரும்புக் காலப் பண்பாடாகும். இப் பானை வகை பயன்படுத்திய காலத்தில்தான் வட இந்தியாவில், இரும்பு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. காவி நிறப் பானை வகைப் (Ochre Coloured Pottery Culture) பண்பாட்டிற்குப் பிறகு தோன்றிய இது, வட இந்தியாவில் பொ.ஆ.மு. 1500 முதல் 600 வரை நிலவியது. இக்காலத்தில் கருப்பு-சிவப்புப் பானை வகையும் பயன்படுத்தப்பட்டது. மேலும் இது கருப்பு-சிவப்புப் பானை வகை வழக்கொழிந்த பிறகும் பயன்பாட்டில் இருந்தது. இது பிந்தைய வேத காலத்துடனும் தொடர்புபடுத்தப்படுகின்றது. இந்தப் பண்பாட்டிற்குப் பிறகு, வடக்கத்திய மெருகேற்றப்பட்ட கருப்பு நிறப்பானை வகைப் பண்பாடு தொடர்ந்தது. இப்பானை வகை கங்கை மற்றும் யமுனை ஆறுகளுக்கிடையே உள்ள பகுதியில் இருக்கும் தொல்லியல் இடங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது.

    ஆரியர் மற்றும் மகா பாரதத் தொடர்பு

    பி.பி.லால் இப் பானை வகையை மகாபாரத காலத்துடன் தொடர்புபடுத்தினார். மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் ஒரு வெள்ளை நிகழ்வையும் அவர் அஸ்தினாபுராவில் அகழாய்வில் கண்டுபிடித்த வெள்ளைத்திற்கான மண்ணடுக்குச் சான்றுகளுடன் ஒப்பிடுகின்றார். இந்தப் பானை வகை ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் கிடைக்கும் சமகாலப் பானை வகைகளை விட வேறுபட்டது என்று கருதப்பட்டது. சில தொல்லியல் இடங்களில் இது பிந்தைய அரப்பன் (சிந்துவெளி) பானை வகைகளுடன் காணப்படுகின்றது.

    சிலர் இப் பானை வகை, மக்கள் குடிப்பெயரலால் தோன்றியது என்று கருதுகின்றனர். ஜிம் ஷேபர், சாம்பல் நிற ஓவியம் தீட்டப்பட்ட பானை வகைப் பண்பாடு அதற்கு முன் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பண்பாட்டிலிருந்து தோன்றியதாகக் கூறுகின்றார். சதபத பிரமாணத்தில் ஆரியர்கள் கிழக்கு நோக்கிப் புலம் பெயர்ந்ததற்குச் சான்றுகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது (அல்சின் அல்சின் 1968, 209). இந்தத் தகவல் இப்பானை வகையின் பரவலுடன் தொடர்பு படுத்தப்படுகின்றது.

    சாம்பல் நிற ஓவியம் தீட்டப்பட்ட பானை வகை, இரும்புக் காலத்தின் பானை வகை என்று கருதப்படுகின்றது. இந்தப் பானை வகை அகிச்சத்ராவில் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக அல்சின் மற்றும் அல்சின் கூறுகின்றனர் (1968:210). இது பி.பி லால் என்பவரால் அஸ்தினாபுராவில் 1950-52ல் நடந்த அகழாய்வில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. பஞ்சாபில் உள்ள ரோப்பரில் இப்பானை வகை பிந்தைய அரப்பா மற்றும் வரலாற்று ஆரம்பகாலப் பண்பாடுகளுக்கிடையே, மண்ணடுக்கில் காணப்படுகின்றது.

    இடப்பரவல்

    இது பாகிஸ்தானில், பஞ்சாபில் உள்ள அரப்பாவில் இருந்து கங்கைச் சமவெளிப் பகுதி வரை அதிக அளவில் காணப்படுகின்றது. வடக்கு இராசஸ்தானத்தில் காணப்படும் வறண்ட காக்கர் (ஹக்ரா சமவெளியில்) ஆற்றுப் படுகைப் பகுதிகளிலும். இது பிந்தைய அரப்பா பண்பாட்டுப் பகுதியிலும் காணப்படுகின்றது.

    இது மேலைக் கங்கைச் சமவெளியிலும் கிடைக்கின்றது. பகவான்புரா, நோ (இராசஸ்தான்), அலாம்கிரிபூர், அகிச்சத்தரா, ஹஸ்தினாபூர், அத்ரான்ஜிக்கேரா, ஜகேரா, மதுரா (உத்திரப்பிரதேசம்) ஆகியவை இப்பானை வகை கிடைக்கும் சிறப்பான தொல்லியல் இடங்களாகும்.

