தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • குடுமியான் மலை

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    இசைக் கல்வெட்டினாலும், குகைக் கோயிலினாலும் பெருமை பெற்ற இடம் குடுமியான் மலையாகும். குடுமியை உடையவன் என்பது சமஸ்கிருதமயமாக்கப்பட்ட, இங்குள்ள தெய்வம் சிகாநாதர் (சிகை=குடுமி) என அழைக்கப்படுகின்றது.

    அமைவிடம்

    இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து சுமார் 16 கி.மீ வடமேற்காக அமைந்துள்ளது.

    சிறப்பு

    இங்குள்ள சமணர் படுக்கை கொற்றந்தை என்பவருக்காக வெட்டப்பட்டது. இங்கு தமிழ் பிராமிக் கல்வெட்டு உள்ளது. இது பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

    குன்றின் சரிவிலுள்ள மேலைக் கோயில் பழமையான குடைவரைக் கோயிலாகும். இதில் லிங்கம் காணப்படுகிறது. மலையின் தெற்குப் பகுதியில் வலம்புரி விநாயகர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இது பாண்டியர் குடைவரையாகும்.

    இக்குகைக் கோயிலின் தெற்குப் பகுதியில் கருநாடக இசை குறித்த சிறப்பு வாய்ந்த இசைக் கல்வெட்டு வெட்டப்பட்டு உள்ளது. இது ருத்ராச்சார்யா என்பவரின் சீடனான பரம மகேஸ்வரனால் வெட்டப்பட்டது. இக்கல்வெட்டு சங்கீரண ஜதி எனப்படும், ராகத்தைப் பற்றிய குறிப்புகளைக் கூறுகிறது. இதன் அருகில் “பரிவாதினி” என்ற சொல் குறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு யாழ் வகையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் வெட்டப்பட்ட கல்வெட்டாக இருக்கலாம் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கருதினர்.

    குன்றுடன் அமைந்த இந்த ஊரில் சிகாநாதர் – அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பிற்கால மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு, தொண்டைமான் மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு வந்துள்ளது.

    இக்கோவிலில் உள்ள 16–17ஆம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்த ஆனைவெட்டு மண்டபத்தில், ரதி – மன்மதன், மோகினி, முருகன், பத்துத் தலை இராவணன், பெருமாள் ஆகிய சிற்பங்கள் கலைநயத்துடன் காணப்படுகின்றன.

    இவ்வூரில் சுமார் 120 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை அக்காலத்து அரசியல், சமூக, பொருளாதார நிலையை எடுத்துரைக்கும் சான்றுகளாக அமைந்துள்ளன.

    மேற்கோள் நூல்

    ஜெ.இராஜாமுகமது, 2004. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு சென்னை, அரசு அருங்காட்சியகம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:10:14(இந்திய நேரம்)