தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கொல்லிரும்புறைக் காசுகள் ்

 • சாதவாகனர் இரு மொழிக் காசுகள்

  சாதவாகனர் (பொ.ஆ.மு. 2ஆம் நூ. - பொ.ஆ. 1 ஆம் நூ.)

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  மௌரியர்களது ஆட்சியைத் தொடர்ந்து தக்காணம் மற்றும் மத்திய இந்தியாவில் தனது ஆட்சியை ஏற்படுத்தியோர் சாதவாகனர்கள். இவர்கள் ஆந்திரர் என புராணங்களில் அழைக்கப்படுகின்றனர். ஆனால் இவர்களது முந்தையக் கல்வெட்டுகள் ஆந்திராவில் காணப்பெறவில்லை. இவர்கள் மத்திய இந்தியாவில் கன்வர்களை தோற்கடித்து மஹாராஷ்டிராவிலும் ஆட்சியை நிலைநிறுத்தியுள்ளனர். தக்காணத்தில் இவர்களது ஆட்சி கோதாவரி ஆற்றின் கீழ்ப்பகுதி வரையிருந்தது. கர்நாடகா, ஆந்திரா பகுதியும் உட்பட்டிருந்தது. இவர்களது தமிழ், பிராகிருத எழுத்துக்களில் இரு மொழிக் காசுகளை வெளியிட்டுள்ளனர். இவை தமிழகத்தில் கிடைத்துள்ளன.

  வஸிட்டி மகனது திரு
  புதுமாவிகு
  எனும் தமிழ் எழுத்துப்
  பொறிப்பு மற்றும்
  உஜ்ஜைன் குறியீடு
  மற்றும் சைத்யம்
  வஸிட்டி புதச
  ஸ்ரீசதகனிஸ எனும்
  எழுத்துப் பொறிப்பு

  சாதவாகனர் இருமொழிக் காசுகள்

  சாதவாகனரது காசுகள் தமிழ் நாட்டில் திருக்கோயிலூர் , கரூர், போன்ற ஊர்களில் மேற்பரப்பாய்வில் கிடைக்கின்றன. காஞ்சிபுரம், மாளிகைமேடு (கடலூர் மாவட்டம்) பகுதிகளில் அகழாய்வில் கிடைக்கின்றன.

  சின்னங்கள்

  பொதுவாக இவர்களது காசுகளில் ஒரு புறத்தில் குதிரை, யானை, சிங்கம் அல்லது சைத்யம் போன்ற சின்னங்களுடன் மறு புறம் பெருக்கல் குறியீட்டின் நான்கு முனைகளிலும் சிறு வட்டமிட்டிருக்கும் சின்னமே காணப்பெறும். இது உஜ்ஜயினி சின்னம் (ஒளிப்படத்தில் குன்றுச்சின்னத்திற்கு முன்பாக உள்ள சின்னம்) என்று அறிஞர்களால் அழைக்கப்பெறுகின்றது.

  இவை மட்டுமின்றி வலப்பக்கமோ அல்லது இடப்பக்கமோ நோக்கி நிற்கும் யானை உருவத்தினைச் சுற்றிலும் அரசனின் பெயர் பொறிப்புகள் இடம்பெற்றிருக்கும். பின்புறம் வழக்கம் போல் உஜ்ஜயின் சின்னம் இடம்பெறும். இவை மட்டுமின்றி ஒரு புறத்தில் அரசரின் உருவம் பொறிக்கப்பெற்று அவற்றைச் சுற்றிலும் அவரது பெயர் பிராகிருத மொழியில் வட இந்திய பிராமி எழுத்திலும் மறு புறம் அவ்வரசர்களின் பெயர்கள் தமிழ் மொழியிலும் பொறிக்கப்பெற்ற காசுகளையும் 1 . வஸிட்டி புத்ர புலுமாவி, 2. வாஸிட்டி புத்ர சாதகர்னி, 3. வாஸிட்டி புத்ர சிவசிரி புலுமாவி, 4. வாஸிட்டி புத்ர சிவஸ்கந்த சாதகர்னி, 5. கௌதமி புத்ர யஜ்ஞசிரி சாதகர்னி, 6. வாஸிட்டி புத்ர விஜய சாதகர்னி போன்ற அரசர்கள் வெளியிட்டுள்ளனர். இவ்வகைக் காசுகள் தக்காணம் மராட்டியம் ஆகிய பகுதிகளில் கிடைக்கின்றன. ஆனால் தமிழ் நாட்டில் ஒன்று கூட கிடைக்கவில்லை.

  இவ்விதம் ஆந்திர மன்னர்களான சாதவாகனர்கள் தெலுங்கு மொழியைப் பயன்படுத்தாது தமிழ் மொழியில் காசுகளை வெளியிடுவதற்கான காரணத்தை ஆராய்வது அவசியமாகும். இது குறித்து ஆய்வு செய்த ஐராவதம் மகாதேவன் அவர்கள் அரசியல் மற்றும் நிர்வாகப் பயன்பாட்டிற்குத் தமிழ், பிராகிருத மொழிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், மேலும் தமிழ் நாட்டுடனான வணிகத்தொடர்பும் இதற்குக் காரணமாகலாம் எனவும் ஊகிக்கிறார். ஆயினும் தமிழ் நாட்டில் இவ்வகை காசுகள் (இரு மொழி காசுகள்) கிடைக்கப் பெறாமையால் இவை மேலும் ஆராயத்தக்கவை.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:55:22(இந்திய நேரம்)