தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அலெக்சாண்டர் கன்னிங்காம்

 • அலெக்சாண்டர் கன்னிங்காம்
  இந்தியத் தொல்லியல் ஆய்வின் தந்தை

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப் பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  அலெக்சாண்டர் கன்னிங்காம் இந்திய அரசுத் தொல்லியல் மேற்பரப்பாய்வுத் துறையின் முதல் பரப்பாய்வாளர் ஆவார். இவர் 1861 ஆம் ஆண்டு இப்பதவியில் பிரித்தானிய இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். இவர் ஓர் ஆங்கிலேய இராணுவ அதிகாரியுமாவார்.

  சிறப்பு :

  இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரித்தானியரின் இந்திய இராணுவத்தில் பணியாற்றினார். பின்னர் பழங்கால இந்திய எழுத்து முறையான அசோகர் பிராமியைப் படித்தறிந்த ஜேம்ஸ் பிரின்செப்பைச் சந்தித்தபிறகு தொல்லியல் ஆய்வில் நாட்டம் கொண்டார். இந்தியாவில் தொல்லியலில் முறையாக ஆய்வுகள் தொடங்குவதற்கு இவருடைய செயல்பாடுகள் ஒரு முக்கிய காரணமாகும். இவர் ஜேம்ஸ் பிரின்செப்புடன் சேர்ந்து இந்தியாவில் தொல்லியல் துறையைத் துவங்க 1840களில் முயற்சித்தார். ஆனால் அப்போது அம்முயற்சி வெற்றிபெறவில்லை. பின்னர் இவருடைய திட்டம் லார்ட் கானிங் என்பவரால் 1860 களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  ஆய்வுகள் :

  புத்த சமயத்தைச் சேர்ந்த புனிதப்பயணி யுவான் சுவாங்கின் குறிப்புகளை ஆராய்ந்தார். இவர் பல புத்தகங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் பாருத் என்ற இடத்தில் இருந்த புத்த ஸ்தூபத்தை (புத்த சமய வழிபாட்டுச் சின்னம்) கண்டுபிடித்து, அதைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்தார். இவர் பாரூத்தில் சேகரித்த சிற்பங்களை கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியத்தில் வைத்துப் பாதுகாக்க ஏற்பாடு செய்தார்.

  அலெக்சாண்டர் கன்னிங்காம்
  நன்றி : இந்திய அரசுத்தொல்லியல்
  துறை


  இவர் அசோகருடைய தூண்கள், மற்றும் பிற அசோகர் காலச் சான்றுகள், குப்தர் கால மற்றும் அதற்குப் பிந்தைய காலத் தொல்லியல் சான்றுகளைக் கண்டுபிடித்தார். பழங்கால நகரங்களான சங்கிஸா, சிராவஸ்தி, மற்றும் கோசாம்பி ஆகிய இடங்களை அடையாளப்படுத்தினார். இவர் சாரநாத், சாஞ்சி மற்றும் புத்த கயை ஆகிய இடங்களில் அகழாய்வு செய்தார். மேலும் திகவா, பில்சார், நாச்னா குத்தரா மற்றும் தேவகர் ஆகிய இடங்களில் உள்ள குப்தர் காலத் தொல்லியல் சின்னங்களையும் மற்றும் ஏரன், உதயகிரி ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகளையும் ஆராய்ந்தார்.

  இந்தியத் தொல்லியலுக்கு இவர் ஆற்றிய அரும் பணியை நினைவு கூறும் வண்ணம், இந்தியத் தொல்லியல் ஆய்வின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:40:27(இந்திய நேரம்)