தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தஞ்சை நாயக்கர் காசுகள்

 • தஞ்சை நாயக்கர் காசுகள்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  தஞ்சை நாயக்கர் (பொ.ஆ. 1600-1700 பொ.ஆ):

  விஜயநகர பேரரசர் அச்சுதராயர் சேவப்ப நாயக்கர் (1532-1560) என்பாரை பொ.ஆ. 1532இல் தஞ்சையின் நாயக்கராக நியமித்துள்ளார். இவருக்குப் பிறகு அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர், அழகிரி நாயக்கர் போன்றோர் ஆண்டுள்ளனர். அழகிரி நாயக்கரின் காலத்தில் பிஜப்பூர் சுல்தான் அடில்ஷாவினால் பணிக்கப்பெற்ற வெங்கோஜி பொ.ஆ. 1675இல் தஞ்சையில் மராட்டியர் ஆட்சியை ஏற்படுத்தினார்.

  சின்னங்கள்:

  உமா மேகேஸ்வரர்
  ரகுநாத

  தஞ்சை நாயக்கர் காசுகளில் வட்டத்தினுள் இடது பக்கம் நோக்கி அமர்ந்த காளையின் மேல் சந்திரன், சூரியன், காளையின் முன் குத்துவிளக்கு, இடது பக்கம் மன்னரின் நிற்கும் உருவம் வலது பக்கத்தில் சங்கு, அமர்ந்த நிலை சிவன் பார்வதி, காளையும் யானையும் ஒரே வடிவில் (மன்னார்குடி இராஜகோபாலஸ்வாமி கோயில் கற்சுவரில் இவ்வுருவம் பொறிக்கப்பெற்றுள்ளது). கையில் வில் அம்புடன் நின்ற நிலையில் ராமர், கண்ட பேருண்ட பட்சி, வலது பக்கம் நோக்கி நிற்கும் அன்னம், அமர்ந்த நிலை சிவன் பார்வதி, இடது பக்கம் நோக்கி நின்று சிவலிங்கத்திற்குப் பால் சொரியும் பசு, இடது பக்கம் நோக்கி நிற்கும் காளை, வலது பக்கம் மயில் மீது அமர்ந்திருக்கும் முருகன், வட்டத்திற்குள் சிவலிங்கம், புள்ளிகளாலான வட்டத்திற்குள் சிவலிங்கம், வலது பக்கம் நோக்கி நிற்கும் அனுமன், இடது பக்கம் நோக்கி நிற்கும் காளையின் மேல் சிவன், சக்கரம், கருடன், சிம்மவாகினி உருவம், அமர்ந்திருக்கும் காளையும், காளையின் மீது சூரியன், சந்திரன், அமர்ந்த நிலையில் கணபதி, நின்ற நிலையில் முருகன், கண்ட பேருண்ட பறவை, வலது பக்கம் நோக்கி நிற்கும் அன்னம், அமர்ந்த நிலை சிவன் பார்வதி அமர்ந்த நிலை பெண் தெய்வம், நகரும் அனுமனின் முதுகில் ராமன், சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் அனுமன், அமர்ந்த நிலை லட்சுமி நாராயணன், அமர்ந்த நிலை வைணவ குரு, முன் வலது காலை தூக்கி கொண்டு நிற்கும் யானை, இலிங்கம், மாலை அணிந்துள்ள லிங்கத்தை வணங்கும் மன்னர், கார்த்திகேயன் நின்ற நிலையில், திருமகள் ஒரு பீடத்தின் மேல் அமர்ந்த நிலை, திருமகள் நின்ற நிலை, பீடத்தின் மேல் அமர்ந்த அம்மன், கையில் செண்டுடன் ராஜாலங்கார ஸ்ரீவித்யா ராஜகோபாலஸ்வாமி (மன்னார்குடி), லட்சுமி நரசிம்மன், வட்டத்திற்குள் கப்பல் போன்ற சின்னங்களுடன் பின்புறம் அரசர்களின் பெயர்கள் பொறிக்கப் பெற்றுள்ளன.

  எழுத்துப்பொறிப்புகள்:

  தஞ்சை நாயக்க அரசர்களில் செவ்வப்பர் (1532-1580), அச்சுதப்பர் (1560-1614), ரகுநாதர் (1600-1634), விஜயராகவர் (1633-1673), அழகிரி (1674) போன்ற அரசர்களின் பெயர்கள் பொறித்த காசுகளே கிடைக்கின்றன. விஜயநகர அரசு காலத்திலிருந்து கிடைக்கும் காசுகள் அனைத்துமே பெரும்பாலும் எழுத்துப்பொறித்ததாகவே உள்ளன.

  எழுத்தும் மொழியும்:

  இவ்வரசர்களுள் ரகுநாதர் மட்டுமே தெலுங்கு, நாகரி எழுத்துக்களோடு தமிழ் எழுத்துப்பொறித்த காசுகளையும் வெளியிட்டுள்ளார். மற்ற அரசர்கள் தெலுங்கு, கன்னடம், நாகரி எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:45:45(இந்திய நேரம்)