தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • திருக்கட்டளை

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  சோழர் காலக் கோவிலால் பெருமை பெற்ற இடம் திருக்கட்டளை ஆகும். இங்குள்ள சோழர்காலக் கோவில் புகழ்பெற்றதாகும்.

  அமைவிடம்

  இது புதுக்கோட்டைக்கு 5 கி.மீ கிழக்கில் அமைந்துள்ளது.

  சிறப்பு

  இங்கு அமைந்துள்ள ஆதித்த சோழ மன்னனால் கட்டப்பட்ட சுந்தரேஸ்வரர் ஆலயம் பிற்காலப் பாண்டியர் மற்றும் விஜயநகர அரசர்களால் விரிவாக்கப்பட்டது. இக்கோவில் ஊரின் கிழக்கே அமைந்துள்ளது. பரிவார தேவதைகளுக்காக தனிச்சன்னதிகள் உள்ளன. இந்தக் கோவில் விமானம் இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. கோயிலின் தெற்கே அமைந்த மாடத்தில் தட்சிணாமூர்த்தி சிற்பத்திற்குப் பதிலாக வில் அம்பு ஏந்திய திரிபுராந்தகரின் சிற்பம் இடம்பெற்றுள்ளது ஒரு சிறப்பாகும்.

  சோழர், பாண்டியர் மற்றும் விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. சோழர் காலத்தில் இந்த ஊர் சிறந்த படை நகரமாகத் (இராணுவ மையமாகத்) திகழ்ந்தது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இங்குள்ள கல்வெட்டுகள் பெருவழிகள் பற்றிக் குறிப்பிடுகின்றன.

  தொல்பழங்காலம்

  புதுக்கோட்டையிலிருந்து திருக்கட்டளைக்குச் செல்லும் வழியிலுள்ள கலசக்காடு பகுதியில் இடைப்பழங்கற் காலத்தைச் சேர்ந்த சுரண்டிகள், வெட்டுக் கருவிகள், செதில் கருவிகள் கிடைக்கின்றன. இவை குவார்ட்ஸ் மற்றும் ‘செர்ட்டி குவார்ட்சைட்டினால்’ செய்யப்பட்டவை. இங்கு இடைக்கற்காலது நுண்கற் கருவிகளும் கிடைக்கின்றன.

  பெருங்கற்காலம்

  மேலும், பெருங்கற் காலத்தைச் சேர்ந்த ஈமச் சின்னங்களான கற்பதுக்கைகள் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து பெறப்பட்ட இரும்பு ஆயுதங்கள், மண் பானைகள் மற்றும் மணிகள் தற்போது புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ளன.

  மேற்கோள் நூல்

  ஜெ.இராசா முகம்மது, 2004, புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, அரசு அருங்காட்சியகம், எழும்பூர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:14:11(இந்திய நேரம்)