தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • பொற்பனைக் கோட்டை

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    பொற்பனைக் கோட்டையில் ஓர் இடைக்காலக் கோட்டையும், பல தொல்லியல் சான்றுகளும் கிடைக்கின்றன.

    அமைவிடம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டைக்கு கிழக்கே 6 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இப்பகுதி செம்மண் நிறைந்த மேட்டுப்பாங்கான பகுதியாக அமைந்துள்ளது.

    சிறப்பு

    பொற்பனைக் கோட்டைக்கு அருகில் நுண்கற்காலக் கருவிகள் கிடைக்கின்றன.

    பொற்பனைக் கோட்டையில் ஒரு வட்ட வடிவிலான கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டையைச் சுற்றி ஓர் அகழி காணப்படுகின்றது. இக்கோட்டைச் சுவரின் மீது செங்கற் கட்டுமானம் காணப்படுகின்றது. இதன் காலம் என்ன என்பது தெரியவில்லை.

    கோட்டையின் உள்ளே கருப்பு-சிவப்புப் பானை ஓடுகள் காணப்படுகின்றன. மேலும், இங்கு ஒரு தமிழ் பிராமி கல்வெட்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மாணவர்களால் 2012 இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இக்கோட்டையில் பொன்னாலான பழங்கள் தரும் பனை மரம் இருந்ததாக ஒரு கதை உள்ளது. இக்கதை திருவரங்குளம் கோயிலுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இதனடிப்படையில் இவ்வூர் பொற்பனைக் கோட்டை எனப் பெயர் பெற்றுள்ளது.

    இக்கோட்டையை வாணாதிராயர்கள் பொ.ஆ 13–14 ஆம் நூற்றாண்டுகளில் கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

    இக்கோட்டைக்கு மேற்குப் பகுதியில் முனிஸ்வர கோவில் உள்ளது. இது இக்கோட்டையின் காவல் தெய்வம் எனக் கருதப்படுகின்றது.

    இப்பகுதியில் நுண்கற்காலக் கருவிகள் காணப்படுகின்றன. இவை தொல்பழங்கால மக்களின் சான்றுகளாகும்.

    மேற்கோள் நூல்

    ஜெ.இராசா முகம்மது, 2004. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, சென்னை அருங்காட்சியகம் எழும்பூர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:12:42(இந்திய நேரம்)