தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெரியபட்டினம்

  • பெரியபட்டினம்

    முனைவர் பா.ஜெயக்குமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    அறிமுகம்:

    இடைக்காலத் (கி.பி. 7-16 ஆம் நூற்றாண்டு) தமிழகத்தில் பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பகுதியில் சிறப்புப் பெற்று விளங்கிய துறைமுகங்களில் ஒன்று பெரிய பட்டினம். இங்கு தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை 1987 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் தலைமையில் அகழாய்வினை மேற்கொண்டது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தோக்கியோ பல்கலைக்கழகப் பேராசிரியரும் தென்னிந்திய வரலாற்றாசிரியருமான நொபொரு கராசிமா அவர்கள் தலைமையில், சோபியா பல்கலைக்கழகப் பேராசிரியர் யோகி அவயோகி, ககோசிமா பல்கலைக்கழகப் பேராசிரியர் இசிநித்தா, இதிமித்சு அருங்காட்சியகப் பொறுப்பாளர் கனசவயோ போன்ற அறிஞர்கள் பெரியபட்டினம் அகழாய்வினைப் பார்வையிட்டனர்.

    அமைவிடம்:

    மாவட்டத் தலைநகரமான இராமநாதபுரத்திலிருந்து தென்கிழக்கு 20கி.மீ தொலைவில் மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதியில் பெரியபட்டினம் அமைந்துள்ளது.

    ஊர்ச்சிறப்பு:

