தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • கொடும்பாளூர்

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  வேளிர்களின் தலைநகரமாகத் திகழ்ந்த கொடும்பாளூர், பல கோவில்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

  அமைவிடம்

  இது புதுக்கோட்டையிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

  சிறப்பு

  இவ்வூரின் சிறப்பு மிக்க கோயிலாக மூவர் கோயில் திகழ்கிறது. இது, பூதிவிக்ரம் கேசரி என்ற வேளிர் மன்னனால் கட்டப்பட்டதாகும். இந்த மன்னன் சுந்தரசோழன் மற்றும் இரண்டாம் ஆதித்த சோழனின் சமகாலத்தவர். இம்மன்னன் தன் பெயரிலும், தன் மனைவியர் வரகுணவாட்டி, கற்றளை பிராட்டியார் என்பவர் பெயரிலும் மூன்று கோயில்களைக் கட்டினார். இவைவே மூவர் கோவில் என்றழைக்கப்படுகின்றன. இதில் வடக்கிலிருந்த கோவில் அழிந்து, இரு கோயில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இவை கருவறைகளும், அர்த்த மண்டபமும் பெற்றுள்ளன. மூன்று கோயில்களுக்கும் பொதுவாக தற்போது அழிந்து போன நிலையிலுள்ள மகாமண்டபம் உள்ளது.

  கோவிலின் விமானத்தின் உட்பகுதி, தஞ்சைப் பெரிய கோயிலின் விமானத்திற்கு முன்னோடியாகத் திகழ்கிறது எனலாம். ஒன்றை அடுத்து ஒன்றாகக் கட்டப்பட்ட கற்களினாலான விமானம், சுண்ணாம்பு, சாந்து ஏதுமின்றி கட்டப்பட்டுள்ளது. பரிவாரத் தேவதைகளுக்கான 15 கோயில்கள் இங்கு இருந்தன. சிற்பங்கள் அனைத்தும் மனித உடற்கூறுகளை அளவில் ஒத்திருக்கின்றன. சிவனின் பலவித உருவங்களான உமையெரு பாகர் (அர்த்தநாரி), காலனை உதைக்கும் மூர்த்தி, பிச்சைப் பாத்திரம் ஏந்திய பிட்சாடணர், திரிபுராந்தகர், வீணாதர தட்சிணாமூர்த்தி போன்றவை அழகானச் சிற்பங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

  மூவர்கோயிலுக்கு அருகே திருமுதுகுன்றம் எனப்படும் முசுகுந்தேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பராந்தகசோழனின் காலத்தில் பராந்தக வீர சோழன் குஞ்சரமல்லன் என்பவரால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. பிற்காலத்தில் இங்கு சில சிற்பங்கள் வைக்கப்பட்டதாக மூன்றாம் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

  சிலப்பதிகாரம், கண்ணகியும் கோவலனும் மதுரைக்குச் செல்லும் வழியைக் குறிப்பிடும் போது இவ்வூரையும் குறிப்பிடுகின்றது.

  மேற்கோள் நூல்

  ஜெ.இராஜாமுகமது, 2004. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு சென்னை, அரசு அருங்காட்சியகம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:09:54(இந்திய நேரம்)