தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாகப்பட்டினம் அகழாய்வு

 • நாகப்பட்டினம் அகழாய்வு

  முனைவர் பா.ஜெயக்குமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  அறிமுகம்:

  சங்ககாலக் காவிரிப்பூம்பட்டினத்திற்குப் பிறகு சோழ மண்டலக் கடற்கரையில் (வங்கக் கடலின் தமிழகக் கடற்கரைப் பகுதி) தமிழர் பண்பாட்டின் வளமைப் பெற்ற மையமாக விளங்கிய நாகப்பட்டினத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை இக்கட்டுரை ஆசிரியர் தலைமையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 21 நாட்கள் அகழாய்வு மேற்கொண்டது.

  ஊர்ச்சிறப்பு:

  தேவாரப் பாடல்களிலும் நாகப்பட்டினம் நாகநாதர் கோயிலில் உள்ள பல்லவர் கல்வெட்டிலும் இவ்வூர் நாகை’ என அழைக்கப்படுவதைக் காணலாம். இப்பெயர் பின்னர் ‘பட்டினம்’ (அந்நாட்களில் கடற்கரையில் அமைந்திருந்த துறைமுகத்தைச் சுட்டும் சொல்) என்ற பின்னொட்டுடன் சேர்ந்து நாகப்பட்டினம் என வழங்கலாயிற்று. நாகர் இன மக்களுக்கும் இவ்விடத்திற்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் இவ்வூர் நாகை எனப் பெயர் பெற்றதாகவும் கொள்வர் (ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழகம் ஊரும்பேரும், 1976). சோழர் காலத்தில் தமிழகத்தின் மிகத் முதன்மையான பன்னாட்டுத் துறைமுகமாக இருந்துள்ளதையும் தொடர்ந்து ஐரோப்பியர் காலம்வரை இவ்வூர் வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இடமாக விளங்கியதையும் சான்றுகளின் வாயிலாக அறியமுடிகிறது (பா.ஜெயக்குமார், தமிழகத் துறைமுகங்கள், 2001). சேக்கிழார் அருளிய பெரியபுராணத்திலும், தௌ-இ-சிலு போன்ற சீன மொழிக் குறிப்புகளிலும் நாகப்பட்டினத்தின் துறைமுகச் சிறப்புகள் பேசப்படுகின்றன. மேலும், இத்சிங், மார்க்கோபோலோ, இரசீத்-உத்-தின் மற்றும் மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த பயணிகளின் குறிப்புகளிலும் நாகப்பட்டினத்தின் சிறப்புகள் காணப்படுகின்றன. சைவ, வைணவ, சமண, பௌத்த மதங்களின் மையமாகவும் நாகப்பட்டினம் விளங்கிற்று. சோழப் பேரரசின் இரண்டாவது தலைநகராகவும் இவ்வூர் இருந்துள்ளது. அப்போது இவ்வூர் சோழகுலவல்லிப்பட்டினம் என அழைக்கப்பட்டது.

  அகழாய்வுப் பகுதியின் அமைவிடம்:

  மாவட்டத் தலைநகரான நாகப்பட்டினத்தின் வெளிப்பாளையம் (பழைய பெயர்: அவுரித்திடல்) பகுதியில் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் பழைய கிறித்துவ வழிப்பாட்டுக் கூடத்திற்கு எதிரில் 4×4 மீ பரப்பளவில் அகழாய்வுக் குழி அமைக்கப்பட்டது. இவ்வகழாய்வுக் குழியின் கன்னி மண் (natural soil) காணப்பட்ட 3.35 மீ ஆழம் வரை தோண்டப்பட்டது.

  அகழாய்வின் கண்டுபிடிப்புகள்:

