தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • நார்த்தாமலை

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    பிற்கால பல்லவர் மற்றும் முற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த கோவில்களால் பெருமை பெற்றது நார்த்தா மலை. நார்த்தா மலை என்ற பெயர் நகரத்தார் மலை என்ற பெயரின் திரிபு எனக் கருதப்படுகின்றது.

    அமைவிடம்

    இது புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் 19 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அழகிய பாறைகள், சுனைகள் மற்றும் ஏரியைக் கொண்ட ஒரு மலை உள்ளது.

    சிறப்பு

    இங்கே பழியிலிஈச்சுவரம், சமணர் குடகு என்னும் குகைக் கோவில்களும், விஜயாலயசோழீச்சுரம், கடம்பர் கோயில் மற்றும் நகரீச்சுரம் போன்ற கட்டுமானக் கோவில்களும் உள்ளன.

    வேசரக் கலைப் பாணியான வட்ட வடிவமான சிகரத்தையுடைய விமானத்தைக் கொண்டதாக விஜயாலயச் சோழீச்சுரம் அமைக்கப்பட்டுள்ளது. முழு வேசரா கலைப் பாணியில் தமிழகத்தில் அமைந்த கோவில் இதுவாகக் கருதப்படுகிறது. சாத்தம் பூதி என்னும் இளங்கோவதி முத்தரையன் என்ற மன்னனால் கட்டப்பட்ட இக்கோயில் அழிந்துபட, மல்லன் விதுமன் என்னும் தென்னவன் தமிழ் திரையன் என்ற முத்தரையன் மன்னனால் மீண்டும் கட்டப்பட்டது என்று இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

    பழியிலிஈச்சுவரம் என்றழைக்கப்படும் குகைக்கோவில் விஜயாலயசோழீச்சுரம் கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. இது விடேல் விடுகு முத்தரையனின் மகனான சாத்தம் பழியிலி என்பவனால் கட்டப்பட்டதாகும். சாத்தம் பழியிலியின் மகன் இக்குகைக் கோயிலுக்கு முன்பு முகமண்டபம், நந்தி மண்டபம் மற்றும் பலிபீடத்தை ஏற்படுத்தினான் என்று இக்குகைக் கோவிலிலுள்ள பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மன் காலத்தைச் சேர்ந்த (9 ஆம் நூற்றாண்டு) கல்வெட்டு கூறுகிறது.

    பழியிலி ஈச்சுரத்திற்கு வடக்கிலுள்ள சமணர் குடகு என்றழைக்கப்படும் விஷ்ணுக் கோவில் குடைவரையாக எடுக்கப்பட்டுள்ளது. முதலில் சமணர்களின் கோவிலாக இருந்த இது பின்னர் விஷ்ணுக் கோவிலாக மாறியிருக்க வேண்டும் என்று மாறவர்மன் சுந்தர பாண்டியனின் (13 ஆம் நூற்றாண்டு) கல்வெட்டு கூறுகிறது. இங்கு விஷ்ணுவின் உருவங்கள் பன்னிரண்டு, ஒரே மாதிரியான சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில் இக்கோயில் பதினெண்பூமி விண்ணகரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடம்பர்மலையடியில் திருக்கடம்பர் உடைய நாயனார் என்பவரின் கோவில் காணப்படுகிறது. இங்கு முதலாம் இராஜராஜன், இரண்டாம் இராஜேந்திரன், மூன்றாம் இராசேந்திரன் போன்ற சோழ மன்னர்களும், மாறவர்மன் சுந்தர பாண்டியன் போன்ற பாண்டியர்களும் இக்கோவிலில் எடுப்பித்த புதிய கட்டுமானங்களைப் பல கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

    நகரீச்சுரம் என்றழைக்கப்படும் சிவன் கோவில் 13 ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் எழுப்பப்பட்டதாகும்.

    மேற்கோள் நூல்

    ஜெ.இராஜாமுகமது, 2004. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு சென்னை, அரசு அருங்காட்சியகம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:11:23(இந்திய நேரம்)