தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • மலையடிப்பட்டி

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  தமிழகக் கட்டிடக் கலையின் வளர்ச்சிக்கு வித்திட்ட இடமாகத் திகழ்கிறது மலையடிப்பட்டி. இங்கு பாண்டியர் மற்றும் முத்தரையர் குடைவரைகள் உள்ளன.

  அமைவிடம்

  இது புதுக்கோட்டைக்க்கு வடக்கே 33 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியிலுள்ள மலை, இவ்வூருக்குத் தனிச்சிறப்பை அளிக்கின்றது. இம்மலை இவ்வூருக்குப் பெயரை அளித்துள்ளது.

  சிறப்பு

  சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு எடுக்கப்பட்ட இரு குடைவரைக் கோயில்கள் உள்ளன. சிவனுக்கான குடைவரைக் கோயில் நந்திவர்ம பல்லவன் காலத்தில், எட்டாம் நூற்றாண்டில் குவாவன் சாத்தன் எனும் விடேல் விடுகு முத்தரையனால் எடுப்பிக்கப்பட்டது என்று இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. கருவறையை அடுத்த அர்த்த மண்டபத்தில் சப்தமாதர்கள், விநாயகர், வீரபத்திரர் மற்றும் அழகு பொருந்திய மகிஷமர்த்தினி போன்ற சிற்பங்கள் பாறையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. முன்னுள்ள மண்டபம் விஜயநகர காலத்தில் கட்டப்பட்டதாகும்.

  திருமாலுக்கு எழுப்பப்பட்ட குகைக் கோயிலின் சிவன் குடைவரையைவிட காலத்தால் பிற்பட்டது. கருவறையில் பாம்பின் மேல் துயிலும் பள்ளிக் கொண்ட பெருமாள் உருவம் மிக அழகாக அமைந்துள்ளது. மண்டபத்தில் வராகர் மற்றும் நரசிம்மரின் சிற்பங்கள் அமைந்துள்ளன. காலத்தால் பிற்பட்ட அம்மன் சன்னதியைத் தெம்மாவூர் அரையன் மங்கன் தென் கொண்டான் என்னும் மன்னன் கட்டியதாகக் கல்வெட்டு கூறுகிறது. அச்சுதப்ப நாயக்கர் அளித்த கொடைகளையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

  தொல்லியல் சான்றுகள்

  இங்குள்ள மலையில் குகைகளும் பாறை மறைவிடங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள பாறை மறைவிடங்களில் கற்குழிகள் (Cupules) காணப்படுகின்றன. இவற்றின் காலம் என்ன என்பது தெரியவில்லை. இப்பகுதியில் நுண்கற்கருவிகள் காணப்படுகின்றன.

  இங்குள்ள பாறை மறைவிடத்தில் சில படுக்கைகள் உள்ளன. இவை சமண முனிவர்களுக்காக வெட்டப்பட்டிருக்கலாம். இப்பகுதியில் பல பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் காணப்படுகின்றன.

  இன்று சிறிய ஊராகத் திகழும் மலையடிப்பட்டி ஒரு காலத்தில் சிறப்பு பெற்ற ஊராக இருந்துள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:10:43(இந்திய நேரம்)