தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பல்லவர் காசுகள்

 • பல்லவர் காசுகள்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  பல்லவர்கள் (பொ.ஆ. 600-900):

  சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் 3 நூற்றாண்டுகள் (பொ.ஆ.300-600) வரை என்ன நிகழ்ந்தது என்று அறியாவண்ணம் உள்ளது. அதனால் இக்காலக் கட்டத்தைப் பல வரலாற்றறிஞர்கள் “இருண்ட காலம்” என உரைக்கின்றனர். இருப்பினும் இக்காலக் கட்டத்தில் களப்பிரர் ஆட்சி நடத்தியதைப் பாண்டியர் மற்றும் பல்லவரது செப்பேடுகள் உணர்த்துகின்றன. இவர்களது காசுகள் என்று கருதத்தக்க காசுகளை திருஞானசம்பந்தமும் கிருஷ்ணமூர்த்தியும் குறிப்பிடுகின்றனர். ஆனால் இது ஆய்வாளர்களுக்கிடையே விவாதிக்கத்தக்கதாக உள்ளது. இதே காலத்தில் ஆந்திரப் பகுதியை ஆட்சி செய்த சாதாவாகனர்களது ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு, இக்ஷவாகுகள், ப்ருஹத்பலாயன கோத்ரர்கள், ஆனந்தர், விஷ்ணுகுண்டர்கள் போன்றோர் சாதவாகன அரசின் மேற்குப் பகுதிகளையும், கிழக்குப் பகுதிகளில் பெல்லாரி, மைசூர் போன்ற பகுதிகளுடன் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகள், செங்கல்பட்டு, வட, தென் ஆற்காடு மற்றும் திருச்சி வரை பல்லவர்கள் தமது ஆட்சியை விரிவுப்படுத்தி இருந்தனர். இவர்களது ஆட்சி பொ.ஆ. 4 ஆம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்டது. தமிழ் நாட்டில் இவர்களது ஆட்சி பொ.ஆ. 6 ஆம் நூற்றாண்டு முதல் சிம்மவிஷ்ணு காலந்தொட்டு தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆட்சி நடத்திய முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மன், இரண்டாம் நரசிம்மன் (இராஜசிம்மன்) முதலாம் பரமேஸ்வரவர்மன், தந்திவர்மன் ஆகியோரது காசுகளே நமக்குக் கிடைக்கின்றன.

  பல்லவர் காசுகள்:

  சின்னங்கள்:

  பல்லவர் காசுகளில் அவர்களது குலச்சின்னமான திமிளுடன் கூடிய காளை உருவமே பெரும்பாலும் இடம்பெறுகின்றது. ஒரு சில காசுகளில் சிங்க உருவம் உள்ளது. பின்புறம் செடியின் தளிர், பாத்திரம், பாய்மரக்கப்பல், ஸ்ரீவத்ஸம், யானை, விதையுடன் கூடிய தளிர், வட்டத்திற்குள் சங்கு, கம்பிகளுள்ள சக்கரத்தின் நடுவில் சிறுவட்டம் கொடிக்கம்பம் உள்ளன.

  காளை
  ஸ்வஸ்திக்

  முக்கோண வடிவில் கொடி பறப்பது போல் போன்ற சின்னங்கள் இடம்பெறுகின்றன. பாய்மரக்கப்பல் பொறிக்கப் பெற்ற காசுகள் இவர்களது கடல் வாணிகத்தைச் சுட்டுகிறது. பல்லவர்களது முந்தைய காசுகளில் எழுத்துப்பொறிப்புகள் ஏதுமின்றி ஒரு சில சின்னங்களே இடம் பெற்றிருக்கும் காலம் செல்லச் செல்ல எழுத்துப்பொறிப்புக்களுடன் காசுகளை வெளியிட்டுள்ளனர். ஒரு பக்கம் காளையும் மறுபக்கம் ஸ்ரீவத்ஸமும் உள்ள எழுத்துப்பொறிப்பற்ற காசு காஞ்சிபுரம் அகழாய்வில் கிடைக்கப் பெற்றுள்ளது இங்குச் சுட்டத்தக்கதாகும். பல்லவர்கள் காளை உருவம் பொறித்தக் காசுகளை வெளியிடும் முன்பாகச் சிங்க உருவம் பொறித்த காசுகளை வெளியிட்டுள்ளனர். ஒருபுறம் சிங்கமும் மறுபுறம் ஸ்வஸ்திகா மற்றும் சங்கு போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்ட காசுகளை முதலாம் மகேந்திரவர்மனுக்கு முற்பட்டது, சிம்மவர்மனுக்குப் பிற்பட்டது என ஆர்.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுகின்றார். புள்ளியிட்ட வட்டத்திற்குள் இடது புறமோ அல்லது வலது புறமோ நோக்கிய சிங்கம், அதன் முன் வில், அதன் பின் மீன், அதன் கீழ் புலி உருவம் ஒரு பக்கமும் மறுபக்கம் கம்பிகளாலான சக்கரத்தின் நடுவில் சிறுவட்டம் உள்ள காசுகளை சிம்மவர்மன் மூவேந்தர்களையும் வென்றதன் நினைவாக வெளியிட்டிருக்கலாம் என்றும் இதன் காலம் பொ.ஆ. 570-580 எனவும் கிருஷ்ணமூர்த்தி கருதுகின்றார்.

