தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • திருமயம்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    குகைக் கோயில்களும் கோட்டையும் கொண்டு திருமயம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகத் திகழ்கின்றது.

    அமைவிடம்

    இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ தெற்கே உள்ளது. இங்கு சிறிய மலை ஒன்றுள்ளன. இதனைச் சுற்றிலும் இவ்வூர் அமைந்துள்ளது.

    சிறப்பு

    இங்குள்ள இரண்டு குகைக் கோயில்கள் சிவன் மற்றும் விஷ்ணுவுக்காக எடுக்கப்பட்டவையாகும். சிவன் கோயில் சத்தியகிரீஸ்வரம் என்றழைக்கப்படுகிறது. இதன் கருவறையில் லிங்கம் உள்ளது. இது பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட குகைக் கோவிலாகும். காலத்தால் பிற்பட்ட முன் மண்டபத்தில் அம்மன், பைரவர், ஒன்பது கோள்கள் போன்றவற்றிற்கான தனி சன்னதிகள் உள்ளன.

    இக்குகைக் கோயில் கல்வெட்டில் “பரிவாதினி” என்ற சொல் கிரந்த எழுத்துக்களில் காணப்படுகிறது. இது ஒருவகை யாழைக் குறிக்கும். இசைக் கல்வெட்டின் மேல் ஜோய்சள மன்னர் காலத்தின் பிற்காலக் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.

    திருமாலின் குகைக் கோயில் சத்தியமூர்த்தி கோயில் என்றழைக்கப்படுகிறது. இது ஆதிரங்கம் என்றும் கூறப்படுகிறது. கருவறையில் பள்ளிகொண்ட பெருமாளின் உருவம் இருக்கிறது. பின் சுவற்றில் மதுகைடபர்களை அழிக்கும் நாராயணின் கதை பல சிற்பத் தொகுதிகளாக விவரிக்கப்பட்டுள்ளது. இது முத்தரையர் குடைவரையாகும். இங்கு பிற்காலப் பல்லவர்கள், பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் விஜயநகர காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

    இங்குள்ள மலை மீது உயரத்திலுள்ள பாறையில் லிங்கம் மட்டும் கொண்ட ஒரு குடைவரைக் கோயில் உள்ளது. இது காலத்தால் மிகவும் பழமையானது எனக் கருதப்படுகின்றது. திருமயம் கோட்டை பிந்தைய வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்தது.

    இங்குள்ள கோட்டை வட்ட வடிவத்தில் ஏழு மதில்களுடன் கட்டப்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் இடிபாடுகள் அடைந்துள்ளன. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரையுடன் தொடர்புபடுத்தி, இக்கோட்டையை ஊமையன் கோட்டை என அழைக்கின்றனர். இக்கோட்டை இந்திய அரசு தொல்லியல் துறையினரால் நன்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

    தொல்லியல் சான்றுகள்

    இம்மலை மீது நுண்கற்கருவிகள் காணப்படுகின்றன. மேலும் இங்குள்ள பாறை மறைவிடங்களில் சில ஓவியங்கள் காணப்படுகின்றன. இவற்றின் காலம் உறுதி செய்யப்படவில்லை.

    திருமயம் அதன் மலையும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து சிறப்பு பெற்றிருந்ததாக அங்கு கிடைக்கும் தொல்லியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

    மேற்கோள் நூல்

    ஜெ.இராஜாமுகமது, 2004. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு சென்னை, அரசு அருங்காட்சியகம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:14:21(இந்திய நேரம்)