தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • திருக்கோகர்ணம்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    புதுக்கோட்டையின் மையமாகத் திகழ்வது திருக்கோகர்ணம் என்னும் ஊர். இது பழங்காலக் கோவிலைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

    அமைவிடம்

    இது புதுக்கோட்டையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.

    சிறப்பு

    திருக்கோகர்ணத்திலுள்ள கற்குடைவரைக் கோவில் கருவறையையும், முன் மண்டபத்தையும் கொண்டுள்ளது. லிங்க வடிவிலான இறைவன், கோகர்ணேசர் என்று பெயர் பெற்றுள்ளார். முன் மண்டபத்தின் தென் சுவரில் பிள்ளையார் சிற்பமும் மற்றும் வட சுவரில் கங்காதரர் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளன. பல்லவர்களால் எடுப்பிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட இக்குடைவரைக் கோயில் தற்போது பாண்டியர்களால் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் இக்கோவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இச்சன்னதிக்கு எதிரிலுள்ள மண்டபமும் நீண்ட பிரகாரமும் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.

    பொ.ஆ. 17 – 18 ஆம் நூற்றாண்டு காலத்தில் முன் மண்டபத்தின் மேற்கூரையில் இராமாயணக் காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.

    சற்றுத் தொலைவில் அமைந்த குன்றின் மேல் உள்ள மற்றொரு கோவிலில் முருகன் சரஸ்வதி, பிரம்மா, லட்சுமி, ஜுரஹரேஸ்வரர் (மூன்று தலைகள், மூன்று கைகள் மற்றும் மூன்று கால்கள் கொண்ட ஜுரத்தைப் போக்கும் ஈஸ்வரப்) போன்றோரின் சன்னதிகள் உள்ளன.

    பாண்டியர், சோழர் மற்றும் விஜயநகரக் காலக் கல்வெட்டுகள் உள்ளன. பொ.ஆ. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னன் மாறன் சடையனின் கல்வெட்டு காலத்தால் முந்தையதாகும். விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு அளித்த நிவந்தங்கள் பற்றி விஜயநகரக் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது.

    இக்கோவிலின் அருகில் இராஜா இராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது.

    மேற்கோள் நூல்

    ஜெ.இராசா முகம்மது, 2004. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு. அரசு அருங்காட்சியகம், சென்னை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:13:41(இந்திய நேரம்)