தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • சாம்பல் மேடுகள்

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  சாம்பல் மேடுகள் என்பவை ஆடு-மாடு வளர்த்து வாழ்ந்து வந்த புதியகற்கால மற்றும் இரும்புக்கால மக்களின் வாழ்விடங்களில் காணப்படும் தொல்லியல் மேடுகளாகும். குறிப்பாக மாடு வளர்த்தவர்கள் இங்கு இருந்த இடத்தில் பெரிய சாம்பல் மேடுகள் உருவாயின.

  காணப்படும் இடங்கள்

  சாம்பல் மேடுகள் கர்னாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல் இடங்களில் கிடைக்கின்றன. கர்னாடகா, ஆந்திரா மாநிலங்களில் காணப்படுபவைகளில் பெரும்பாலானவை புதியகற்காலத்தைச் சேர்ந்தவை. இவை உத்னூர், குடக்கல், குப்கல், புதிஹால், குடத்தினி ஆகிய (கர்னாடகா மாநிலம்) இடங்களில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் காணப்படுபவைகளில் பல, இரும்புக்காலம் மற்றும் வரலாற்றுத் துவக்ககாலத்தைச் சேர்ந்தவை; சில புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை. தமிழ்நாட்டில் தேனிக்கு அருகில் உள்ள தத்தானோடைமேடு, மதுரை மாவட்டத்தில் சின்னக்கட்டளை மற்றும் பிற இடங்களில் இவை காணப்படுகின்றன.

  சாம்பல் மேடு

  அமைப்பு

  புதிய கற்காலத்தைய சாம்பல் மேடுகள் இரண்டு அடி முதல் பத்து அடி அல்லது அதற்கு மேல் உள்ள உயரத்திலும் காணப்படுகின்றன. இவை அதிக பரப்பளவில் அமைந்துள்ளன. இவற்றில் உருக்கு போன்ற அதிக வெப்பநிலைக்குட்பட்ட சாம்பல் காணப்படுகின்றது. மேலும் இங்கு மென்மையான சாம்பல், சிதைந்த பழங்கால மாட்டுச் சாணம், ஆகியவையும் காணப்படுகின்றன. இம் மேடுகளைச் சுற்றிலும் மக்கள் வாழ்ந்த இடங்கள் காணப்படுகின்றன. இங்கு பானை ஓடுகள், வீடுகளின் சான்றுகள், மற்றும் பிற தொல்பொருள் கிடைக்கின்றன.

  காலம்

  புதியகற்காலச் சாம்பல் மேடுகள் பொ.ஆ.மு. 3000 லிருந்து பொ.ஆ.மு. 1000 வரையான காலத்தைச் சேர்ந்தவை. இரும்புக்கால மேடுகள் பொ.ஆ.மு. 1000 லிருந்து பொ.ஆ.மு. 300 வரையான காலத்தைச் சேர்ந்தவை. இதற்குப் பிற்பட்ட காலத்திலும் சாம்பல் மேடுகள் உருவாயின.

  கிடைக்கும் தொல்பொருட்கள்

  புதிய கற்காலச் சாம்பல் மேடுகளின் அருகில் சாம்பல் நிற, பழுப்பு நிறப் பானை ஓடுகள், கற்கருவிகள், சுடுமண் பொம்மைகள் போன்ற தொல்பொருட்கள் கிடைக்கின்றன. இரும்புக்காலச் சாம்பல் மேடுகளில் கருப்பு-சிவப்பு, இரும்புப் பொருட்கள் மற்றும் பிற தொல்பொருட்கள் கிடைக்கின்றன.

  தோற்றம்

  மாடு வளர்த்தவர்கள் அவைகளின் சாணத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்தாமல் ஓர் இடத்தில் சேகரித்து வைத்து எரித்துள்ளனர். இது அவர்களுக்கு இரவில் ஒளி தரவும், பிற விலங்குகளின் தாக்குதலிலிருந்து அவர்களையும், விலங்கினங்களையும் பாதுகாக்க உதவியிருக்கலாம். இந்த இடங்களின் அருகில் மாட்டுத் தொழுவங்கள் இருந்தன என உத்தனூர் என்ற ஊரை அகழாய்வு செய்த அல்சின் கருதுகிறார்.

  தென்னிந்தியாவில் சாம்பல் மேடுகளை இராபர்ட் புரூஸ் பூட், அல்சின், பத்தையா ஆகியோர் அகழாய்வு செய்துள்ளனர். மேலும், மாட்டுப்பொங்கல் போன்ற பண்கைக் காலத்திலும் இவர்கள் சாணத்தை எரித்து விழாவாகக் கொண்டாடி இருக்கலாம் என்றும் கருத்தப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:03:47(இந்திய நேரம்)