தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • மோட்டுப்பள்ளி்

    முனைவர் பா.ஜெயக்குமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை



    அறிமுகம்

    இடைக்காலச் சோழர் ஆட்சியில் (முதலாம் இராஜராஜன் முதல் முதலாம் குலோத்துங்கன் ஆட்சி வரை) பிற நாடுகளைச் சேர்ந்த கடற்கரைப் பட்டினங்களான துறைமுகங்கள் பல தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவைகளுள் ஒன்று மோட்டுப்பள்ளி ஆகும்.

    அமைவிடம்

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பபத்லா வட்டத்தில் கிருட்டிணா நதியின் கழிமுகப் பகுதி மோட்டுப்பள்ளியின் அமைவிடமாகும். இப்பகுதி தற்போதைய மசூலிப்பட்டினம் பகுதியாகலாம்.

    தொன்மை

    கந்தலேறு ஆற்றின் தென்கரையில் தற்போதைய துறைமுக அலுவலகத்தின் எதிரில் மித்தரேவு எனும் மணற்பகுதியில் அரிட்டெய்ன், ரூலெட்டட் போன்ற ரோமானிய நாட்டு மண்கலச் சில்லுகளும், சீனக்களிமண் பானை ஓடுகளும் கிடைப்பதைக் கொண்டு இப்பகுதி பண்டைக் காலம் தொட்டு மேலை மற்றும் கீழை நாடுகளுடன் தொடர்ச்சியான கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததை அறிய முடிகிறது.

    சிறப்பு

    மோட்டுப்பள்ளி வேளநகரம் என அழைக்கப்பட்டது. வேளநகரம் என்பது தமிழில் வேளாபுரம் என்பதற்குச் சமமாகும். தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படும் முப்பத்தியிரண்டு வேளாபுரத்தில் மோட்டுப்பள்ளியும் ஒன்றாகும். இவ்வூருக்குத் தமிழில் தேசியுகந்தபட்டினம் என்ற பெயரும் இருந்தது. தேசியுகந்தபட்டினம் என்பதற்கு தேசி (= வணிகர்கள்) + உகந்த (= சாதகமான / பொருத்தமான) + பட்டினம் (= துறைமுகம்) எனப் பொருள் கொண்டோமானால் வணிகர்களுக்குச் (குறிப்பாகத் தமிழ் வணிகர்களுக்கு) சிறப்பையும், வளத்தையும கொடுக்கக்கூடிய துறைமுகம் இது எனக் கருதலாம். இதனைப் பார்க்கும் போது இப்பட்டினம் தமிழ் வணிகர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது என்பதையும் அறியலாம்.

    கல்வெட்டுச் சிறப்பு

    இப்பகுதி காகதியர் ஆட்சியின் கீழ் இருந்தபோது இவ்வம்சத்தின் சிறப்புமிகு மன்னனாகத் திகழ்ந்த கணபதி (கி.பி 1198 – 1261) சகம் 1166 ஆம் ஆண்டு (கி.பி 1244) வெளியிட்ட தெலுங்கு மொழிக் கல்வெட்டும், இம்மரபிற்குப் பின்னர் ஆட்சி செய்த ரெட்டி மரபின் சிறந்த மன்னனான அன்னபோத்து ரெட்டியின் கி.பி 1358இல் வெளியிடப்பட்ட தமிழ் மொழிக் கல்வெட்டும் இங்குக் காணப்படுகின்றன. இவ்விரண்டு கல்வெட்டுகளும் வெவ்வேறு தென்னிந்திய மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் ஒரே செய்தியைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், அக்காலத்தில் வணிகர்கள் எவ்வாறு சிறப்பாக நடத்தப்பட்டனர் என்பதற்கும் இக்கல்வெட்டுகள் சான்றுகளாக விளங்குகின்றன. வியாபாரிகளுக்கு “இட்ட மரியாதி சாதனக் கல்வெட்டு” என ஆவணம் குறிப்பதிலிருந்து அக்காலத்தில் மன்னன் வணிகப் பெருமக்களுக்கு அளித்த மதிப்பு நன்கு புலப்படுகிறது. “வணிகர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது என்பதோடு அது அரசனின் உயிருக்கும் மேலானது” எனக் கல்வெட்டு சுட்டுவதிலிருந்து வணிகர்களுக்கு அக்காலத்தில் வழங்கப்பட்ட பாதுகாப்பின் தரத்தை உணரமுடிகிறது. கல்வெட்டுகளில் வணிகர்களுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமானது வெளிநாட்டு வணிகர்கள் மீது விதிக்கப்பட்ட ‘அபுத்திரிக்தெண்ட’ (இத்துறைமுகத்தில் குடியேறும் பரதேசிகள் வாரிசு இன்றி இறக்க நேரிட்டால் அவர்களது சொத்தில் ஒரு பகுதி அல்லது முழுவதையும் அரசனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதாகும்) முழுமையாகக் கைவிடப்பட்டதாகும். இறக்குமதி செய்யும் வணிகர்கள் அவர்கள் விருப்பப்படி சரக்குகளை விற்றுக்கொள்ளவும் அங்கிருந்து திரும்பிச் செல்லும்போது அவர்கள் விரும்பும் சரக்குகளைக் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்பட்டது. இது, தற்காலத்தில் சில நாடுகளில் காணப்படும் கொள்கை அளவிலான கட்டுப்பாடற்ற அதாவது தடையில்லா வாணிப (Free Trade) மையமாக இத்துறைமுகம் இருந்ததைக் காட்டுகிறது. தடையில்லா வாணிபச் சலுகை தமிழர்களுக்கு மட்டும் இருந்திருக்க வேண்டும் எனவும் ஊகிக்க முடியும்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:54:52(இந்திய நேரம்)