தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இடைக்கற்காலம்

  • இடைக்கற்காலம்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப் பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    இடைக்கற்காலம் என்பது ஆங்கிலத்தில் Mesolithic என்று அழைக்கப்படுகின்றது. இது பழங்கற்காலத்திற்கும் புதியகற்காலத்திற்கும் இடையில் (Meso என்றால் இடையில் உள்ள என்று பொருள்) இருப்பதால் இடைக்கற்காலம் என்று அழைக்கப்படுகின்றது.
    இக் காலகட்டத்தில் பல பண்பாட்டு மாற்றங்கள் எற்பட்டன. இக் காலகட்டத்தில் மக்கள் சிறிய நுண்கற்கருவிகளைப் பயன்படுத்தினர். இக்காலத்தின் இறுதிப்பகுதியில் விவசாயம் தொடங்கியது. ஆடு மாடுகள் பழக்கப்படுத்தப்பட்டன. இம்மாற்றங்கள் ஆலோசீன் (Holocene) காலத்தின் தொடக்கத்தில் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கின. புதிய கற்காலத்தில் பல வளர்ச்சிகளுக்கு இது வழிவகுத்தது.
    பழங்கற்காலத்தில் பெரிய அளவிலான கற்கருவிகளைப் பயன்படுத்திய மக்கள், இக்காலத்தில் சிறிய அளவிலான கருவிகளைப் பயன்படுத்தினர்.

    இடைக்கற்காலத்தைச் சேர்ந்த நுண்கற் கருவிகள்

    சுற்றுச்சூழல் மாற்றங்களின் விளைவாக மனிதர்கள் சிறிய விலங்குகளை வேட்டையாடினார்கள். மேலும் தாவர வகைகளைச் சேகரித்து உண்டு வாழ்ந்தனர். உணவு கிடைப்பதைப் பொறுத்து இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது கலைப்பொருட்கள் மற்றும் பாறை ஓவியங்கள் இந்தியாவில் பல இடங்களில் காணப்படுகின்றன. இவர்கள் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
    தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் காணப்படும் தேறி மணற்குன்றுகளில் இக்கால மக்களின் சான்றுகள் காணப்படுகின்றன.
    இந்தியாவில் இம்மக்கள் பரவலாக பாலைவனப்பகுதி, கடற்கரைப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளனர். குகைகள், பாறை மறைவிடங்கள் மற்றும் திறந்தவெளி இடங்களில் வாழ்ந்து வந்துள்ளனர். தமிழகத்திலும் மலைகள், கடற்கரை பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் இவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் மாங்குடி மற்றும் மதுரை மாவட்டத்தில் ச.பாப்பிநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் இக்கால மக்களின் சான்றுகள் மண்ணடுக்குகளில் கிடைத்துள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:42:06(இந்திய நேரம்)