தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • எறிவீரபட்டினம்

    முனைவர் பா.ஜெயக்குமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை



    அறிமுகம்

    இடைக்காலத் தமிழகத்தில் உள்நாட்டு வெளிநாட்டு வணிகர்களுக்குப் பாதுகாப்புடன் கூடிய மையமாக விளங்கியது எறிவீரபட்டினம். இது போன்ற மையங்கள் நாட்டின் பல இடங்களில் இருந்தமையைச் சான்றுகள் வாயிலாக அறியமுடிகின்றது. அக்காலத்தில் இதற்குச் சமமாக ‘அஞ்சினான் புகலிடமும்’ வணிகர்களின் பாதுகாப்பு சார்ந்த மையமாக இருந்தமையும் இங்கு சுட்டத்தக்கதாகும். எனினும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வணிகக் குழுவினருடன் நெருங்கிய தொடர்புடையதாக எறிவீரபட்டினங்கள் இருந்தன என்றால் மிகையாகாது.

    சிறப்பு

    எறிவீரபட்டினம் (எறிவீரர் = சேனை + பட்டினம் = நகரம்) என்பது எறிவீரர்கள் என்ற படைப் பிரிவினர்களைக் கொண்ட சேனைகளால் பாதுகாப்புக்குள்ளான நகரமாகும். வணிகர்களைப் பாதுகாக்கும் வீரர்களடங்கிய படை எறிவீரபட்டினத்தார் அல்லது முனைவீரர்கள் என்று அழைக்கப்பட்டதாக கே.ஆர்.வேங்கடராம அய்யர் கருதுகிறார் (K.A.Venkatarama Ayyar, “Medieval Trade, Craft and Merchant Guieds in South India, Journal of Indian History, 25, 1947, pp. 269-280). இவர்களை வீரகொடியார், முனைவீரகொடியார் எனவும் கல்வெட்டுகள் சுட்டுகின்றன.

    கல்வெட்டுக் குறிப்புகள்

    மயிலாப்பூர் (சென்னை மயிலாப்பூர்) அருகிலிருந்த காட்டூர் என்ற இடத்தை வணிகர்கள் எறிவீரபட்டினமாக அமைத்ததைக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. இதே போன்று திருநெல்வேலி மாவட்டம் திருவாலீசுரம் என்ற இடமும் எறிவிரபட்டினமாக இருந்துள்ளது. சேரன்மாதேவிக்கு அருகிலுள்ள நிகரிலிசோழவிண்ணகரம் என்ற இடத்திலிருந்த பெருமாள் கோயிலை எறிவீரபட்டினத்தார் பாதுகாத்ததைக் கல்வெட்டு காட்டுகிறது. இத்தகைய எறிவீரபட்டினங்கள் துறைமுகங்களுக்கு அருகிலும் உள்நாட்டுப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்ததோடு எறிவீரர்கள் வணிகர்களையும் அவர்களது உடைமைகளையும் பாதுகாத்தது மட்டுமல்லாமல் சமூகப் பாதுகாப்பையும் தங்களது முக்கியப் பணியாகக் கொண்டிருந்தனர் என்பது தெரியவருகிறது. எறிவீரபட்டினங்களைக் கடற்கரைத் துறைமுகங்களுக்கு இணையான இடமாக முனைவர் கென்னத் ஆர்.ஹால் என்னும் அறிஞர் கருத்துத் தெரிவித்துள்ளமை இங்கு நோக்கத்தக்கதாகும். இதன்படி துறைமுகப்பட்டினங்களில் கிடைக்கக்கூடிய எல்லா வகையான பொருட்களும் எறிவீரபட்டினத்திலிருந்து நுகர்வோர்களைச் சென்றடைந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. நகரத்தார், நானாதேசிகள், பதினெண்விசையத்தார் போன்ற வணிகக் குழுக்கள் இணைந்து எறிவீரபட்டினம் ஒன்றை அமைத்ததாகக் கல்வெட்டுச் சுட்டுவதிலிருந்து (ARE: 1912/342) எறிவீரபட்டினங்களின் உயர்வும் தாழ்வும் வணிகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தமை அக்காலச் சமூகப் பொருளாதாரத்தில் வணிகர்களின் தாக்கம் ஓங்கியிருந்ததைக் காட்டுவதாகும்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:55:12(இந்திய நேரம்)