தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வேணாட்டுச் சேரர் காசுகள்

  • வேணாட்டுச் சேரர் காசுகள்

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    வேணாட்டுச் சேரர் காசுகள் (பொ.ஆ. 13-16 ஆம் நூற்றாண்டு):

    சேரர்களில் ஒரு பிரிவினர் பொ.ஆ. 13 ஆம் நூற்றாண்டு வாக்கில் கன்னியாகுமரிப் பகுதியையும் சேர்த்தது வேணாடு என்ற பெயரில் ஆட்சி நடத்தினர். இவர்கள் வேணாட்டு சேரர்கள் என அழைக்கப் பெற்றனர். இவர்களில் வீர கேரளன், கோதை ரவி, உதயமார்த்தாண்டன் போன்ற அரசர்கள் நாகரி எழுத்துப்பொறித்த காசுகளை வெளியிட்டனர். பொ.ஆ. 15,16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராமராசா, பூதல வீரராமன், சேரகுலராமன் போன்ற அரசர்கள் தமிழ் எழுத்துப்பொறித்த காசுகளை வெளியிட்டனர்.

    பொதுவாக வேணாட்டுச் சேரர்களது காசுகளின் ஒருபக்கம் முதலை, சிலந்தி, நிற்கும் மனித உருவம் (இலங்கை மனிதன்), அமர்ந்த மனித உருவம், செங்குத்தான மீன்கள், செங்குத்தான அங்குசம், குத்துவிளக்கு, மூன்று புள்ளிகள், இரு சிறிய மீன்களுக்கு நடுவே செண்டு (பாண்டியர் காசுகளை போல்), பரசு, கட்டாரி ஆகிய சின்னங்கள் பொதுவாகப் பொறிக்கப் பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பான்மையாக நிற்கும் மனித உருவமும் அதன் இடப்புறம் குத்துவிளக்கும் காணப்பெறுகின்றது. மறுபக்கம் சிலந்தி, முதலை, அமர்ந்த மனித உருவம் வலப்பக்கம் அல்லது இடப்பக்கம் நிற்கும் யானை, சங்கு, சக்கரம், இரு மீன்கள், குத்துவிளக்கு நான்கு புள்ளிகள் போன்றவை காணப்பெறினும் மீன், முதலை, அமர்ந்த நிலை உருவம் யானை போன்ற சின்னங்கள் பெரும்பாலும் காணப்பெறுகின்றன.

    எழுத்துப்பொறிப்புக் காசுகள்:

    ஸ்ரீ வீரகேரளஸ்ய, சரிகோதரஸ்ய, ஸ்ரீ கண்டராங்குஸ்ய, சரிகோதரவிஸய, சிரி உதயமார்த்தாண்டஸ்ய போன்ற எழுத்துப்பொறிப்புகள் நாகரியிலும் ஸ்ரீ உதயமார்த்தாண்ட, ஸ்ரீ பூதளவீரராமன், பூதல, பூதலவீரராமன், சேரகுலராமன், இராமாயிராசா போன்ற எழுத்துப்பொறிப்புகள் தமிழிலும் உள்ளன.

    எழுத்து மற்றும் மொழி:

    நாகரியையும் தமிழையும் பயன்படுத்தியுள்ளனர்.

    கிடைத்துள்ள இடங்கள்:

    இக்காசுகள் தஞ்சாவூர், திருவனந்தபுரம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் போன்ற இடங்களில் கிடைத்தாலும் மதுரை, திருவனந்தபுரம், திருநெல்வேலி ஆகிய ஊர்களில் அதிகளவில் கிடைக்கின்றன.

    உலோகம்:

    வெள்ளி, செம்பு ஆகிய இரு உலோகத்திலும் கிடைத்தாலும் செம்பினாலானவை அதிகம் கிடைக்கின்றன. ஒரு சில செப்புக் காசுகளில் வெள்ளி முலாம் பூசப்பெற்றுள்ளதாக ஆறுமுக சீதாராமன் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:46:15(இந்திய நேரம்)