தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உயர்வகைக் கல் மணிகள் (கார்னீலியன் அணிகலன்கள்)

  • உயர்வகைக் கல் மணிகள்
    (கார்னீலியன் அணிகலன்கள்)

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப் பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    "கார்னீலியன்" என்பது ஒருவகை மதிப்பு மிக்க கல் வகையாகும். தமிழகத்தில் இவ் வகைக் கற்கள், மணிகள், மோதிரங்கள் போன்ற அணிகலன்கள் செய்ய இரும்புக்காலத்திலும் சங்ககாலத்திலும் பயன்படுத்தப்பட்டன.

    சிறப்பு :

    இது ஆழ்ந்த சிவப்பு நிறமுடைய கல் வகையாகும். பாகிஸ்தானிலுள்ள மெஹ்ர்கரில் சுமார் 6000 வருடங்களுக்கு முன் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிக காலத்திலிருந்து இது அணிகலன்கள் செய்ய அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

    அணிகலன்கள் உண்டாக்கும் முறை :

    இது கால்சிடொனி (chalcedony) என்ற இயற்கையாகச் சிறு சிறு கூழாங்களாக வட இந்தியா மற்றும் தக்காணப்பகுதிகளில் கிடைக்கின்றது. இக்கல்லைச் சூடு படுத்தி கார்னீலியனின் சிவப்பு நிறம் பெறப்படுகின்றது.

    செய்யும் முறை :

    உயர்வகை சிவப்புக் கல் மணிகள்
    (கார்னீலியன் அணிகலன்கள்)

    சூடுபடுத்தப்பட்டு சிவப்பு நிறம் பெற்ற கார்னீலியன் கூழாங்கற்களிலிருந்து சிறு, சிறு செதில்கள் (மான் கொம்பாலான சுத்தியல் கொண்டு) உடைத்து எடுக்கப்பட்டு, செய்யப்படவேண்டிய அணிகலனின் தற்காலிக வடிவம் பெறப்படுகின்றது. பின்னர் இதில் மேலும் சிறுசிறு செதில்கள் உடைத்து எடுக்கப்பட்டு, வேண்டிய வடிவம் பெறப்படுகின்றது. பிறகு மணிகள் துளையிடப்படுகின்றன. இதில் துளையிடுவதற்குப் பலமணி நேரம் ஆகும் என கணக்கிடப்படுகின்றது. பின்னர், அது நன்கு தேய்க்கப்பட்டு மெருகேற்றப்படுகின்றது.

    கிடைத்த இடங்கள் :

    இவ்வகை மணிகள் ஆயிரக்கணக்கில் பெருங்கற்கால மற்றும் சங்க கால வாழ்விடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் கார்னீலியன் மணிகள் காணப்படுகின்றன. கொடுமணல், தண்டிக்குடி, பொருந்தல் மற்றும் பிற இடங்களில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுத் தொடக்கக்கால வாழ்விடங்களில் மணிகள், மோதிரங்கள், மோதிரங்களில் பதிக்கும் கற்கள், மற்றும் பதக்கம் (cameo) ஆகியவை செய்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:42:36(இந்திய நேரம்)