    உற்பத்தி செய்த முறை

    இப் பானை வகை சக்கரத்தின் உதவியுடன், நன்கு தயார் செய்யப்பட்ட களிமண்ணால் உருவாக்கப்பட்டது. இது சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றது. இதன் மீது கருப்பு அல்லது ஆழ்ந்த பழுப்பு (சாக்லேட்) நிறத்தில் கோட்டுருவங்கள் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இதில் 40க்கும் மேற்பட்ட கோட்டுருவ ஒவிய வடிவங்கள் காணப்படுகின்றன. இப்பானை வகை நன்கு தரப்படுத்தப்பட்டுள்ளது (Standardization).

    பானை வடிவங்கள்

    இப்பானை வகையில், தட்டுகள் (Dishes) மற்றும் கிண்ணங்கள் (Bowls) காணப்படுகின்றன. அவற்றில் சில கிண்ணங்கள் ஆழமானதகவும், நேரான பக்கங்களைக் கொண்டு அமைந்துள்ளன.

    பண்பாட்டுக் கூறுகள்

    டி.கே.சக்கரபர்த்தி, இப்பண்பாட்டின் பல கூறுகள் (காட்டாக, அரிசி) கிழக்கிந்தியாவில் அல்லது தென்கிழக்காசியாவில் தோன்றியதாகக் கருதுகின்றார் (2006). இம் மக்கள் சிறு, சிறு கிராமங்களில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை இக்காலத்தைச் சேர்ந்த தொல்லியல் இடங்கள் உணர்த்துகின்றன.

    இக்காலத்தில் செம்பு, இரும்பு மற்றும் எலும்பாலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் கற்கருவிகள் காணப்படவில்லை. இரும்புக்கருவிகளான அம்பு முனைகளும் ஈட்டி முனைகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. மீன் தூண்டில் முள், உளி, அம்பு முனை, ஈட்டி முனை, இரும்பாலான கதிர் அறுவாள், மற்றும் உழும் கருவி (hoe) ஆகியவை கிடைத்துள்ளன. சுடுமண்ணால் ஆன வட்டுக்கள் (Disc), உருண்டைகள் (Balls), மனித மற்றும் விலங்கு உருவங்கள், மற்றும் உயர்வகைக் கற்களான அகேட், ஜாஸ்பர், உயர் வகைச் சிவப்புக்கல் (கார்னீலியன்), நீலக்கல் (லாபிஸ் லசூலி) ஆகியவற்றால் செய்யப்பட்ட அணிகலன்கள் காணப்படுகின்றன. அரிசி, கோதுமை மற்றும் பார்லி ஆகிய தானியங்கள் உணவாக உண்ணப்பட்டன. மாடுகளின் எலும்புகள் அடுக்களையின் அருகில் கிடைத்தமை மற்றும் மாட்டு எலும்புகளில் காணப்படும் வெட்டுத் தடயங்கள் அவர்கள் மாட்டிறைச்சியை உண்டதைப் புலப்படுத்துகின்றது. மேலும் கண்ணாடி மணிகள், எலும்பாலான தாயக்கட்டைகள் கிடைத்துள்ளன.

    இவர்கள் மரக்குச்சிகளைக் கொண்டு தட்டி (Wattle and Daub) அமைத்து அதன் மீது களிமண் பூசப்பட்ட சுவர்கள் உள்ள வீடுகளில் வாழ்ந்து வந்தனர். சோன்பூரில் இறந்தவர்களை எரித்ததற்கான சான்றும், எரிந்த அரிசி தானியமும் கிடைத்துள்ளது.

    இந்திய வரலாற்றில் சிந்து சமவெளி நாகரிகத்திற்குப் பிறகு கங்கைச் சமவெளி முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. இக்காலகட்டத்தில் சில மக்கள் குழுக்கள் சிந்துவெளிப்பகுதியிலிருந்து குடியேறியிருந்திருக்கலாம். இப்பகுதிக்கு கிழக்கிந்தியா வடமேற்கிந்தியா மற்றும் மத்திய இந்தியா மற்றும் இமாலயப் பகுதிகளிலிருந்து மக்கள் குடியேறி இருக்கலாம். இவர்கள் அனைவர்களும் ஆரியர்களாக இருக்க முடியாது. வேதங்களில் வரும் குறிப்புகளின் வழியாக ஆரியர் அல்லாதோரும் இப்பகுதியில் வாழ்ந்தது புலனாகின்றது. இப்பானை வகைகளை ஆரியர் அல்லாதோரும் பயன் படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. எனவே இப்பானை வகையை ஆரியர்களுடன் மட்டும் தொடர்ப்படுத்துவது கடினமாகின்றது.

    மேற்கோள் நூல்

    Allchin, B. and R. Allchin. 1968. Indian Civilization: With a New Introduction. New Delhi: Penguin Books

    Chakrabarti, D.K. 2006. The Oxford companion to Indian archaeology: The archaeological foundations of ancient India. Oxford: Oxford University Press.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:58:32(இந்திய நேரம்)