    கி.பி 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இவ்வூரை பராக்கிரமபட்டினம் எனக் குறிப்பிடுகிறது. இப்பெயர் பாண்டிய மன்னன் பராக்கிரபாண்டியனுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். பாண்டிய நாட்டில் ஏற்பட்ட ஆட்சியுரிமைப் போரில் பராக்கிரம பாண்டியனுக்கு ஆதரவாக ஈழப்படைகள் விஜய தண்டநாயகன் தலைமையில் இலங்கையின் மாதோட்டத்திலிருந்து புறப்பட்டு இராமேசுவரத்தின் வடகிழக்கே இரண்டு கல் தொலைவில் கரை இறங்கி பாம்பன் போன்ற இடங்களைக் கைப்பற்றி எதிர்கரையில் மூன்று புறங்களில் கோட்டைச் சுவர்களுடன் காணப்பட்ட பராக்கிரமபட்டினக் கோட்டையை கி.பி. 1170இல் கைப்பற்றியதாக மகாவம்சம் (பாலிமொழியில் எழுதப்பட்ட இலங்கை வரலாற்றுச் சான்று நூல்) குறிப்பிடுவது. பெரியபட்டினத்தையே எனக் கருதமுடிகிறது. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் இவ்வூர் பவித்திரமாணிக்கப்பட்டினம் என அழைக்கப்பட்டுள்ளது. பெரியபட்டினத்திற்கு அருகில் உள்ள திருப்புல்லாணி கோயிலின் கி.பி 1225ஆம் ஆண்டுக் கல்வெட்டு (முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 8ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது.
    பவித்திரமாணிக்கப்பட்டிணம் இக்கோயிலின் கிழக்குத் திசையில் அமைந்திருந்ததாகவும் அப்பொழுது கீழ்செம்பி நாடு எனும் வருவாய்ப் பிரிவில் (revenue division) இருந்ததாகவும் குறிப்பிடுவது சுட்டத்தக்கதாகும். பவித்திரமாணிக்கம் என்பதற்கு மாசற்ற, பெரிய, தூய்மையான அல்லது சிறந்த மாணிக்கம் எனப் பொருள் கொள்ளலாம். முத்து குளித்தலில் இப்பகுதி அக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்ததாலும் சிறந்த பட்டினமாக (துறைமுகமாக) இருந்ததாலும் பவித்திரமாணிக்கப்பட்டினம் எனப் பெயர் பெற்று பின்னர் பராக்கிரமபட்டினமாக மாற்றம் பெற்று தற்போது பெரியபட்டினமாக வழங்கப்படுகிறது. மார்க்கோ போலோ, இபின் பதுதா மற்றும் வாசப் போன்ற கடல்வழிப் பயணிகள் இவ்வூரைப் பட்டன் அல்லது படன் (=பட்டினம்) எனக் குறிப்பிடுகின்றனர். இப்பயணிகளின் குறிப்புகள் வாயிலாக “இவ்வூர் மதுரை அரசின் துறைமுகம் என்பதும், மதுரை சீமைக்குள் நுழைபவர்களோ அல்லது அங்கிருந்து வெளியில் செல்வபவர்களோ இத்துறைமுகம் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதும், மார்க்கோ போலோவும் இங்குதான் கரை இறங்கியிருக்க வேண்டும் என்பதும்” தெரிய வருவதாக வரலாற்றாசிரியர் எஸ்.கிருஷ்ண்சுவாமி ஐயங்கார் அவர்தம் நூலில் (S.Krishnaswami Aiyankar, South India and her Muhammadan Invaders, 1921) குறிப்பிடுகிறார். மேற்சுட்டிய சுந்தரபாண்டியனின் கல்வெட்டு துறைமுக நகரான பவித்திரமாணிக்கப்பட்டினத்திலிருந்த சோனக (சோனகர் என்பது அக்காலத்தில் அரேபிய வணிகர்களைக் குறிக்கும் சொல்லாகும்) சாமந்த பள்ளிக்கு (ஜீமாத்துப் பள்ளி = ஜமாத்தின் திரிபாகும்) கொடை வழங்கியதைக் குறிக்கிறது. எனவே இப்பள்ளி இசுலாம் மதம் சார்ந்த பள்ளி (புத்தப் பள்ளி அல்ல) என்பது தெளிவாகிறது. இது அக்காலத்தில் அரேபிய வணிகர்களின் செல்வாக்கு பெரியபட்டினத்தில் இருந்ததைக் காட்டுகிறது. பெரியபட்டினத்தில் ஆண்டு கணிக்கப்படாத எபிரேய மொழிக் கல்வெட்டு காணப்படும். இவ்வூருக்கும் யூதர்களுக்கும் இடையே இருந்த உறவினைக் காட்டுவதோடு இடைக்காலத்தில் தமிழகத்திற்கும் பாலஸ்தீனம், இஸ்ரேல் போன்ற பகுதிகளுக்குமிடையே தொடர்பிருந்ததையும் காட்டுகிறது. தௌ-இ-சிலு (Dao-yi-Zhilue) கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனமொழிக் குறிப்பில் காணப்படும் டாபடன் (Da-Patan) என்ற ஒரு தென்னிந்திய துறைமுகப் பட்டினத்தைப் பேராசிரியர் நொபொரு கராசிமா அவர்கள் அடையாளம் கண்டு சீன மொழியில் ‘டா’ என்றால் ‘பெரிய, ‘படன்’ என்றால் ‘பட்டினம்’ (துறைமுகம்) என்று பொருள் கொண்டு, டாபடன் என்பது தமிழகத்தின் இடைக்காலத்தில் சிறப்புடன் விளங்கிய பெரியபட்டினம் என்பதை வெளிப்படுத்தினார். இதன் மூலம் கி.பி 14 ஆம் நூற்றாண்டிலேயே பெரியபட்டினம் என்ற பெயர் இருந்ததைக் காண முடிகிறது. பாண்டிய நாடு முகமதியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது இபின் பதுதா இத்துறைமுகம் வந்து தங்கியிருந்து பின்பு இங்கிருந்து கப்பல் மூலம் ஏமன் சென்றதாகவும், கி.பி 1293இல் மார்க்கோ போலோ சீனாவிலிருந்து இலங்கை வழியாக இந்தியா வந்தபோது பெரியபட்டினத்திற்கு வந்து சென்ற செய்தியும் இடைக்காலத்தில் இத்துறைமுகம் உலகளவில் ஓர் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தமைக்கு வலுவூட்டுவனவாகும். தலைநகரான மதுரைக்கு அருகில் இத்துறைமுகம் இருந்ததும், இங்கிருந்து வைகை ஆற்றின் வாயிலாக எளிதாக மதுரையை அடையளாம் என்பதும் இத்துறைமுகத்திற்கான மற்றுமொரு சிறப்பாகும். கி.பி 1360 இல் மதுரை சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் இத்துறைமுகச் சிறப்பும், வளமும் குன்றத் தொடங்கியது என நொபொரு கராசிமா அவர்கள் குறிப்பிடுவது இங்குச் சுட்டுதல் தகும்.
    தற்பொழுது பெரியபட்டினம் கடற்கரையிலிருந்து மேற்கே சற்றுத்தொலைவில் அமைந்திருந்தாலும் கடலுக்கும் ஊருக்கும் இடையே ‘கப்பலாறு ஊரணி’ என்ற பெரிய, நீண்ட குளம் ஒன்று காணப்படுகிறது. கப்பலாறு - ஊரணி ஒரு காலத்தில் கப்பல்கள் கடலுக்குள் செல்ல பயன்படுத்தப்பட்ட கால்வாயாக அல்லது வாயிலாக (அல்லது வழியாக) கடலுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் புலப்படுத்துகிறது. மேலும், இத்தகைய பயன்பாடில் தொடர்ந்து இது இருந்ததால் தான் இன்றைக்கும் கப்பலாறு என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது. தற்பொழுது கப்பலாறு கடலுக்குச் சம்மந்தம் இல்லாதது போல் காணப்பட்டாலும், மன்னார் வளைகுடாவில் பெரியபட்டினம் பகுதியில் முத்துக் குளிப்பதைப் பற்றி மார்க்கோ போலோ குறிப்பிடும் போது, முத்துக் குளிக்கச் செல்லும் படகுகள் முதலில் பத்தலாறு என்னும் இடத்தில் ஒன்று கூடுவதாகச் சுட்டுவது இக்கப்பலாற்றைத்தான் என்பதில் ஐயமில்லை. திருப்புல்லாணி கோயிலில் காணப்படும் கம்பணனின் கல்வெட்டு இப்பகுதி விஜயநகர ஆட்சியின்கீழ் இருந்ததையும், அப்பொழுது செட்டி, கைக்கோளர் போன்ற வாணிபம் சார்புடைய பிரிவினர் இங்கு செயல்பட்டதையும் காட்டுவதிலிருந்து விஜயநகர ஆட்சிக் காலத்திலும் இத்துறைமுகப் பகுதி சுறுசுறுப்பான வாணிபப் போக்கை தன்னகத்தே பெற்றிருந்தது என்பதை அறிய முடிகிறது. பின்னர், கி.பி. 16 ஆம் நூற்றாண்டுவாக்கில் இவ்வூர் டச்சுக்காரர்களின் வசமானதை இப்பகுதியில் கிடைக்கக்கூடிய அவர்களது நாணயங்களின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், டச்சுக்காரர்களுக்கும் நாயக்கர், சேதுபதி மன்னர்களுக்கும் இடையே முத்துக்குளித்தலில் ஏற்பட்ட உரிமைப் போட்டியின் விளைவாக இத்துறைமுக நகரம் தன் சிறப்பான செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டது எனலாம்.