  மகேந்திரவர்மனுக்கு முன்னர் வெளியிடப் பெற்ற காசுகள் அனைத்தும் புள்ளியிட்ட எல்லைக்குள் (dotted boundary) வடிக்கப் பெற்றுள்ளன. ஸ்ரீவஸ்தா, பிறை, சங்கு, பாம்புடன் காளை உருவமுள்ள காசுகள் இரண்டாம் சிம்மவர்மன் காலத்தில் தொடங்கப் பெற்று பின்னர் வந்த மன்னர்களாலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இச்சின்னங்கள் இரண்டாம் சிம்மவர்மனின் விளவெட்டி செப்பேட்டிலும் காணப்படுகிறது. 1970இல் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோவில் அருகே 11 காசு செய்யும் அச்சுகள் கிடைத்துள்ளன. இவை இரண்டாம் சிம்மவர்மனின் காசுகளில் உள்ள உருவங்கள் உள்ளதால் அவரது காசுகளைப் போலப் போலிக் காசுகளை உருவாக்கப் பயன்படுத்தப் பெற்றதாகக் கிருஷ்ணமூர்த்தி கூறுகின்றார்.

  எழுத்துப்பொறிப்பு காசுகள்:

  முதலாம் மகேந்திரவர்மன் காலந்தொட்டே எழுத்துப்பொறிப்பு காசுகள் கிடைக்கின்றன. அதைத் தொடர்ந்து முதலாம் நரசிம்மவர்மன், முதலாம் பரமேஸ்வரன், இரண்டாம் நரசிம்மன், தந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன் போன்ற அரசர்களும் தங்களது விருதுப் பெயர்களை பல்லவ கிரந்த எழுத்துக்களில் பொறித்து காசுகளை வெளியிட்டுள்ளனர். எழுத்துப்பொறிப்பு காசுகளின் பின்புறம் அலங்கரிக்கப் பெற்ற வட்டத்திற்குள் சக்கரம், ஸ்வஸ்திகா, சங்கு, இருபுறமும் விளக்கு, பூசாடி, அலங்கரிக்கப் பெற்ற வட்டத்திற்குள் பூசாடி, குடை, இரு குடை, புலி, மீன் போன்ற சின்னங்களும் இடம்பெறுகின்றன. பல்லவர் காசுகளில் இருப்பதைப் போன்று காளை உருவம் விஷ்ணுகுண்டர்களது காசுகளிலும் சற்றே வேறுபட்டு இடம்பெறுகின்றது.

  கிடைத்துள்ள இடங்கள்:

  பல்லவர்களது காசுகள் அவர்களது ஆட்சித் தலைமையிடமான காஞ்சிபுரத்தில் கிடைக்கின்றன. இது தவிர ஆரணி, ஆற்காடு, கடலூர், கரூர், கும்பகோணம், செஞ்சி, தஞ்சாவூர், திருச்சி, தர்மபுரி, தரங்கம்பாடி, திருவையாறு, திருவண்ணாமலை, பாபநாசம், மதுரை, மாமல்லபுரம், விழுப்புரம், வேலூர் போன்ற பல இடங்களிலும் பல்லவர் காசுகள் கிடைத்திருப்பினும் கரூர், திருக்கோயிலூர் ஆகிய ஊர்களியேயே அதிக அளவில் கிடைக்கின்றன. இதுவரை பல்லவர் காசுகள் குவியலாகக் கிடைக்கவில்லை. இவை பல ஊர்களிலும் பரவலாக்க் கிடைப்பதால் நாணயசேகரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலம் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லப் பெற்றிருக்கலாம்.

  எடையும் உலோகமும்:

  பல்லவர்கள் காலக் கல்வெட்டுக்களில் கொடை கொடுப்பதில் ‘பொன்’ (கழஞ்சுகள்) அதிகம் இடம்பெறுகின்றது. ஆனால் பல்லவர் காசுகளில் இதுவரை பொன்னாலான காசுகள் கிடைக்கவில்லை. ஒன்றிரண்டு வெள்ளிக்காசுகள் தவிர அனைத்தும் ஈயம், செம்பு, வெண்கலம், அதிக அளவு தகரம் கலந்த வெண்கலம் (highly tin bronze) போன்ற உலோகத்தால் ஆனதாகவே உள்ளன. ஈயத்தால் ஆனவை 1.780 – 9.8 கிராம்கள் வரையிலான எடையளவுகளையும், செப்பிலானவை 0.450 – 5.200 கிராம்கள் வரையிலான எடையளவுகளையும், வெண்கலத்தாலானவை 0.4 -5.750 கிராம்கள் வரையிலான எடையளவுகளையும், அதிக அளவு தகரம் கலந்த வெண்கலக் காசுகள் 1.150-7.200 கிராம்கள் வரையிலான எடையளவுகளையும் பெற்றுள்ளன. இவற்றின் குறுக்களவு குறைந்தது 1.4 செ.மீ முதல் 2.8 செ.மீ வரை உள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:44:15(இந்திய நேரம்)