  மக்கள் வாழ்ந்த ஏழு மண்ணடுக்குகள் இவ்வகழாய்வில் காணப்பட்டன. தொடக்கத்தில் காணப்பட்ட இரு மண்ணடுக்குகள் தற்காலப் படிவுகளாகும். மற்ற ஐந்து மண்ணடுக்குகளிலும் மேலிருந்து கீழாக ஐரோப்பியர் காலத்திலிருந்து இரும்புக் காலம் (சங்ககாலம் எனவும் அழைக்கலாம்) முடிய மக்கள் வாழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆக 2000 ஆண்டுகளுக்குரிய பண்பாட்டு எச்சங்களை இந்த அகழாய்வு வெளிக்கொணர்ந்தது..
  அகழாய்வுக் குழியின் வடக்குப்புறம் கட்டடப் பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனுள் டச்சு எழுத்துக்களுடன் வெண்களிமண்ணாலான புகைப்பிடிப்பான்கள் அதிகளவில் கிடைத்ததோடு 1753 என ஆண்டு பொறிப்புடன் டச்சு அரசு வெளியிட்ட செம்பினாலான காசு (VOC coin) ஒன்றும், கி.பி. 16 -18 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சீனக் களிமண் வகை (porcelain) மண்கலச் சில்லுகளும் காணப்பட்டன. இம்மண்கலச் சில்லுகளில் ஒன்றில் ஐரோப்பியர்களால் மசூலா (Masula) என அழைக்கப்பட்ட (தற்போது தமிழகத் கடற்கரைப் பகுதியில் இது காணப்படுவதில்லை) தமிழக மரபு சார்ந்த கலமான கட்டுவல்லமும் மற்றொரு சில்லில் தோணி (தூத்துக்குடி தோணி போன்று) உருவமும் வண்ணங்களால் தீட்டப்பட்டுள்ளமை இங்குச் சுட்டத்தக்கதாகும். எனவே, மேற்சுட்டிய கட்டடம் டச்சு அரசின் உயர் அலுவலர்களின் அலுவலகமாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதமுடியும்.
  இவ் அகழாய்வில் சோழர் காலக் கூரை ஓடுகள், பானை ஓடுகள் கிடைத்ததோடு ‘ஸ்ரீராஜராஜ’ எனப் பெயருடன் சோழப் பேரரசன் முதலாம் இராஜராஜனின் செப்புக் காசு ஒன்றும் கிடைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். காரணம், சோழ மன்னர்களின் நாணயங்கள் மேற்பரப்பில் தமிழகம் முழுவதும் ஏராளமாக கிடைத்திருந்தாலும் அகழாய்வில் கிடைத்தது இதுவே முதலாவது என்பதனால் ஆகும். கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் உள்ளது) அருகில் உள்ள மாளிகைமேடு (முதலாம் இராஜேந்திர சோழனின் மாளிகை இருந்ததாகக் கருதப்படும் இடம்) அகழாய்வில் கூட சோழர் காசுகள் கிடைக்கவில்லை என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும். புத்தப் படிமங்களில் காணப்படும் குறியீடுகள் பல மண்கலச் சில்லுகளில் கிடைத்திருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. அகழாய்வுக் குழியின் தெற்குப் பகுதியில் செங்கற் கட்டடப் பகுதி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுமானம் ஆனைமங்கலம் செப்பேடுகள் (Epigraphia Indica Vol.II) குறிப்பிடும் புத்த விகாரைகள் ஒன்றின் அடிப்பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. சோழர்களின் நாகப்பட்டினமும் பாலர்களின் நாலந்தாவும் ஸ்ரீவிஜய மன்னர்களால் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த சமகாலத்து புத்த மையங்களாகும் (K.A.Nilakanta Sastri, South India and South East Asia.1978) மேற்சுட்டிய சோழர்காலக் கட்டுமானத்தின் இரண்டு செங்கற்களுக்கு இடையே பயன்படுத்தப்பட சாந்தின் (binding material) வகையைக் காணமுடியவில்லை. மேலும், இக்கட்டுமானத்துடன் கி.பி. 9-15ஆம் நூற்றாண்டுக்குரிய சீனக்களிமண் (celadon) வகையைச் சார்ந்த மண்கலச் சில்லுகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது, சோழர் காலத்தில் புத்த சமயம் சார்ந்த சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடனான கடல்சார் தொடர்புக்குச் சான்று பகர்கின்றது.
  பல்லவர் காலத்தைச் சேர்ந்த சிவப்பு நிறமுடைய மண்கலச் சில்லுகள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இவற்றுள் ஒரு சில்லில் ‘நாகர்’ என எழுத்துகள் காணப்படுவது சிறப்புக்குரியதாகும். எழுத்துகளின் அமைப்பினைக் கொண்டு கி.பி. 6-7 ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம். எழுத்துகள் கீறப்படாமல் புடைப்பாகக் காட்டப்பட்டுள்ளமை இவை முத்திரையிடப்பட்டவை என்பதைப் புலப்படுத்துகிறது.
  கன்னி மண்ணுக்கு மேலே இரும்புக் காலம் சார்ந்த கருப்பு-சிவப்பு மற்றும் கருப்பு நிற மண்கலச் சில்லுகள் குறைந்த எண்ணிக்கையில் காணப்பட்டாலும் இவ்விடத்தின் தொடக்ககால மக்களாகச் சங்ககால மனிதன் வாழ்ந்துள்ளான் என்பதைப் புலப்படுத்துகிறது. மேலும், இப்பகுதியில் வீடு கட்டுவதற்காகக் குழிகள் தோண்டும்போது முதுமக்கள் தாழிகள் தொடர்ந்து கிடைத்து வருவது (தினமணி : 19.2.2010) நாகப்பட்டினம் சங்ககால மக்களின் வாழ்விடமாகத் திகழ்ந்ததை வெளிப்படுத்துகிறது.
  அகழாய்வில் ஆறாவது மற்றும் ஏழாவது மண்ணடுக்குகளுக்கு இடையே சரிசமமாக உடைந்த நிலையில் புதிய கற்காலக் கோடரி (Neolithic celt) கிடைத்துள்ளது. இது, இப்பகுதியில் புதிய கற்காலப் பண்பாட்டுக்குரிய தமிழ் மக்கள் வாழ்ந்ததின் அடையாளமாகக் கருதப்படுவதற்கும் இவர்களது கற்கருவிகளை இவர்களுக்குப்பின் வாழ்ந்த மக்களும் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறிவதற்கும் சான்றாகிறது.
  தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்விகளில் ஐரோப்பியர் காலம் முதல் சங்ககாலம் வரையிலான பண்பாட்டு நிலைகளை முதன் முறையாக வெளிக்கொணர்ந்த சிறப்பு நாகப்பட்டினம் அகழாய்வுக்கு உண்டு. மேலும், முதல் இராஜராஜனின் ஆனைமங்கலம் செப்பேட்டில் (கி.பி. 1006) குறிப்பிடப்பட்டுள்ள “உலகத்திற்கே திலகமாக விளங்கும் நாகப்பட்டினமான சோழக் குலவல்லிப்பட்டினம்” என்னும் தொடருக்குரிய சிறப்பும் இவ் அகழாய்வின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது எனில் மிகையில்லை.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:39:58(இந்திய நேரம்)