    அகழாய்வுச் சிறப்பு:

    பெரியபட்டினத்தின் மேற்குப் பக்கத்தில் ஊரிருக்கைப் பகுதிக்கு அருகாமையில் 25 எக்டேர் பரப்பளவு கொண்ட நத்தமேடு, அங்கிருந்து மேற்கு 1 கி.மீ தொலைவில் 40 எக்டேர் பரப்பளவு கொண்ட கழிமங்கண்டு என இரண்டு பழங்கால மக்கள் வாழ்ந்த பகுதிகளாகக் கணிக்கப்பட்ட இடங்களின் ஏழு மாதிரி அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. அவற்றில் மூன்று அகழாய்வுக் குழிகள் 3 மீ ஆழம் வரை பண்பாட்டு நிலைகளை வெளிப்படுத்தின. மேற்சுட்டிய மூன்று குழிகளிலுமே சீன மண்கலங்கள் கிடைத்துள்ளன. மேலும், சீனக்காசு, சோழர், பாண்டியர் நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில செம்பு காசுகளில் பாண்டிய மன்னர்களின் பட்டப் பெயர்களான புவனேகவீரன், சமரகோலாகலன், கச்சி வழங்கிய பெருமாள் போன்றவை காணப்படுகின்றன. இவை யாவும் கி.பி 13-14 ஆம் நூற்றாண்டுக்குரிய காசுகளாகும். மதுரை சுல்தான்களின் நாணயங்களும் கிடைத்துள்ளன. மேற்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட சில பொன் நாணயங்கள் இராமநாதபுரம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு அகழாய்வுக் குழியில் கன்னி மண் (virgin soil) காணப்பட்ட இயற்கைத் தளத்தில் மூன்று சிறிய வட்ட வடிவிலான கிணறுகள் காணப்பட்டன. இவை குதிரைகளுக்குத் தண்ணீர் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டவை எனப் பொதுவாக ஆய்வாளர்களால் கருதப்படுவதால் இத்துறைமுகத்தில் குதிரை இறக்குமதி பெருமளவில் நடைபெற்றிருப்பதாகக் கொள்ளலாம்.
    அகழாய்வில் கிடைத்த சீன மண்கலச் சில்லுகளை ஆய்வு செய்த நொபரு கராசிமா அவர்கள் இவை கி.பி 13 -14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், சீனாவிலிருந்து பெரியபட்டினத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளதோடு தமிழக இடைக்கால வரலாற்றிற்குப் பெரியபட்டினம் அகழாய்வுக் கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது எனவும் குறிப்பிடுகிறார். பெரியபட்டினத்திலிருந்து முத்து, துணி ஆகியன மிகுதியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டத்தை கி.பி 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனமொழிக் குறிப்பான தாங் பாவோ குறிப்பிடுகிறது. (Rocktill, w.w, Toung Pal, Leiden, 1914). இவ் அகழாய்வு கி.பி 11-14 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திற்கும் சீனாவிற்கும் இடையே இருந்த நெருக்கமான வணிக உறவை வெளிப்படுத்தியுள்ளதாகக் கருதலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:40:07(இந்திய நேரம்)